Saturday, August 20, 2011

சங்கதிகள்: 20 -ஆகஸ்ட்- 2011


எழுத்தாளர்கள்

வா.மு.கோ.முவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பத்து பதினைந்து நிமிடங்கள் பேசி இருப்போம் சிரித்து சிரித்து வயறு வலி வந்துவிட்டது. ஒரு எழுத்தாளன் என்கிற மிதப்பு எதுவும் இல்லை. நெருங்கிய நண்பனிடம் பேசியதை போல பேசிக்கொண்டு இருந்தார், சாரை மாறியாக ஜோக் வந்துகொண்டு இருந்தது. தற்போதைய நிலைமையை கூட வெகு இயல்பாக ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்டார். நான் கள்ளியை வெகுவாக ரசித்ததையும் அதே அளவு  சாந்தாமணியை வெறுப்பதாகவும் சொன்னேன். சாந்தாமணி நாவலை பற்றி அவரது எண்ணத்தையும் அந்த புத்தகம் எதற்காக எழுதியது என்றும் விளக்கினார். ஆனந்த விகடனுக்கும்  உயிர்மைக்கு எப்படி சிறுகதை  எழுதணும் என்று சொன்னாரே அந்த நிமிடத்தில் நான் சிரித்த சிரிப்புக்கு ஆபீஸ் இருந்தவர்கள் என்னை ஒரு மாதரியாக பார்த்தார்கள். வருட இறுதியில் அவரது இரண்டு நாவல்கள் உயிர்மை வெளியிட இருப்பதாக சொன்னார் அது எவ்வளவு தூரம் உண்மையோ தெரியவில்லை. 

இதற்கு பிள்ளையார்சுழி போட்ட மயில்ராவணன்னுக்கு நன்றி :)

வா.மு.கோ.முவிடம் ஷாராஜ் நம்பர் பெற்று அடுத்த நாள் அவரிடம் பேசினேன். இவரும் ரொம்ப இயல்பாகவே பேசினார், 2004ஆம் ஆண்டு வெளிவந்த இந்த தொகுப்பை பற்றி இப்போது பேசியதில் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார். தற்சமயம் ஓவியத்தில் மட்டுமே கவனத்தை நிலைநிறுத்து கொண்டுள்ளதால் சிறுகதைகள் அவ்வளவாக எழுதுவதில்லை என்றார். இந்த வருட கடைசியில் அவரது ஓவியங்கள் கோவையில் கண்காட்சி வைக்க உள்ளதாகவும் அடுத்த வருடம் தொடக்கத்தில் சென்னையில் அவரது கண்காட்சி வைக்க எண்ணியுள்ளதாக சொன்னார்.  அவரின் வேறு ஒரு தொகுப்பு இந்த வருடம் வரலாம் என்று சொல்லி இருக்கிறார்.
 
வெட்டுபுலி நாவல் பற்றிய கலந்துரையாடலுக்கு சென்றதில் புத்தகத்தின் ஆசிரியர் வாராதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. கலந்துரையாடலில் பேசியவர்கள் அவர் அவர்கள் பார்வையில் புத்தகத்தை பற்றி பேசினார்கள் குறிப்புக்கள் இல்லாமல் நாவலை பற்றி பேச முடியாது என்று பேசியவர்களுக்கு தெரிந்து இருந்தது,  அண்ணன் அப்துல்லா அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லையென்றாலும் கடைசியில் பேசினார். அன்று இரவு தமிழ்மகன் அவர்களிடம் முகபுத்தகத்தில் பேசிக்கொண்டு இருந்த போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத அளவு தனக்கு வேலைபளு இருந்ததாகவும் வராததுக்கு வருந்தினார். தனது அடுத்த நாவலான ஆண்பால் , பெண்பால் பற்றி கொஞ்சம் சொன்னார். அவரின் போன் நம்பர் வாங்கி வைத்துள்ளேன் பேசவேண்டும். 

