Friday, December 23, 2011

ராஜபாட்டை

சியான் விக்ரம் நடிப்பில், சுசிந்தரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம். பதிவுலகம் வந்தபிறகு எந்த ஒரு படத்தையும் விமர்சனம் படித்த பிறகு தான் தியேட்டர் பக்கமே போவது என்றாகி போன இந்த நாட்களில். Indiaglitz என்கிற வலைத்தளம் நடத்திய ஒரு போட்டியில் வெற்றி பெற்று முதல் நாள் முதல் காட்சியை காணும் வாய்ப்பு கிடைத்தது. 
படத்தின் கதை 

விக்ரம் ஒரு ஸ்டான்ட் ஆர்டிஸ்ட். ஒரு நாள் விஸ்வநாதன் அவர்களை கொலை செய்ய முயன்ற ஒரு கும்பலிடம் இருந்து அவரை காப்பாற்றுகிறார். தனது மகன் தான் தன்னை கொலை செய்ய பார்ப்பதாகவும். தனது மனைவி நினைவாக நடத்தப்பட்டு வரும் ஆசிரமத்தை தான் எம்எல்ஏ ஆவதற்கு தேவை என்கிற காரணத்தால் தான் கொலை செய்ய ஆள் அனுப்பி இருப்பதாக சொல்கிறார். அவரை தான் தங்கி இருக்கும் மேன்ஷனில் வைத்து பார்த்து கொள்கிறார் விக்ரம். அப்பறம் என்ன ஆச்சு என்பதை மீதி வெள்ளி திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும் (அது உங்கள் விருப்பம்)


படம் ஆரமிக்கும் போதே நிலத்தை அடித்து பிடுங்கும் கும்பலை காண்பித்து  இது தான் கதை களம் என்று முதலில் சொல்லிவிடுகிறார். படம் முழுக்க அதன் பின்னணியில் தான் செல்கிறது. ஆனால் நிலம் எப்படி அபகரிகிறது என்பதையும்  ரெஜிஸ்டர் ஆபிஸ் உள்ளே நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எதுவும் சொல்லாமல் அடிதடியில் எழுதி வாங்குவதை மட்டும் சொல்லி இருகிறார்கள். 

விக்ரம் நடித்ததில் மரண மொக்கையான படம் பீமா. அதன் அடுத்த பார்ட் என்று இதை சொல்லலாம். பாடியை ஏற்றி ஜிம் பாயாக வருகிறார். உடம்பை முருகேன்று ஏற்றி வைத்துள்ளார். கண்களில் தெரியும் சுருக்கம் அவருக்கு  வயது ஏறி கொண்டு இருப்பதை பளிச்சென்று காட்டுகிறது. முடியில் அடிகடி கலரிங் செய்து கொண்டே இருக்கிறார். கண்கள் கூசும் விதத்தில் டிரஸ் போடுகிறார், அதே போல கலர் கலராக ஷு. ஒரே பாடலுக்கு வித விதமாக மேக்-அப் போட்டு டான்ஸ் ஆடுகிறார். CBI அதிகாரிகள் போல பல வேடத்தில் வந்து நன்றாக நடித்து இருக்கிறார். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை இருபது நபர்களை பந்தாடுகிறார்.  நன்றாக சண்டை போடுகிறார் தனது வேலையை கச்சிதமாக செய்து விட்டார்.ஸ்டைலாக சவால் விட்டு  இடைவேளை விடும் இடம் சூப்பர். ஹீரோயின் தீக் ஷா பார்கிறார், பேசுகிறார், நடக்கிறார், சிரிக்கிறார் கடைசியில் அவர் இருந்ததையே நாம் மறந்துவிடும் அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். இந்த மாதிரியா மாஸ் படங்களில் ஹீரோயின் லெவலை இதற்கு மேல் எதிர்பார்க்க கூடாது தான்.  நேரில் சந்தித்தேன் செக்க செவப்பாக இருக்கிறார்.   விஸ்வநாதன் அவர்களை இப்படி காமெடி பீஸ் ஆகி நாறடித்து  விட்டார்கள். காமெடி என்கிற பெயரில் நடக்கும் மொக்கையை ஓரளவிற்கு மேல் சகித்து கொண்டு இருக்க முடியவில்லை. யுவனின் பின்னணி நன்றாக இருக்கிறது பாடல்கள் தான் மனதில் ஒட்டவில்லை. சண்டை காட்சிகள் நன்றாக இருக்கிறது அதற்காக இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி ஒரே அடியில் மண்ணை கவ்வுவது காட்டுவார்களோ. 

