Thursday, May 26, 2011

ஒரு வேண்டுதலின் பயணத்தில் - 1

கல்யாணம் முடிந்து முன்று ஆண்டுகள் முடிய போகிறது என்றாலும் இப்பொழுது தான் முதல் தடவையாக மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள முடிந்தது. மகா ஜூனியருக்காக வேண்டிகொண்ட  ஒரு வேண்டுதலை நிறைவேற்ற சென்றோம். ஜூனியர் பிறப்பதற்கு முன்பே கரும்பு தொட்டில் எடுப்பதாக  மகா வேண்டி கொண்டாள், இந்த விஷயம் போன மாதம் தான் எனக்கு தெரியவந்தது.  சரி கடமையை ஆற்றுவோம் என்று போன திங்கட்கிழமை காலை குடும்பத்துடன் கரூர் வந்தடைந்தேன்.  இரவு ரயில் பயணத்தில் மூவருக்குமே சரியான தூக்கம் இல்லை.  எங்கள் அருகில் ரயில் ஏதாவது கடந்து செல்லும் போது ஏற்படும் பேரிரைச்சலால் ஜூனியர் அடிகடி தூக்கம் கலைந்து புரண்டு புரண்டு படுத்து கொண்டு இருந்தான். 

குழந்தைகளை ரயில் அல்லது பேருந்தில் வெகுதூரம் அழைத்து செல்வதில் சில அசொகரியங்கள் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர்களை ஒரு வித பயத்துடனே கையாளவேண்டி இருக்கிறது. போகிற இடத்தில ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயம். மகாக்கு என்மேல் கொஞ்சம் கோவம், அவளை நான் எங்கும் அழைத்து செல்வதில்லை என்று, உண்மையில் எனக்கு ஜூனியர் நினைத்து தான் பயம்.  ஒரு சமயம் மேல்மலையனூரில்  ஒரு கல்யாணத்துக்கு சென்றோம் எல்லாம் நல்லபடியாக முடிந்து திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு செல்ல பேருந்தில் ஏறினோம், வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்தில் அழ ஆரமித்தவன் தான் ரொம்ப நேரம் அழுது கொண்டே வந்தான், எவ்வளவு சமாதானம் செய்தாலும் அவன் அழுகையை நிறுத்தவேவில்லை. பேருந்தின் உள்ளே இருந்தவர்கள் எல்லாம் எங்களையே பார்த்து கொண்டு இருந்தார்கள், பேருந்தில் கடைசில் இருக்கையில் இருந்த ஒரு வயதான பெரியம்மா குழந்தைக்கு உரம் விழுந்து இருக்கு என்று சொல்லி அவன் உடம்பெல்லாம் நீவி விட்டார். இருந்தும் அவன் அழுகை நிறுத்தவே இல்லை, வண்டி செங்கல்பட்டு தாண்டி சிங்கபெருமாள் கோயில் வந்தபோது லக்கேஜ் எல்லாம் எடுத்து கொண்டு ஆஸ்பிட்டல்  செல்ல இறங்கிட்டோம். பேருந்தில் இருந்த எல்லோரும் எங்களை பாவமாக பார்த்து கொண்டு இருந்தார்கள். இந்த நேரத்தில் ஜூனியரின் அழுகை ஒய்ந்து இருந்தது என்றாலும் சின்னதாக ஒரு விசும்பல் மட்டும் வந்து கொண்டு இருந்தது.  அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காண்பித்தோம். அவர் அவன் உடம்பில் கை வைத்து பார்த்த போது பொக்கை வாய் மலர சிரிக்கிறான்!!!! எனக்கு அடக்க முடியாத கோவம் ஒரு பக்கம் இவன் சிரிப்பை பார்த்து சந்தோஷம்  ஒரு பக்கம்.  டாக்டரும் எங்களுடன் சேர்ந்து சிரித்தார்... தனக்கு இது தான் என்று சொல்ல தெரியாத இந்த வயதில் அவனை கஷ்டபடுத்தி நாங்களுக்கு கஷ்டப்பட விரும்பவில்லை. இந்த ஒரு சம்பவத்துக்கு பிறகு வெளியூர் என்றால் ஒன்று கரூர் அல்லது கோவை என்று எங்கள் எல்லையை நாங்களே முடிவு செய்துவிட்டோம்.  