விடை தெரியா கேள்விகள்  
 
 இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து ஆபீஸ்க்கு செல்ல மின்சார ரயிலில் ஏற சென்றேன். எனக்கு முன்னால் ஒருவர் இடது கையில் ஒரு வருடம் கூட ஆகாது ஒரு குழந்தையும்  வலது கையில் ஒரு ட்ராவல் பேக்  தூக்கி சென்றார். ரயிலில் ஏற இருந்த அவசரத்தில் அவரை சரியாக பார்க்கவில்லை, அவரை கடந்து செல்லும் போது வேறு ஒருவர் அந்த நபரை ரயிலின்  உள்ளே செல்ல உதவி செய்தார், அப்பொழுதுதான் தெரிந்தது  அவருக்கு பார்வையில்லை என்று.  ஏதோ மனதுக்குள் உறுத்தி கொண்டு இருந்தது, அவர் எங்கே போகிறார்?? ஊருக்கா அல்லது சென்னையிலே இருக்கும் அவர் வீட்டுக்கா?? எங்கு இருந்து வருகிறார் ?? அந்த குழந்தையை எப்படி அழைத்து வந்தார்? உடன் குழந்தையின் அம்மா இல்லையே குழந்தை அழுதால் என்ன செய்வார்?? அந்த குழந்தையை படிக்க வைக்க என்ன செய்வார் ?? இப்படி எத்தனையோ கேள்விகள் வந்து கொண்டே இருந்தது அடுத்த நிறுத்தம் வரைக்கும். கோட்டை நிறுத்தத்தில் ஒரு ஹிந்திகாரர்  நான் இருந்த பெட்டியில் ஏறினார், நான்கு நாட்கள் சாப்பிடாதவன் போல ஆள் பார்ப்பதற்கே ரொம்ப நொந்து போயிருந்தார். சென்ட்ரல் வந்தால் சொல்லுங்கள் நான் ஒரிசா போகவேண்டும் என்றார், சாப்பிட ஏதாவது இருக்குமா என்றார் பர்சில் இருந்தது இருபது ருபாய் பத்து ரூபாயை அவரிடம் கொடுத்தேன். இப்போது  நானும் அவரும் பொருளாதார ரீதியில் ஒன்றாக இருந்தோம், பூங்கா நிலையத்தில் அவர் இறங்குவதற்குள் என்னுள் அடுத்த கேள்விகள் வர ஆரமித்துவிட்டது. பத்து ரூபாயை வைத்து கொண்டு எப்படி அவர் ஒரிசா போக போகிறார்?? அதுவரை பசிக்காத அவருக்கு?? ட்ரெயின் டிக்கெட் எடுப்பார??   என்கிற கேள்விகள் வந்து கொண்டு இருந்தது. பூங்கா நிறுத்தத்தில் அவர் இறங்கும் போது எனக்கு ஒரு சலாம் வைத்து விட்டு சென்றார். ஐந்து நிமிடத்தில் இரண்டு நபர்கள் என்னுள் எழுப்பிய கேள்விகள் எத்தனை எத்தனை !!! விடைகள் தான் கிடைக்கவில்லை. 



அன்னா ஹசாரே

சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுத்தான் என்கிற பழமொழிக்கு ஏற்ற ஆள் யோகா மாஸ்டர் ராம்தேவ், அதே போல இப்போ அன்னா ஹசாரே. அவரை சுற்றியே இங்கிலீஷ் சேனல் எல்லாம் மொய்த்து கொண்டு இருந்தது, திகார் ஜெயிலின் வாசலிலே பழியாக கிடந்த அந்த சேனல் கேமராவை பார்த்து பார்த்து  டென்ஷன் ஆனது தான் மிச்சம். நாடு முழுவதும் லாரி ஸ்ட்ரைக் சொன்னாங்களே அதை பற்றி  ஏதாவது தெரிஞ்சிக்கலாம்ன்னு நானும் IBN, Timesnow, NDTV, Headlines சேனல் மாத்தி மாத்தி பார்க்கிறேன் அன்னா பற்றிய நியூஸ் தானே இருக்கு ஒழிய வேற ஒண்ணுத்தையும் காணோம். நல்ல வேலை சன், ராஜ், ஜெயா, கலைஞர் சேனல் எல்லாம் இதுக்கு அவ்வளவா முக்கியத்துவம் தராம முக்கிய செய்தியுடனே முடிச்சிகிட்டாங்க. கலைஞர் கைது போதோ இல்லைனா ஜெயலலிதா கைது போதோ நமக்கு கண்டிப்பா தமிழ் சேனலில் இந்த சோதனை வரும்.