  
கதையை வேறு ஒருவர் எழுத, வசனத்தை பாஸ்கர் சக்தி எழுத, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் சுசிந்தரன். தமிழ் சினிமாவில் சுசிந்தரன் அவர்களுக்கு  நல்ல பெயர் இருக்கிறது, அதை முன்று படங்களில் தக்கவைத்து கொண்டவர் இதில் கோட்டை விட்டுவிட்டார். முதல் பாதியில் விஸ்வநாதன் அவர்களை வைத்து காமெடி செய்கிறேன் என்று மரண மொக்கையை போட்டுவிட்டார், இரண்டாம் பாதியில் படத்தை முடிக்கவேண்டிய அவசரத்தில் கதையை நகர்த்தி கொண்டு செல்கிறார். என்ன படம் முடிஞ்சதா என்று ஒருகணம்  நம்மையே சந்தேகிக்க வைத்து விடுகிறார். அக்கா என்கிற கதாபாத்திரம் அடுத்த சொர்ணலதா மாதிரி கொண்டு வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் அடக்கி வாசிக்கிறேன் என்று அந்த கதாபாத்திரத்தை புஸ் ஆகியது தான் மிச்சம். ஆனா அந்த அக்கா நச்சென்று இருக்கிறார். ரீமாசென் & ஸ்ரேயா ஆடிய லட்டு லட்டு பாட்டு கடைசியில் வந்ததால் இருவரின் தரிசனத்தை சரியாக காண முடியவில்லை. இன்றைய சந்திப்பில் விக்ரம் வேற அதை தனது போல்ட் வாய்சில் லட்டு  லட்டு  என்று  அடிகடி பாடி காமித்தார். ஸ்ஸ்ஸ் முடியல சியான்.  

ஒரு விஷயத்துக்காக சுசிந்தரனை பாராட்டியே தீரவேண்டும். வாப்பா என்கிறவர் தற்கொலை(கொலை). நிஜத்தில் நடந்ததை படத்தில் கொண்டு வந்துள்ளார். இன்று அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது, இந்த ஷாட் வைக்க எப்படி தில் வந்தது என்று கேட்டேன். அந்த ஷாட் வைத்ததில் தனக்கு எந்த சங்கடமும் பயமும் இல்லை என்றார். 
ராஜபாட்டை- மரண மொக்கை 
-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Tuesday, December 20, 2011

சங்கதிகள் 20 டிசம்பர் 2011

புத்தகம் 

தற்போதைய ஹாட் டாபிக் எக்ஸைல் நாவலை படித்து விட்டீர்களா என்பது தான். நித்யானந்தாவால் ஒரு நட்பை நானே முடித்து கொண்டேன் என்பதற்காக மிகவும் வருந்திய தருணம் இது . இந்த நாவல் படித்து முடித்து எனது மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை (நித்தி ஒழிக). பழைய சாருவின்  காடுரைகளை படித்து இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த நாவலை படித்தால் சாரு பேக் டு தி பார்ம் என்று சொல்லும் அளவிற்கு அட்டகாசமான நாவல். முதலில் நாவலை முதல் பக்கத்தில் ஆரமித்து கடைசி பக்கம் வரை படித்தால் தான் உங்களுக்கு நாவல் புரியும், அது ரசனை என்று கூட சொல்லலாம். அடுத்த முறை நாவலை நீங்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும் படிக்க ஆரமிக்கலாம் சுவாரஸ்யத்துக்கு குறைச்சல் இல்லாமல் செல்லும். நாவலை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுத வேண்டும். 
வரும் ஜனவரி 5 தேதி முதல் சென்னையில் புத்தக கண்காட்சி தொடங்கவுள்ளது. ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன் அங்கு செல்ல . வாங்க வேண்டிய புத்தகங்களை லிஸ்ட் எழுதி கொண்டு இருந்தேன். முக்கியமான சில புத்தகங்கள் என்கிற கணக்கில் 25 வந்துள்ளது, பட்ஜெட் பார்த்து கூட குறையலாம் ஏறலாம் :). 