திங்கள் காலை கரூர் வந்தவுடன் தெரிந்த முதல் செய்தி காலை 6 முதல் 9 மணி வரை மின்வெட்டு. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைத்த எனது நினைப்பில் விழுந்தது வெட்டு. காலை 8 மணிக்கே வியர்வையால் உடல்   நனைத்தது. நேரம் ஏற ஏற வெயில் உச்சம் அதிகமாகி கொண்டு இருந்தது, ரோட்டில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டு இருந்தது. வீட்டில் இருக்க பிடிக்காமல் கடைவீதி செல்ல கிளம்பினோம். ஜவகர் பஜார் முழுக்க கடைகள் நிரம்பி இருந்தது, வீட்டுக்கு முன்னால், கடைகளுக்கு முன்னால் ஒரு சிறு வியாபாரி திருவிழாகான ஸ்பெஷல் தற்காலிக கடை விரித்து இருந்தார்.  இவ்வாறு வீடு , கடைகளுக்கு முன்னால் இருக்கும் தற்காலிக கடைகளுக்கு அந்த கடை அல்லது விட்டின் முதலாளி இவர்களிடம்  வாடகையை வசூலித்து கொள்கிறார். மின்சாரம் வேண்டும் என்றாலும் அவர்களே தருகிறார்கள் அதற்கு தனி கட்டணம். பிளாஸ்டிக் சாமான்கள், பீங்கா பொருட்கள், வீட்டுக்கு தேவையான சின்ன சின்ன பொருட்கள், விளையாட்டு பொருட்கள்,  ஒரு இடத்தில உலக்கை!!! விற்றுக்கொண்டு இருந்தார்கள்.  சாலை ஓரத்தில் எங்கும் ப்ளெக்ஸ் போர்டுகள் இளைய தளபதி , புரட்சி தளபதி, சின்ன தளபதி அட ஷக்திக்கு கூட ஒரு ரசிகர் மன்றம் இருக்கு , எல்லோரும் சொல்லி வைத்தது போல மாரியம்மன் பண்டிகைக்கு வரவேற்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த அந்த ரசிகர்மன்ற தலைவருக்கு வயது இருபத்தைந்து கூட இருக்காது. சிலர் இப்போது தான் ஒட்டு போட்டு இருப்பார்கள் ஒரு இடத்தில பக்தகோடிகளை வரவேற்றது  ப்ளே பாய்ஸ் குழுவினர் :)))  . 

கேமராவில் கிளிக்கிய பல படங்கள்  :-). 






ஜூனியருக்கு ஒரு விளையாட்டு சாமான் வாங்கி குடுத்தேன், வீட்டுக்கு வந்து சேர்ந்த ஐந்தாவது நிமிடம் பட் என்று ஒரு சத்தம் கேட்டது அந்த சாமான் இரண்டு பாகமாக இருந்தது :(. உடைத்ததில் அவனுக்கு அவ்வளவு சந்தோசம், எனது துக்கத்தை மறந்து நானும் அவனுடன் சிரித்தேன்.  சாயந்திரம்  ஆற்றுக்கு  போகலாம் என்று கிளம்பினோம், இங்கே ஆறு என்று சொல்லப்படுவது அமராவதி ஆற்றை,  எனக்கு தெரிந்து பலகாலம் அங்கு தண்ணீர் இருந்தது இல்லை. பாலைவனத்தில் ஏதோ கொஞ்சம் தண்ணி இருப்பதை போல ஆங் ஆங்கே சிறு சிறு குட்டை இருக்கும் அதும் அந்த தண்ணீர் இன்ன கலர்  என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு கலரில் இருக்கும். நிறைய மக்கள் காலைக்கடனை முடிப்பதற்கு இங்கே தான் வருவார்கள். இங்கு இருந்து தான் மாரியம்மன் கோவில் கம்பம் எடுத்து செல்வார்கள் அதனால் எல்லா நேர்த்திகடனும் இங்கே இருந்து தான் ஆரம்பம் ஆகும், தீ சட்டி ஏந்துதல், கரும்பு தொட்டில் தூக்குதல், அங்கப்ரத்சணம் செய்தல், அழகு குத்தி வருதல், குழந்தைக்கு கரும்புள்ளி குத்தி அழைத்து வருதல் என்று அவர்கள் வேண்டுதல் ஆரமிக்கும் இடம். 