பத்திரிக்கை

இந்த வாரத்து ஆனந்த விகடனுடன் சுகாவின் முங்கில் முச்சு பகுதி நிறைவு பெற்றது. தொடர் ஆரமித்தது முதல் ஒவ்வொரு வாரமும் முதலில் படிப்பது இவரின் கட்டுரையை தான்.  தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை  கோர்த்தது  தான் இந்த தொடர் என்றாலும், சுகாவை விட குஞ்சு தான் இந்த தொடரின் நாயகன்.  குஞ்சுவை கடைசி வரை காட்டாமல் மறைத்துவிட்டது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. சுகாவை பிரிகிறோம் என்று நினைக்கும் போது அவரை போல இப்போது ராஜுமுருகன் என்கிறவர் சில பக்கங்களை நிரப்ப ஆரமித்துள்ளார். சுகாவை போலவே சுவாரசியமாக எழுதுகிறார், அனஸ்தீஸ்யா குடுக்க பெற்ற பெண்களின் நிலைமையை சொல்லி பெண்கள் எப்படி எப்போதெல்லாம் ஆண்களை வசைபாடுவார்கள் என்று சில சம்பவங்களை முன்னிறுத்தியது நன்றாகவும் கொஞ்சம் கிலியையும் கிளப்பிவிட்டுவிட்டார். முடியும் தருவாயில் வரும் (போட்டு வாங்குவோம்) அடுத்த தொடக்கத்துக்கு ஏற்ற முடிவு.


குமுதம் புத்தகம் வாங்கினேன், ஏதோ சுயமுன்னேற்ற புத்தகத்தை வாங்கியது போல ஒரு பீலிங், பீச் ஸ்டேஷனில் படிக்க ஆரமித்து சேத்துபட்டில் முடிந்து விட்டது.. 10 நிமிடங்களுக்கு மேல் எப்படி புரட்டினாலும் பப்பரப்பேஎஎ எ எ எ எ எ எ தான் ..  


திருவொற்றியூர் காமெடிகள் 

திருவொற்றியூர் பகுதியில் திடிர் திடிர் என்று சில போஸ்டர்கள் கண்ணில் பட்டு சிரிப்பை வரவழைக்கும், கொஞ்ச நாட்களாக தேமுதிக ஆட்கள் அதை குத்தகைக்கு எடுத்கிட்டாங்க.  தலைவர் விசயகாந்துக்கு இந்த மாதம் 25 ஆம் தேதி பிறந்தநாள் வருது அதுக்காக ஆகஸ்ட் ஒண்ணாம் தேதில இருந்து எங்க பார்த்தாலும் விசயகாந்த்தை  வாழ்த்தி நிறைய டிஜிட்டல் போர்டுகள். பலமாக காத்து அடிச்சா கண்டிப்பா அதுக்கு பக்கத்துல இருக்கிறவன் மண்டையை பதம் பார்க்காமவிடாது. வள்ளலே, நல்லவரே, வல்லவரே,, அந்த வரே இந்த வரேன்னு உடன்பிறப்புகளையும், ரத்தத்தின் ரத்தத்தையும் ஓவர்டேக் பண்ணி வாழ்த்தோ வாழ்த்துன்னு வாழ்த்தி இருக்காங்க.. இதுக்கெல்லாம் நாங்க அசரமாடோம்ன்னு ஒரு ரத்தத்தின் ரத்தம் முதல்வரை போற்றி அடிச்ச   போஸ்டர்ல கொட்டை எழுத்தில் பிரிண்ட் பண்ணி இருந்துச்சு எங்கள் நாடி துடிப்பே.     
 