பதிவு 

எல்லாவற்றுக்கும் ஒரு சுணக்கம் வந்து விட்டது. படிப்பதற்கு எழுதுவதற்கு எல்லாம்   சோம்பேறித்தனம் வந்துவிட்டது. எதையாவது கிறுக்க வேண்டும் என்கிற எண்ணமே போய்விட்டது. வாரத்துக்கு நான்கு ஐந்து பதிவுகள் எழுதும் பதிவர்களை பார்க்க பொறாமை தான் வருகிறது. இவர்கள் எப்படி எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. முடிந்த வரை பழையபடி எழுத நினைக்கிறேன் பார்க்கலாம்.  


பதிவுலகம் 


ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கும் ஈரோடு பதிவர்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. கதிர் அண்ணா பதிவை படித்த பிறகு குறுகிய காலத்தில் எவ்வளவு உழைப்பை தந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. அதே போல கதிர் அண்ணா அந்த பதிவை எவ்வளவு மகிழ்ச்சியாக பதிவு செய்தார் என்பதற்கு ஆங் ஆங்கே அட்டகாசமாக தெரியும் எழுத்து பிழைகள் சாட்சி.  முன்று வருடங்களாக நானும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கிறேன் ஏதாவது ஒரு வேலை வந்து அதை கெடுத்துவிடுகிறது.  சென்னையில் இதே போல ஒரு நிகழ்ச்சியை நடத்த முயற்சிகளை தொடங்கும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்கிறேன். 
பாடல்கள் 


முப்பொழுதும் உன் கற்பனைகள் - ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் வெளிவந்து இருக்கும் பாடல்கள் அத்தனையும் அருமையாக இருக்கிறது. முக்கியமாக முஹம்மத் இர்பான் பாடி இருக்கும் யார் அவள் யாரோ நச்சென்று இருக்கிறது அதும் பாடல் முடியும் தருவாயில் அவரின் ஹை பிட்ச் வாய்சில் ஏற்றி அதே சமயம் எலெக்ட்ரிகல் கிட்டார் உடன் பயணிக்கும் போது அட்டகாசமான ஒரு ப்யுஷன் போல இருக்கிறது .
மம்பட்டியான் படத்தில் வரும் சின்ன பொண்ணு பாடலும் நன்றாக இருக்கிறது. பழைய பாடலை ரீமிக்ஸ் செய்யாமல் அதே வடிவில் புதிய இசை கருவிகளால் இசையமைத்து அருமையாக வந்திருக்கும் பாடல். கேட்டவுடன் பிடித்ததில் இதுவும் ஒன்று.திருவொற்றியூர் அப்டேட்

வெகு நாட்களாக கிடப்பில் இருந்த சாலை விரிவாக்கம் ஒருவழியாக முடிவுக்கு வந்து இருக்கிறது. திருவொற்றியூர் மார்க்கெட் பகுதி முதல் ராஜா கடை பேருந்து நிறுத்தம் வரை சாலையை விரிவாக்கம் செய்ய எவ்வளவோ முயன்றும் அங்கு இருந்த கடைகளை இடிப்பதற்கு  நிறைய முட்டுகட்டைகள் வந்தது. கடைசியாக அந்த கடைகளை அகற்ற நஷ்டஈடு கொடுத்துள்ளர்கள். இந்த மாத இறுதிக்குள் கடைகளை எல்லாம் காலி செய்வதாக சொல்லி இருகிறார்கள். இந்த ஆட்சியில் திருவொற்றியூர் மக்களுக்கு கிடைத்த முதல் சந்தோஷமான செய்தி :).
மொக்கை விளம்பரம்

