Tuesday, January 17, 2012

எட்றா வண்டியே - வா.மு.கோ.மு

கொங்கு குறும்பு என்பது வா.மு.கோ.முவின் கதைகளில் தவிர வேறு எங்கும் அதிகமாக பார்க்க முடியாது. எவ்வளவு சீரியஸான சம்பவம் என்றாலும்   ஜஸ்ட் லைக் தட் என்று நம்மை அந்த இடத்தை சிரித்து கொண்டே கடந்துவிடுவது போல செய்துவிடுவார். இவரின் கதைகள் வரும் முக்கியமான கதாபாத்திரம் போலதான் இவரும் பேசுகிறார், நாலு முறை போனிலும் ஒரு முறை நேரிலும் பேசி இருக்கிறேன் அவருடன் இன்னும் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று நினைக்க வைத்துவிட்டார். வயப்பாடி, விஜயமங்கலம் மற்றும் அதை சுற்றிய  ஊர்கள் எப்படி இருக்கிறது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நேரில் எப்படி இருப்பார்கள் அவர்களை பார்க்க வேண்டும்  என்கிற ஆவலை துண்டிவிட்டுவிட்டார்.  





இவரது முந்தைய நாவல்களை போல இந்த நாவலையும் தனது ஊரை சுற்றி  வாழ்ந்துகொண்டு இருக்கும் சிலரில் வாழ்கையை மைய்யமாக வைத்து எழுதி இருக்கிறார். நாவலின் தொடக்கம் முடிவு எல்லாம் விஜயமங்கலத்தை சுற்றி தான் இருக்கிறது. என்னை போல கோவையை பிரிந்து வாழும் ஆட்களுக்கு கொங்கு மொழியில் அதன் சாரம் குறையாமல் புத்தகத்தை வாசிக்க வாசிக்க கோவையை ரொம்ப மிஸ் செய்கிறேனோ என்கிற கவலை ஏற்படுகிறது.

சாமிநாதன் ஒரு தலித் இளைஞன். அம்மாவை பிரிந்து வாழும் அப்பாவுடன் மூங்கில் பாளையத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். தறி ஓட்டுவது தான் பிரதான வேலை என்றாலும் ஒரு சமயம் ட்ரக்டரும் ஒட்டுவான். சாமிநாதன் அப்பா, கவுண்டர் சகோதரர்கள், சைக்கிள் கடை வைத்திருக்கும் முருகன், எதிர் வீடு சரோஜா அக்கா, அவன் வாழ்வில் குறிக்கிட்ட பெண்கள், அவனாக தேடி சென்ற பெண்கள், அவனை விட்டு பிரிந்து சென்ற பெண்கள் என்று அவனது காதல், கல்யாண கதைகளை சொல்லும் நாவல் இது.


நாவல் உள்ளே பன்னிரண்டு அத்தியாயங்கள் இருக்கிறது, சாமிநாதனை சுற்றியே தான் கதைகள் நகர்கிறது. விசுக்கென்று ஒரு காதல் ஜோடி ஒரு அத்தியாயத்தை ஆக்கிரமித்து கொண்டாலும் அதிலும் சாமிநாதன் சம்பந்தப்படுகிறான். முந்தைய நாவல்கள் போல இந்த நாவலை அவ்வளவு எளிதாக படித்து முடிக்க முடியவில்லை. பாதி புத்தகம் படிக்கும் வரை அரைச்ச மாவையே ஏன் திரும்ப அரைக்கிறார் என்கிற எண்ணம் வருகிறது. அதற்கு பின்னால் சாமிநாதனை நினைத்து கவலைகொள்ளும் விதமாக நாவல் சென்று கொண்டு இருக்கிறது.