வடசென்னை பகுதி என்றாலே ஷேர் ஆட்டோகளுக்கு தனியா ஒரு பாதையை உருவாகணும் போல. எங்க எல்லாம் டிராபிக் ஆகுதோம் அதுக்கு முக்கால் வாசி காரணம் ஷேர் ஆட்டோவாகத்தான் இருக்கும். போன வாரத்தில் ஒரு நாள் சாயந்திரம் தேரடியை தாண்டி செல்ல பதினைந்து நிமிடங்கள் ஆனது. தேரடியில் இருந்து திருவொற்றியூர் மார்க்கெட் வரை நீண்ட வருசையில் எல்லா வானகனங்களும் காத்து கொண்டு இருப்பது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த பகுதியில் இருக்கும் சில ஆக்கிரமிப்புகளை அகற்றமுடியாமல் நகராட்சி திணறி கொண்டு இருக்கிறது. எப்போதுதான் விடிவுகாலம் பிறக்குமோ இந்த தொல்லைகளுக்கெல்லாம். 


 
பாடல் 

ஏதோ ஒரு பத்திரிகைல பவதாரணி குடுத்த பேட்டியில் தனது குடும்பத்தார் இசையில் மட்டுமே பாடுவேன் என்றார், சமிபகாலமாக அவரின் குரலை அதிகமாக  கேட்டதாக நியாபகமில்லை. கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் பாடல்கள் கேட்கும் போது  இது பவதாரணி குரல் தானே ஆச்சரியம்.. உசர திருடி போறா ஒருத்தி  என்று துடங்கும் அந்த பாடல் நன்றாக இருக்கிறது. 








வேலைவாய்பு செய்திகள் 


Development
- .Net (2-13 Yrs)
- Java (2- 6 Yrs)

Quality Assurance

- Manual Testing (4-8 Yrs)
- Automation Testing (3-5 Yrs)
- Silk Testing specialists (2-5 Yrs)
- QA Manager

Product Management
- Product Manager -
Datawarehousing

Others

-SQL DBA (5-12 Yrs)
-System Admin (5-8 Yrs)
-DB2 Database Development & Admin(2-5 Yrs)



ரெஸ்யூம்   அனுப்ப வேண்டிய முகவரி : romeoboy.81@gmail.com




--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)



Wednesday, August 10, 2011

அம்மிச்சி

அப்பாவின் அப்பாவை அப்பாரு என்றும், அம்மாவை ஆத்தா என்றும், அது போல  அம்மாவின் அப்பாவை அப்புச்சி என்றும் அம்மாவை அம்மிச்சி என்று அழைக்க வேண்டும் என்பது எங்கள் உறவு முறையின் வழக்கம். எங்கள் வீட்டில் இது உல்டா, அப்பாவின் அம்மாவை நாங்கள் அம்மிச்சி என்று அழைத்தே வந்துள்ளோம். இதற்கு ரவி மாமா தான் காரணம் என்று அம்மா சொல்லுவார். ரவி மாமா அப்பாவின் தங்கை மகன் எனக்கு மாமா முறை, அவர் அம்மிச்சி என்று அழைத்தது எங்களுக்கு எல்லாம் எப்போது தொற்றிகொண்டது என்று தெரியவில்லை. ஆத்தா எப்போது அம்மிச்சி ஆனார் என்று தெரியாத வயதில் இருந்தே நாங்கள் அம்மிச்சி என்று தான் அழைத்து வந்துள்ளோம்