ஆற்றின்(?) கரையோரம் நிறைய இடம் காலியாக இருந்ததால் அங்கேயே சாகச விளையாட்டுகள் அமைந்து இருந்தது, எதிலாவது ஏறலாம் என்று நினைத்து இருந்த வேளையில் ஜூனியர் எனது தோலில் சாய்ந்து அப்படியே தூங்கிவிட்டான். கொஞ்ச நேரம் சுற்றி பார்த்துவிட்டு அங்கு இருந்து கிளம்பினோம். இரண்டு இளைஞர்கள் பச்சை கலர் சுடிதார் பெண்ணை கூட்டத்தில் தொலைத்து விட்டு அவளை தேடி கொண்டு இருந்தார்கள். சிரித்து கொண்டே அங்கு இருந்து நகர்தேன். கையில் ஒரு வித ஒலிப்பான் ஒன்றை வைத்து கொண்டு ஒரு கும்பல் எங்களை கடந்து சென்றது. 

கரூர் டெக்ஸ்டைல்க்கு பிரபலமான ஒரு ஊர், அங்கு அட்டையினால் செய்யப்பட்ட நூல் கோன்கள் எல்லா இடத்திலும் கிடைக்கும். இந்த நூல் கோன்களை வைத்து சிலர் காசு பார்த்து கொண்டு இருந்தார்கள். நான் மேலே சொன்ன ஒலிப்பான் என்கிற கருவி இதில் செய்வதுதான்,



ஒரு நூல் கோன், ஒரு பலூன், ஒரு சிறிய பிளாஸ்டிகால் ஊதும் வசதி கொண்ட ஒரு பொருள் மற்றும் சில ஜிகினா பேப்பர்கள். அதை ஊதும் போது எழும் சத்தம் என்பது கழுதை அடிவயிற்றில் இருந்து கத்துவது போல இருக்கும். அவ்வளவு கர்ண கொடூரமான ஒலியை இது வரை நான் கேட்டது இல்லை :(. சிலர் அதை பெண்கள் காது அருகில் சென்று ஊதி அவர்களை ஓட செய்தார்கள். தாவணி போட்ட பெண்கள் அதிகமாக பார்த்தது இன்னும் அந்த உடைக்கு இருக்கும் மதிப்பு குறையவில்லை என்று நினைக்க தோன்றியது.  வீட்டுக்கு வந்து பிறகு தான் நியாபகம் வந்தது, கரும்பு வாங்க வேண்டும் என்று. திரும்ப மகாவை அழைத்து கொண்டு கரும்பு வாங்க சென்றேன், ஆறு கரும்பு கொண்ட ஒரு கட்டு 70 ரூபாய்க்கு வாங்கினேன். நாளை கரும்பு தொட்டில் தூக்கிய பிறகு இந்த கரும்புக்கு வேலையில்லை என்பதால் பாதி விலைக்கு நீங்களே எடுத்துகோங்க என்று கடைக்காரரிடம் பேரம் பேசினேன். எனது பின் மண்டையில் ஒரு அடி விழுந்தது சுற்றி இருக்கும் ஆட்களை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் மகாவின் கைகரியம் அது !!! மானத்தை வாங்கதீங்க என்று அட்வைஸ் வேறு. கடைக்காரன் என்னை பார்த்து சிரித்தான், நானும் சிரித்து வைத்தேன்.. வாழ்கையில் இது எல்லாம் சகஜம் பா ..................................