பத்து வருடங்களாக பார்த்து பார்த்து சலித்து,  ரீல் நைந்து போனா  LIC விளம்பரத்தை தூக்கி கடாசிவிட்டு வெகு நேர்த்தியாக மார்க்கெட்டிங் டீம் அட்டகாசமான விளம்பரங்களை கொடுக்க ஆரமித்துவிட்டன. இத்தனைக்கும் அது ஒரு அரசாங்க நிறுவனம். சாதாரண அப்பளத்துக்கு கூட எப்படி மார்கெடிங் செய்கிறார்கள் என்று இதயம் டாட்ஸ் விளம்பரங்களை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.சன்டிவியில் ஒளிபரப்பான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை பார்த்தவர்கள் லலிதா நகைக்கடையின் பெயரை மறந்து இருக்கமாட்டார்கள். கோடி கோடியாக பிசினஸ் செய்யும் இவர்களில் புதிய விளம்பரத்தை டிவியில் பார்க்கவே சகிக்கவில்லை.  இவ்வளவு மொக்கையான விளம்பரத்தை எப்படி ப்ரோமோட் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

விளம்பரத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.  
-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Thursday, November 17, 2011

The X- Factor

ஆங்கில மோகம் நம்மை சிறுவயதில் இருந்தே பிடித்து கொண்டு இருக்கிறது. ஆங்கில பாடம், ஆங்கில படம் என்று ஆங்கிலம் நம்மை அறியாமலே உள்ளே புகுந்து கொள்கிறது. கேபிள் டிவியின் புண்ணியத்தில் ஸ்டார் டிவியின் உபயத்தில் புரியாத வார்த்தைகளை கேட்டு கேட்டு ஓரளவுக்கு இப்போது புரிந்து கொள்ள முடிகிற சூழ்நிலையில் இருக்கிறேன். என்ன போலவே நிறைய பேர் இருப்பதால் இருக்கிறோம் என்று கூட படிக்கலாம். 

AXN தொலைக்காட்சி வந்த புதியதில் நிறைய படங்களை ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தார்கள். கொஞ்ச நாட்களில் அந்த தொலைகாட்சியை பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்போது சில மாதங்களாக எங்கள் ஏரியாவில் தெரிகிறது ஆனால் பழைய AXN இப்போது இல்லை. படங்கள் போடுவதே வாரத்துக்கு ஒன்றோ இரண்டோ தான் மற்றபடி அமெரிக்க, இங்கிலாந்த் நாட்டில் சக்கை போடு போட்டு கொண்டு இருந்த இருக்கும் நிகழ்ச்சியை தான் ஒளிபரப்பு செய்கிறார்கள்.  முடிந்து போன நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் போது அதன் வீடியோ YOUTUBE வெப்சைட்டில் முழுவதுமாக பார்த்து விடலாம். அதனால் அந்த நிகழ்ச்சியின் டெம்போ குறைந்து விடுகிறது, ஆனால் தற்சமயம் The X- Factor என்கிற நிகழ்ச்சியை அமெரிக்காவில் ஒளிபரப்பு ஆனா அடுத்த நாளே இங்கு பார்க்க முடிகிறதால் அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் போல தான் ஆனால் வயது வரம்பு கிடையாது. முதலில் நடத்தப்படும்  ஆடிஷனில் தேர்வாகும் நபர்களை அடுத்து Boot Campக்கு  செல்கிறார்கள். இதில் நான்கு பிரிவு பிரிக்கபடுகிறது, 

BOYS
GILRS
GROUPS
OVER 30'S

இதில் இருந்து எட்டு பேர் தேர்ந்துடுக்கப்பட்டு Judge House  செல்கிறார்கள் அதில் இருந்து ஒவ்வொரு பிரிவில் இருந்தும் நான்கு பேர் அடுத்து அடுத்து லைவ் ஷோ நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள். ஒவ்வொரு பிரிவுக்கும்  Mentor என்று ஒருவர் இருப்பார். அவர் இவர்களை வழிநடத்தி அடுத்த அடுத்த போட்டிகளுக்கு தயார்படுதுவார்.