அம்மிச்சியின் கடந்த கால நினைவுகள் பற்றி அப்பா அம்மா அத்தை வாயிலாக தெரிந்து கொண்டேன். அம்மிச்சி வாழ்ந்தது காரமடையில், அவரின் அப்பா பெரும் செல்வந்தர். அம்மிச்சி அப்பாருக்கு இரண்டாவது மனைவி. அவரின் முதல் மனைவியின் முலம் குழந்தை பிறக்காததால் இவரை இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டார். அம்மிச்சி கல்யாணம் ஆகி வரும் போது தங்கம், வைரம் , வெள்ளி வீட்டுக்கு தேவையான சாமான் என்று அப்பாருடன் கோவையில்  இருக்கும் விளாங்குறிச்சி என்கிற கிராமத்துக்கு  வந்தார். அப்பாரு எப்போதும் கவலையில்லாமல் வாழ்ந்தவர், சீட்டு விளையாடவே நேரம் அவருக்கு சரியாக இருக்குமாம். 

அம்மிச்சி கல்யாணம் செய்து கொண்டு வந்தாலும் பன்னிரண்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்துள்ளார், யாரோ ஒருவர் சொன்ன யோசனையில் வள்ளலார் சன்னதிக்கு சென்ற பிறகு முதல் குழந்தை பிறந்தது,  அதனால் முதல் குழந்தையான எனது அப்பாவிற்கு ராமலிங்கம் என்று பெயர் வைத்தார்கள். அப்பாவிற்கு பிறகு இரண்டு பெண் , இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுள்ளார். அம்மிச்சி வீடு நிர்வாகத்தை கவனித்து கொண்டு இருந்தார், அப்பாரு எப்பொழுதும் போல சீட்டு விளையாடி கொண்டு  இருந்தாராம், அப்பாரு வாழ்ந்த வீட்டை அவர் பெயருடன் சாதியின் பெயருடன் சேர்த்து முக்கு வீடு என்று தான் அழைப்பார்கள், கொங்கு நாட்டின் இது ஒரு வழக்காகவே அப்பொழுது இருந்துள்ளது.   

அப்பாரின் இந்த உதாரிதனத்தால் வீட்டில் இருந்த பொன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே சென்று கொண்டு இருந்தது. அம்மிச்சி எவ்வளவு தான் காப்பாற்ற நினைத்தாலும் அப்பாரு எதையும் விட்டுவைக்காமல் சீட்டாட்டத்தில் தொலைத்து கொண்டு இருந்தாராம். ஒரு நாள் எல்லாம் போன பிறகு வாழ்ந்த வீட்டையும் தொலைத்தார், அப்பாவிற்கு  அப்போது வாலிப வயது கூட நெருங்கவில்லை. அந்த வீடு அப்பரின் கையை விட்டு சென்ற அன்று அம்மிச்சி எப்படி அழுதார்,, எப்படி எல்லாம் அந்த வீட்டை வாங்கியவனை சாபம்கொடுதார் என்று அத்தை வேதனையுடன் சொல்லுவார்.

அப்பா அம்மா இருவரும் வேலைக்கு சென்றபிறகு எங்களை பார்த்துகொண்டது அம்மிச்சிதான், என்னால் முடிந்தமட்டும் அவருடன் வாழ்ந்த பழைய நினைவுகளை கிளறி பார்க்கிறேன் சட்டென எதுவும் நினைவுக்கு வரவில்லை. இது எனக்குள் இருக்கும் ஒரு குறைபாடு, எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு எளிதாக நினைவில் என்னால் வைத்து கொள்ளமுடியாது. 