--
With Love
அருண் மொழித்தேவன் @ Romeo ;)

Saturday, May 14, 2011

சங்கதிகள் - மே 14 2011

அரசியல்


ஐயா ஆட்சி முடிந்து அம்மா ஆட்சி வந்துவிட்டது. ஆதிமுக ஆட்களே கண்டிப்பாக இவ்வளவு இடங்களை ஜெயிப்பார்கள் என்று நினைத்திருக்க மாட்டார்கள், மக்களின் இந்த மாற்றத்தை நினைக்கையில் கொஞ்சம் பிரம்மிப்பாக இருக்கிறது.மின்வெட்டு தான் முக்கிய பிரச்சனையான தென்மாவட்டம் முழுக்க சொல்லப்படுகிறது. மின்வெட்டு ஆதிமுக ஆட்சி காலத்தில் இருந்து ஆரமித்தது என்றாலும் திமுக ஆட்சியில் அதை சரி செய்ய நிறைய திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஆனால் அவை எல்லாம் 2012   ஆண்டுதான் செயல்பட போக போகிறது. அவ்வாறு செயல்படும் போது தமிழக மக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கபடும். இதையே அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு ஆதிமுக தங்கள் ஆட்சியில் தான் மின்வெட்டு இல்லை என்று ஒரு சாதனையாக சொல்லிகொள்ளும். அதாவது வெண்ணை தின்னுறவன் ஒருத்தன் விரல் சுப்புறவன் ஒருத்தன் :). ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக தோற்றத்தை விட ஆதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெயித்ததை தான் நம்பவே முடியவில்லை.



கொஞ்ச நாளாகவே டல் அடித்து கொண்டு இருந்து அண்ணன் பிசினஸ் நேற்றில் இருந்து சூடு பிடிக்க ஆரமித்துள்ளது. அம்மா தாயே என்கிற வசனங்களை தாங்கிய டிஜிட்டல் பேனர் அடிக்க நிறைய ஆர்டர் வந்துள்ளதாம் .



சுயபுராணம்

Google Buzzல கொஞ்ச நாள் டிராவல் பண்ணியதில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். ஒரு கேள்வி அல்லது நமது எண்ணத்தை சொல்லிவிட்டால் அதற்கு உடனுக்குடன் மற்றவகளிடம் இருந்து பதில் கிடைத்து விடுகிறது. அரட்டை அடிக்க ரொம்ப வசதியாக இருக்கிறது அதனாலயோ என்னவோ அதில் என்னை அறியாமலே அடிக்ட் ஆகிவிட்டேன் :(. ஆபீஸ் வந்தால் மெயில் செக் பண்றேனோ இல்லையோ Buzz அப்டேட் பார்த்து கொண்டே இருக்கிறேன். கொஞ்ச நாள் நன்றாக தான் இருந்தது ஏதோ ஒரு யோசனையில் மேனேஜருக்கு அனுப்ப வேண்டிய மெயில் காபி பண்ணி Buzzல பேஸ்ட் பண்ண போயிட்டேன். அடங்கொன்னியா அப்போ தான் மண்டையில உரைச்சுது, வேலை பார்க்கிறதே கொஞ்ச நேரம் தான் அதையும் உருப்படியா பண்ணாம இப்படி இருக்கிறது நினைச்சா வருத்தமா இருக்கு. அதனால கொஞ்ச நாள் அடக்கியே வாசிக்கலாம் என்று முடிவு பண்ணிட்டேன்..  



சென்னையில் அடிக்கும் வெயிலை சமாளிக்கவே முடியல. அதும் நைட் ஷிபிட் போயிட்டு வந்தா பகலில் தூங்கவே முடியல. ஜூனியர் பகலில் ஒரு மணி நேரம் தூங்குறதே பெரிய விஷயமா ஆகிடுச்சு. நான் தான் இந்த மாதிரி புலம்புறேன்னு பார்த்தா எனக்கு மேல இருக்கான் என்னோட நண்பன். அவனுக்கு மார்க்கெட்டிங் வேலை காலைல ஆபீஸ் போனா கொஞ்ச நேரமே அங்கு இருக்க முடியுதாம். மேனேஜர் வந்த உடன் அவரிடம் பேசிவிட்டு உடனே அங்கு இருந்து கிளம்பவேண்டியது தான். வெயிலில் ரொம்ப அவஸ்தைப்படுவதாக சொல்லி வருத்தப்பட்டான். ரெண்டு நாளைக்கு முன்னால போன் பண்ணினான், வெயிலின் கொடுமையில் இருந்து காக்க ஒரு வாரம் ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டு கொடைக்கானல் போயிட்டான்  அங்க அவன் மாமா வீடு இருக்காம், வெயிலில் இருந்து எஸ்கேப் ஆனதும் ஆச்சு மாமா மகளை சைட் அடிச்சதும் ஆச்சாம்...  நல்லா இரு மச்சி ..