நாவலில் முழுக்க முழுக்க தலித்து மக்களின் வாழ்கையை பற்றி சொல்லி இருக்கிறார். பணம் இல்லாதவனிடம் சிக்கன் குனியா வந்தால் எப்படி சமாளிப்பான்? தறி குடோனில் முதலாளி சாமிநாதனை அடிமையாக வேலை செய்ய வைக்க தந்திரமாக அட்வான்ஸ் பணம் கொடுப்பது. பெண் பார்க்க சென்ற வீட்டில் பெண்ணின் தகப்பனார் ஸ்வீட் சிக்கு வாசம் வருதா என்று கேட்ப்பது. தந்தையே மகனிடம் கவுண்டர் சரக்கு தந்தா வேண்டாம்ன்னு சொல்ல கூடாது அது குத்தம் என்று தண்ணி அடிக்க சொல்லுவது, வீட்டில் நுழைந்த பாம்பை வறுத்து தின்னுவது. இப்படி நாவல் கொஞ்சம் திகைப்போடு தான் செல்கிறது.


வா.மு.கோ.முவிற்கு செல்போன் மீது அப்படி என்ன ஒரு காதலோ அல்லது கோபமோ சாமிநாதன் கதாபாத்திரத்துக்கு இணையாக உடன் பயணிப்பது இந்த செல்போன் தான். யாரவது ஒருத்தர் இந்த செல்போனில் பேசி கொண்டே இருகிறார்கள். அதும் ஏர்செல் தான் எல்லோரிடமும் இருக்கிறது. இந்த நாவல் என்றில்லை முந்தைய நாவல் சாந்தாமணி நாவலிலும் செல்போன் வைத்து பெரிய கதையையே சொல்லி இருப்பார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் எவ்வளவு அவசியமானது என்று எல்லோருக்கும் தெரியும் அதை நாவலின் உள்ளே புகுத்தி அதையும் ஒரு கதாபாத்திரமாக செய்துவிட்டார்.

கள்ளி, சாந்தாமணியில் இருந்த  பாலியல் வேட்டை(வேட்கை) இதில் இல்லை. எள்ளல், துள்ளல் அதிகமில்லாமல் அடக்கியே வாசித்து இருக்கிறார். மற்ற நாவல்களை விட இந்த நாவல் கொஞ்சம் வித்தியாசம் தான். நாவல் முடிந்ததும் சாமிநாதன் பற்றிய கவலை தான் என்னை தொற்றிகொண்டது.


நாவலை படித்துவிட்டு வா.மு.கோ.முவிடம் பேசினேன். நாவல் எப்படி என்னை கொண்டு சென்றது, சாமிநாதன் என்ன ஆனான் என்று நிறைய கேள்விகள் கேட்டு பதிலையும் பெற்றேன். வா.மு.கோ.மு வருத்தப்பட்ட ஒரு விஷயம் இந்த நாவலை இவ்வளவு நேர்த்தியாக கொண்டு வர பாடுபட்ட நஞ்சுண்டன் பெயரை மனுஷபுத்திரன் மறைத்தது. நாவல் வெளிவருவதற்கு முன்பே அவர் நான்கு ஐந்து தடவை  நஞ்சுண்டன் பெயரை புத்தகத்தில் பதிய சொல்லி இருந்தும் அதை செய்யாதது பற்றி ரொம்ப வருத்தப்பட்டார். 


எட்றா வண்டியே - சங்கடபடாமல்  வாங்கி படிக்கலாம் :) 




-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

3 comments:

  1. விரைவில் வாங்குகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  2. SUPER BOSS,
    REALLY INTRESTING FLOW OF WRITING

    ReplyDelete
  3. பாதி முடிச்சிட்டேன் தல.

    வழக்கம் போல அவரது பாணி நாவல் தான் என்றாலும், ”ஏன்றா லாதாங்கிறதால கையில சூடு வச்சு பேரௌ எழுதிட்டே, இதே அவ பேரு சொர்ண சும்புலட்சுமின்னு இருந்தா தோள்பட்டையிலிருந்து குத்திகுவியாக்கும் என்ற இடத்தில் கிராம நகைச்சுவையின் தனித்தனம் தெரிகிறது!.

    விஜயமங்களத்திற்குள் செல்லாமல் ரிங் ரோடு வழியாக லாரிகள் சென்று விடுவதால் பாதிக்கப்படும் சராசரி வாழ்கையை பற்றிய தகவலும் கண் முன் காட்சி தெரிகிறது!

    ReplyDelete