என்ன காரணம் என்று தெரியவில்லை அம்மிச்சிக்கும் அம்மாவுக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒத்துவரவில்லை. சில நாட்கள் அம்மிச்சி எங்கள் அருகில் இல்லாமல் இருந்ததுண்டு. சித்தப்பாக்கள் இருவரும் அருகில் இருந்தாலும் அம்மிச்சி ஒரு குடிசை வீட்டில் தனியாக வாழ்ந்து கொண்டு இருந்தார். இப்போது நாங்கள் புதியதாக கட்டி குடிவந்து இருக்கும் இடத்தில தான் அம்மிச்சி தனியாக சில காலங்கள் வாழ்ந்தார். ஒரு முரணான விஷயம் அதே காலகட்டத்தில் அம்மாவின் அம்மா பதினைந்துக்கும் அதிகமான ஒண்டு குடித்தனம் வீடுகளை வாடகைக்கு விட்டு சுகமாக வாழ்ந்து கொண்டு இருந்தார். எனக்கு தெரிந்து  அப்பா அம்மிச்சியை தினமும் சந்தித்து கொண்டு இருந்தார். வீட்டில் இருந்து அவருக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு செல்வார். அம்மிச்சிக்கு சப்பாத்தி என்றால் ரொம்ப பிடிக்கும். பல் போன பிறகு கூட அந்த பொக்கைவாயில் சப்பாத்தி மென்றதை நான் பார்த்து இருக்கிறேன். 

இப்போதும் அப்பா மற்றும் சித்தப்பாக்கள் மீது இது தான் எனக்கு வருத்தம், அம்மிச்சி இருந்த வீட்டுக்கு அருகில் தான் முவரும் குடி இருந்தார்கள் தவிர யாரும் அவரை அருகில் வைத்து பார்த்துக்க முன்வரவில்லை. எதனால் என்று இப்போது ஓரளவுக்கு யூகிக்க முடிந்தாலும் அவரை தனியாக சில காலங்கள் விட்டுவைததை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. 

அவர் தனியாக வாழ்ந்த காலத்தில் தான் எனக்கு இந்த கருப்பட்டி காபியின் சுவை தெரிந்தது. அம்மிச்சி பால் ஊற்றி எனக்கு காபி போட்டு கொடுத்தது இல்லை, எப்போது அங்கு சென்றாலும் வற காபிதான் கிடைக்கும், அதும் நரசுஸ் காபி தூள் பாகெட் சின்னதை தான் பார்ப்பேன். உடன் ஒரு பிஸ்கட் வாங்கிக்க சொல்லி ஒரு ருபாய் கொடுப்பார். மஞ்சள் நிறத்தில் சற்றே வட்டமும் இல்லாமல் நட்சத்திரம் வடிவிலும் இல்லாமல் நடுவில் சாந்து போல சிவப்பு கலரில் ஒரு பொட்டு இருக்கும்.  காபி ஒரு கப்பில் இருக்கிறது என்றால் இன்னொரு கையில் இந்த பிஸ்கட் இருக்கும், இரண்டும் வேறு வேறு சுவை இருந்தாலும் கொஞ்சம் காபி கொஞ்சம் பிஸ்கட் என்று சாப்பிடவும், குடிக்கவும் பிடிக்கும். நாங்கள் குடியிருந்த இடத்துக்கு அருகிலே  அவர் வசித்தது எனக்கு இந்த வகையில் நன்றாக உதவியது. கிரவுண்டில் விளையாடி கொண்டு இருப்பேன் காபி குடிக்கவேண்டும் என்று தோன்றினால் உடனே மதில் சுவர் ஏறி குதித்து அம்மிச்சி வீட்டுக்கு சென்றுவிடுவேன்.



ஒரு முறை அப்பா அம்மா இருவரும் ஊருக்கு சென்று இருந்த சமயத்தில் எங்களை பார்த்துக்கொள்ள அம்மிச்சி வீட்டுக்கு வந்திருந்தார். அன்று சந்திர கிரகணம் சாயங்காலம் ஏழு மணிக்கே நாங்க சாப்பிட வேண்டும் என்று பச்சை பருப்பை கடைந்து  கொடுத்தார். அம்மிச்சிக்கு பாசி பருப்பு கடைந்து வைப்பது என்பது கைவந்த கலை, அவரின் குழந்தைகள் முதல் எங்கள் தலைமுறை வரைக்கும் அவரின் பாசிபருப்பு கடைந்து வைத்ததை சாப்பிடாமல் இருந்தது இல்லை.