படம்



கோ படம் பார்த்தேன், நல்ல ஒரு பொலிடிக்கல் த்ரில்லர், கே.வி.ஆனந்ததின் முந்தைய படமான அயன் படம் போலவே இருக்கு. லாஜிக் இல்லாமல் படம் பாக்கலாம்.



தெலுங்கில் வேதம் படத்தை ஏற்கனவே பார்த்ததால் தமிழ் வானம் படம் எனக்கு அவ்வளவாக ஈர்க்கவில்லை. மற்றபடி வானம் படத்தை முதல் முதலாக பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.  நோ மணி பாட்டில் சிம்புவும் அனுஷ்காவும் செம ஆட்டம் போட்டு இருக்காங்க. ரொம்பவே அந்த டான்ஸ் ரசிச்சேன்.










வாழ்த்துக்கள் 


பதிவர் ரகுராம் அவர்களுக்கு நாளைக்கு திருமணம், தம்பதிகள் அம்மா கொடுக்கும் இலவசங்களை கொண்டு அன்போடு வாழ வாழ்த்துகிறேன்.

பதிவர் பெஸ்கி அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அவருக்கு  வாழ்த்துக்கள் .

பெண் பஸ்ஸர் ஒருவருக்கு அடுத்த வாரம் கல்யாணம். அவருக்கும் வாழ்த்துக்கள்.


பிடித்த பாடல்


யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து இருக்கும் அவன் இவன் படத்தில் இடம் பெற்று இருக்கும் ஒரு மலையோரம் நன்றாக இருக்கிறது. அதும் அந்த குட்டி பெண் டூயட் பாடியதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல. அவ்வளவு அருமையா இருக்கு..




காதல் டு கல்யாணம் படத்தில் இடம் பெற்று இருக்கும் தேடி வருவேன் அட்டகாசமான ராக்.. அதும் எலெக்ட்ரிக் கிட்டார் வைத்து செம ஆட்டம் போட்டு இருக்கார் யுவன்.





ட்ரைலர்



 Bandi Saroj kumar போர்க்களம் படம் முலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்தின் கன்செப்ட், ஷாட் எல்லாம் செம கிளாஸா இருக்கும். முக்கியமா கருப்பு கலரை அதிகமா யூஸ் பண்ணி இருப்பார். அவரின் அடுத்த படைப்பான அஸ்தமனம் படத்தில் ட்ரைலர் பார்த்ததும் கொஞ்சம் அல்ல நிறையவே எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கு. இதிலும் விதவிதமான ஷாட் அப்பறம் கருப்பு கலர்.. படம் கண்டிப்பா வித்தியாசமாக இருக்கும் என்று நம்புவோம்.








பிடித்த கவிதை

சௌந்தர் அவர்களின் பஸ்ஸில் பார்த்த இந்த கவிதை நன்றாக இருக்கிறது. இங்கேயும் நான் ஏன் பிளாஷ்பேக் கிளப்பணும் கவிதை படித்து பாருங்கள் நீங்கள் கூட ஒரு பிளாஷ்பேக் ஓட்டலாம்.


வழியோராம் உனைப் பார்த்து..
என் விழியோரம் உனைத் தேக்கி...
மீண்டும் மீண்டும் செல்கிறேன்...
உனை சந்தித்த தெரு முனைக்கு...
நீ இல்லாமல் போனாலும்...
காதாலால் எனை நிரப்ப...






--
With Love
Romeo ;)