முதல் நாள் போட்டியாளர்கள் லைவ் ஷோவில் தங்கள் திறமையை காட்ட அதற்கு பொதுமக்களிடம் இருந்து வரும் வாக்கு பொறுத்து அடுத்த கட்டத்துக்கு நகருவார்கள். வாரம் ஒருவர் வெளியேறி  கொண்டு இருப்பார்கள், சில வாரம் பழைய போட்டியாளர் ஒருவர் திடீர் என்று உள்ளே புகுந்து கொள்வார்.  இப்படியே  கடைசி போட்டியில் வெற்றிபெறும் நபருக்கு ஐந்து மில்லியன் மதிப்புள்ள ஆல்பம் தயாரிக்க வாய்ப்பு தரப்படும்.


நான்கு ஐந்து வருடங்களாக நடைபெற்று கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சி முதல் முறையாக தற்சமயம் அமெரிக்காவில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரமித்தது முதல் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. நிகழ்ச்சியில் முக்கியமானவர் SIMON என்கிறவர். இந்த நிகழ்ச்சியை பங்குபெற்றவர்கள், பார்த்தவர்கள், தோல்வியுற்றவர்கள் எல்லோர் பாராட்டும் சாபமும் பெற்ற நபர்.  தற்சமயம் இங்கிலாந்த் நாட்டிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது.   சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜட்ஜஸ் செய்யும் அழிச்சாட்டியம் போல இங்கே இல்லை. சுருதி சரியில்லை அது சரியில்லை இது சரியில்லை என்று லொட்டு லொசுக்கு வேலை எல்லாம் இவர்கள் செய்வது இல்லை. யார் இருக்கவேண்டும் யார் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்வது மக்களே.


அமெரிக்காவில் நடைபெற்று கொண்டு இருக்கும் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற  எதிர்பார்ப்பு நிறையவே  கிளம்பி உள்ளது . எனது யூகப்படி

Melanie Amaro 
 Josh Krajcik 
Rachel Crow
இவர்களின் யாரோ ஒருவர் வெற்றிபெறுவார் என்று நினைக்கிறேன்.

இங்கிலாந்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் எனது சாய்ஸ்


Craig Coltonகடைசியாக Lady Gaga பாடலான Paparazzi பாடி இருப்பார். அட்டகாசமாக இருக்கும்.

டைம் இருந்த யூடுப்பில் பாருங்கள் அட்டகாசமான குரல்வளம் உள்ளவர்களில் வீடியோ கிடக்கிறது.
--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Monday, November 7, 2011

சங்கதிகள் Nov 07 2011

வேலாயுதம் 

தமிழ் சினிமால இப்போ இருக்கிற ஹீரோஸ்ல காமெடி + ஆக்க்ஷன் ரஜினிக்கு பிறகு விஜய்தான் என்று சொல்ல வேண்டியது இல்லை. அதை அவர் சரியா உபயோகபடுத்தி கொள்ளவில்லை என்பது அடுத்து அடுத்து கொடுத்த அண்டர் ப்ளாப் படம் முலமா எல்லோரும் தெரிந்தவிஷயம். வேலாயுதம் படத்தை பற்றி பில்டப் நியூஸ் வந்துகொண்டு இருந்த போது ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்க்கு கட்டம் சரியில்லை என்றே நினைத்தேன், ஆனா இதை எல்லாம் பொய்யாகிடுச்சு படம். எவ்வளவு நாள் ஆச்சு விஜய்யை இப்படி ரசித்து பார்த்து. சின்ன குழந்தைகளுக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்று கேட்டால்  நிறைய குழந்தைகள் சொல்லும் பதில் விஜய்யாகத்தான் இருக்கும்.  