பருவ வயது வருகிற போது நாம் பெரியோர்களை மதிப்பதே இல்லை, வீட்டில் இருப்பவர்கள் ஆயினும் சரி, வெளியே இருபவராயினும் சரி நமக்கு தான் எல்லாம் தெரியும் என்கிற மிதப்பில் இருப்போம். நான் மட்டும் அதற்கு விதிவில்லகா என்ன ? அம்மிச்சிக்கு  வயது ஆகா ஆகா கண்கள் சரியாக தெரியவில்லை என்று சொல்லி கொண்டு இருந்தார், நான் எப்போது அங்கு சென்றாலும் எனது கைகளை தடவி தடவி கொடுக்கும் அந்த கை பிறகு மற்றவர் உதவிக்காக ஏங்கியது. அம்மிச்சியின் கைகளில் பச்சை குத்தி இருப்பார் தோல் சுருங்கி அந்த பச்சை நிறத்து படங்கள் எல்லாம் என்ன படம் என்று சொல்ல முடியாத வர்ணமும், ஓவியமுமாக இருக்கும்.  நாள் ஆக ஆக அவரை பார்க்க தவிர்த்தேன், எப்போது சென்றாலும் எதையாவது சொல்லி குறைபட்டு கொண்டே இருக்கிறாரே என்கிற எரிச்சல், எப்போதும் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கும். வெளிப்புறத்தில் இருந்து அவர் அணித்து இருக்கும் கண்ணாடியை பார்த்தால் அவரின் இரண்டு கண்களும் பெரிது பெரிதாக இருக்கும். அந்த கண்ணாடி மோசமான நிலையில் இருக்கும்.  அம்மிச்சியை அந்த வீட்டில் நான் பார்க்கிற சமயங்களில் எல்லாம் வெளியே ஒரு  வயர்  சேரில் உட்கார்ந்து கொண்டு இருப்பார். ஒரு முறை சென்றிருந்து  போது  கீழே தடுக்கி விழுந்து முகம் எல்லாம் காயத்துடன் இருந்தார். பார்க்கவே ரொம்ப பரிதாபமாக இருந்ததும் அன்று இதை போல சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பிவிட்டேன்.
 
அம்மிசியால் மற்றவர் துணையின்றி எதுவும் செய்யமுடியாது என்கிற நிலை வந்தபோது தான் அவர் எனது சித்தப்பா வீட்டிற்க்கு வந்தார், இரண்டு சித்தப்பா வீட்டிலும் கொஞ்ச நாட்கள் இருந்தார்.  கல்லூரியில்  படித்து கொண்டு இருந்த போது ஒரு  முறை அம்மிச்சியை பார்க்க சித்தப்பா வீட்டிற்கு சென்றிருந்தேன், எப்போதும் போல் வீட்டுக்கு வெளியே அதே வயர் சேரில் அமர்ந்து கொண்டு ஏதோ யோசனையில் இருந்தார், கடந்த கால நினைவாக இருக்கலாம், சொந்தங்கள் சூழ்ந்து இருந்தும் அவர்கள் நம்மை தனிமையில் விட்டுவிட்டால்  அது  எவ்வளவு கொடுமையானது என்று எனக்கு பத்து வருடங்களுக்கு மும்பே தெரிந்துயிருந்தது, அவரோ எல்லாற்றையும் பார்த்தவர் பழைய  நினைவுகள் எப்படி எல்லாம் அவரை புரட்டி போட்டு இருக்கும் ?? அம்மிச்சி என்று குரல் கொடுத்தேன், நான் தான் என்று தெரிந்துகொண்டவர் எப்போதும் போல எனது கைகளை பற்றி கொண்டு என்னை பற்றி விசாரித்து கொண்டு எப்பொழுதும் போல அழுது கொண்டு இருந்தார்.. இப்போதும் இந்த செயல் எனக்கு எரிச்சல் தந்தது, ஏதேதோ சொல்லி அங்கு இருந்து கிளம்பிவிட்டேன்.. அது தான் அம்மிச்சியை நான் பார்த்தது கடைசியாக.... எங்கள் சந்திப்பு ஒரு மோசமான ஒரு சந்திப்பாக ஆனதை இன்று நினைத்தால் எவ்வளவு மோசமான ஒருவனாக நான் இருந்து இருக்கிறேன் என்று இப்போது தெரிகிறது. அம்மிச்சியை ஏன் அவ்வாறு நான் மதிக்காமல் சென்றேன் என்று இப்போதும் தெரியவில்லை.