ஏழாம் அறிவுதான் முதலில் பார்க்கணும்ன்னு பிளான் பண்ணி இருந்தேன் ஆனா வந்த விமர்சனங்களில் வேலாயுதம் தான் நன்றாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்ல சரி அதையே பார்க்கலாம்ன்னு என்று பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது ரீமேக் புகழ் ராஜா படத்தை நல்லாவே எடுத்து இருக்காரு. முதல் பாதி படம் அட்டகாசம், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து செமையாக செதுக்கி இருக்காங்க. சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சு, முக்கியமா ட்ரெயின்ல சரண்யா செய்த சாப்பாட்டை விஜய் அண்ட் கோ  சாப்பிட தயங்கும்  இடம் சூப்பர்.  இரண்டாம் பாதி எப்பொழுதும் போல விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற படம். விஜய் படங்களில் ஹீரோயிக்கு முக்கியத்துவம் என்பது தலைவாழை இலையில் வைக்கப்படும் உப்பை போல (ஊறுகாயை அடிகடி யூஸ் பண்ண கூடாது). தயிர் சாதத்திற்கு முக்கால் வாசி இலைகளில் மட்டுமே அது உபயோகப்படும்,  மாஸ் ஹீரோ படத்தில் இது சகஜம் என்பதால் ஹன்சிகா மற்றும் ஜெனிலியாவை கணக்கில்  வரவு வைக்கவில்லை.  மொத்தத்தில் விஜய்க்கு நல்லதொரு பிரேக் கிடைத்துள்ளது. :)

 
ஏழாம் அறிவு    

ஓவர் பில்ட் அப்  கொடுத்த குசேலன் படமே ரஜினியையே கவுத்தி போட்டுவிட்டது  என்பது இன்னும் தமிழ் சினிமா ஆட்களுக்கு தெரியவில்லை போல. முருகதாஸ், ரவிகேசந்திரன், சூர்யா, உதயநிதி, ஹாரிஸ் ஜெயராஜ், ஸ்ருதி இப்படி எல்லாமே ஸ்டார்களாக இருந்தும் இப்படி மொக்கையை போட்டுடாங்களேன்னு சொல்லாம இருக்க முடியல.

கஜினியில் செய்த ஒரே தவறை இதிலும் செய்துள்ளார் முருகதாஸ். கஜினியில் போலீஸ் ஆபிசர்ராக வரும் ரியாஸ்கான் கதாபாத்திரம் எப்படி டம்மியானதோ அதே போல இதில் கொத்து கொத்தாக போலீஸ் ஆட்களை போட்டு தள்ளியும் அதை பற்றி யாரும் அக்கறை கொள்ளாமல் இருப்பது.  ஜஸ்ட் லைக் தட் என்று ஹிப்னாடிசம் முலமாக கொலை செய்யமுடியும் என்பதை முழுவதுமாக நம்பமுடியவில்லை. முருகதாஸ் எடுத்து கொண்ட  தீம் வித்தியாசமாக இருக்கிறது அதை கொடுத்த விதம் தான் சரியில்லை. படத்தின் ஹீரோ சூர்யா என்பதை விட வில்லனாக வந்து அசதி இருக்கும் ஜானியை சொல்லலாம். வசனம் எத்தனை லைன் என்று கேட்டால் விரல் விட்டு எண்ணி சொல்லிவிடுவார், உடல் மொழி முலம் நன்றாக நடித்துள்ளார்.இந்தியாவில் சென்னை தான் கிராபிக்ஸ் வேலை நன்றாக செய்கிறார்கள் என்று மற்றமாநில சினிமா கலைஞர்கள் சொல்லும் வேளையில் ராமநாராயணன் படத்தில் வருவதை போல கிராபிக்ஸ் பண்ணி இருப்பது நன்றாக இல்லை. ஹாரிஸ் ஜெயராஜின்  பின்னணி இசை ஏனோ தானோ என்று இருக்கிறது மனதில் எதுவும் ஒட்டவே இல்லை.திரைகதையை சுலபமாக யூகிக்க முடிகிறது என்பது பெரிய மைனஸ் பாயிண்ட். 