 ஒரு நாள் காலையில் அப்பா போன் செய்திருந்தார், அம்மிச்சி திரும்ப கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்து விட்டது என்றார். ஆபரேஷன் செய்ய அவர் உடல்நிலை ஒத்துழைக்காத அந்த நேரத்தில் அவரை புத்தூருக்கு அழைத்து சென்றுள்ளர்கள். இந்த சம்பவத்துக்கு  பிறகு இரண்டொரு நாளில் அம்மிச்சி உடல்நிலை மோசமாக இருக்கிறது என்கிற செய்தி வந்தது. அக்கா, மாமா என்று ஊரில் இருந்த எல்லா உறவுகளும் சென்னைக்கு கிளம்பியது எனக்கு எக்ஸாம் இருந்ததால் என்னால் சென்னைக்கு செல்ல  முடியாமல் போய்விட்டது. அடுத்த நாள் அம்மிச்சி இறந்துவிட்டார் என்று அப்பா போனில் சொன்னார். அம்மிச்சியின் இறுதி சடங்குக்கு கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இதில் ஒரு கொடுமை அந்த தேர்வில் நான் தேர்ச்சி அடையவில்லை என்பது. 

ஆடி அம்மாவசை அன்று முன்னோர்களுக்கு திதி குடுக்கலாம் என்று தெரியும். இது வரை அதை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேனே தவிர வேறு ஒன்றும் நினைவுக்கு வந்தது இல்லை. இப்போது அடுத்த வருடம் கண்டிப்பாக அம்மிச்சிக்கு திதி  கொடுக்கவேண்டும் என்று நினைத்துள்ளேன்.  

அம்மிச்சி வாழ்ந்த வீடு விளாங்குறிச்சியில் இப்போதும்  இருக்கிறது அவ்வபோது அந்த வீட்டுக்கு உள்ளே செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் உள்ளே சுற்றி சுற்றி பார்ப்பேன், இது எங்கள் பூர்வீக வீடு என்கிற மிதப்பு அடிகடி வரும், அந்த வீட்டில் குடியிருக்கும் மனிதர்களை நான் நேசித்ததே இல்லை, அவர்களிடம் வெளியே சிரித்து பேசிக்கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் செயலில் காட்ட முடியாத கோபம்  இன்றும் இருக்கிறது. ஒரு நாள் கூட உறங்காத அந்த வீட்டை பற்றி எனக்கு இருக்கும் சந்தோசம் கர்வம் கோவத்தை விட  அப்பா சித்தப்பாவிற்கு எவ்வளவோ  இருக்கும். சென்ற வருடம்  செம்மொழி மாநாடுக்காக ரோட்டை அகலப்படுத்த அந்த வீட்டை பாதி அளவு இடித்துவிட்டார்கள், கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் ஏனோ அதன் சுவடு மாறியதில்  நிம்மதி. இடித்து கட்டியதில் அந்த வீட்டை கண்டுபிடிக்க சிரிது நேரம் ஆனதில் தெரிந்தது அந்த வீடு எப்போதும் எங்களுக்கு சொந்தமில்லை என்று.

இந்த நினைவுகள் எல்லாம் நான் ஏன் புரட்டி பார்க்கவேண்டும் ???

"ழ" காபே தான்  காரணம், பதிவர்கள் சந்திப்பில் குடித்த அந்த கருப்பட்டி காபி தான் அம்மிச்சி பற்றிய நினைவுகளை கிளறிவிட்டது.



--
With Love
அருண் மொழித்தேவன் ;)