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டைரக்டர் சார். :)மழை வாங்கலையோ மழை 

சென்னையில் இப்படி விடாமல் மழை பெய்து கொண்டு இருப்பதை நான் இது வரை பார்த்ததே இல்லை.சிட்டி குள்ளே எல்லாம் தண்ணி சிற்றாறு போல ஓடி கொண்டு இருப்பதை பார்த்தால் கவலையாக இருக்கிறது. இதில் சோகமான செய்தி பாதாள சாக்கடையில் விழுந்து ஒரு பெண் ஆசிரியை பலியானது. எங்கள் பகுதிக்கு மேயர் வருகிறார் என்று ரோடில் இருந்த மண்ணை ஒதுக்கி தள்ளி கொண்டு இருந்தார்கள் துப்புரவு பணியாளர்கள். கடைசி வரை அவர் வரவேயில்லை. மா.சுப்பிரமணியன் இருந்திருந்தால் ஆள் களத்தில் குதித்து வேலையை முடுக்கிவிட்டு இருந்து இருப்பார். தற்போதைய மேயர் இன்னும் தனது வேலையை சரிவர துடங்கவே இல்லை என்பது நன்றாக தெரிகிறது.  சென்னை மேயருக்கு இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நிறைய சவால் காத்து கொண்டு இருக்கிறது.

 

மேயரின் குழந்தை தனம்

ஈரோடு துணை மேயராக கே.பி.பழனிச்சாமி பதவி ஏற்ற நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் வைத்த வாழ்த்து பேனரில் மேயரின் பெயர் மற்றும் புகைப்படம் இல்லாததை கண்டு தனது இமேஜ் பாதிக்கப்படுவதை எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படுத்தி விட்டார். இது போதாது என்று அன்று செய்தியாளர்களிடம் துணை மேயர் தனக்கு இப்பொழுதே  மரியாதை தருவது இல்லை இனி எப்படி தான் மக்களுக்கு சேவை செய்யமுடியும் என்று ஆவேசத்தோடு சொன்னதும் இல்லாமல் இதை முதல்வர் அம்மாவின் பார்வைக்கு கொண்டு செல்வேன் என்று பெருங்கோவதுடன் பேசினார். இது எப்படி இருக்குதுன்னா ஸ்கூல் பிள்ளைகள் அடிச்சிகிட்டு இரு இரு உன்னைய டீச்சர் கிட்ட சொல்லி அடிவாங்க வைக்கிறேன் சொல்லுறது போல. துணை மேயர் பதவி ஏற்ற அன்றே இப்படி முட்டிகிட்டு இருக்காங்களே இவங்க எப்படி மக்களுக்கு சேவை செய்ய போறாங்களோ.


டிவி கார்னர்

ஒரு விஷயத்தை ஆராய்ந்து முடிவெடுப்பது என்பது அவர் அவர் கையில் தான் இருக்கிறது அதை விட்டுவிட்டு உங்களுக்குள்ள சண்டையா வாங்க நாங்க  பஞ்சாயத்து பண்ணி வைக்கிறோம்ன்னு கூப்பிட்டு தீக்குச்சி போல இருக்கும் அவங்க பிரச்சனைல பெட்ரோல் ஊத்தி விட்டுட்டு போறது என்பது கொடுமையா இருக்கு.


ZEE தமிழ் தொலைகாட்சியில் சொல்லவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தும் நிர்மலா பெரியசாமி அதை தான் செய்யுறாங்க. ரெண்டு நாள் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன் கதை அல்ல நிஜம் நிகழ்ச்சியை போல தான் இருக்கு அதே சமயம் லக்ஷ்மி அளவுக்கு வரவில்லை. எதுவாக இருந்தால் என்ன கடைசியில் தனது டிரேட் மார்க் வசனமான வணக்கம்ம்ம் மட்டும் பேஸ் வாய்சில் கேட்க நன்றாக இருக்கிறது.

பாலிமர் சேனலில் வனிதா விஜயகுமார் இதே போல மற்றவர்கள் பிரச்சனையை அலசும் நிகழ்ச்சியை நடத்துகிறார்.அம்மிணி வீடு பிரச்சனையே இன்னும் ஓயல இதுல அவங்க பக்கத்து வீட்டு பிரச்சனைக்கு தீர்வு சொல்லுறாங்க.. நடத்துங்க ஐயா நடத்துங்க.  


எல்லா தொலைக்காட்சியும் ஒளிபரப்பாகும் தங்களது அனைத்து நிகழ்ச்சியிலும் அந்த தொலைகாட்சியின் பெயரை லேபில் போல  நடுவில் போட்டு விடுவார்கள்.  ZEE தமிழ் தொலைக்காட்சியும் அதே போல தான் செய்கிறது ஆனால்  ஒரே வித்தியாசம்    ZEE TAMIZH என்று போட்டு கொண்டு இருப்பது. தமிழ் என்பதை ஆங்கிலத்தில் TAMIL தானே எழுத வேண்டும் இது என்ன புதுசா இவங்களே ஒரு வார்த்தையை கண்டுபுடிச்சி இருக்காங்க??

சாப்பாடு பற்றி நிறைய நிகழ்ச்சிகள் வந்தாலும் ஹிஸ்ட்ரி சேனலில் வரும் FOOD TECH நிகழ்ச்சி ரொம்பவே வித்தியாசம். 

 
உதாரணத்துக்கு  உப்புமா சாப்பிட இருக்கிறார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்றால் அதற்கு என்ன என்ன தேவை அது எங்கு கிடைக்கும் அதை எப்படி தயார் செய்கிறார்கள் என்று ரொம்ப சுவாரசியமாக காண்பிக்கபடுகிறது.


ஜூனியர் கார்னர்

எனக்கெல்லாம் இப்படி ஒரு நாள் கிடைக்கவில்லை என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன் ஆனால் ஜூனியருக்கு இந்த அருமையான நாள் பற்றி தெரியாமலே இருக்கிறான் ஆம் வரும் 11/11/11 அன்று அவனுக்கு இரண்டாவது பிறந்தநாள். --
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;) 


Monday, October 3, 2011

அருள்புரியும்

சனிக்கிழமை வீட்டுக்குள்  போன போதே மகாகிட்ட இன்னைக்கு கண்டிப்பா போட்டோ எடுக்க போறோம்ன்னு சொன்னேன். ஏதோ பெரிய ஆச்சரியம் போல என்னைய பார்த்தா. விஷயம் இல்லமா இல்ல, ஜூனியர் பிறந்து ரெண்டு வருஷம் ஆகா போகுது. இந்த இடப்பட்ட காலத்துல மகா எத்தனையோ முறை சொல்லிட்டா. ஒரு பேமிலி போட்டோ எடுக்கணும், அதை ப்ரேம் பண்ணி வீடு ஹால்ல மாட்டி வைக்கணும்ன்னு. நானும் இதோ அதோன்னு சொல்லி ரொம்ப நாள் கடத்திட்டேன். நிறைய நாள் மறந்துட்டேன் என்பது தான் உண்மை. சாயந்திரம் குடும்பத்தோட போட்டோ எடுத்துட்டு பிக் பஜார் போயி வீட்டுக்கு வேண்டியது எல்லாம் தூக்க முடியாம தூக்கிட்டு வந்தோம். வரும் போது திருவொற்றியூர்ல இருக்கும் ஹைதராபாத் பிரியாணி கடைல கிரில் சிக்கன், பட்டர் நான் அப்பறம் எக் செட்டிநாடு கிரேவி வாங்கிட்டு வந்தோம்.ஒரு நாள் நானும் பிரபாகரும் படத்துக்கு போகும் போது சொன்னான் மச்சி அந்த கடைல வாங்கி சாப்பிட்டு பாரு நல்லா இருக்கும். வாரத்துக்கு ரெண்டு இல்ல முணு நாள் நான் பசங்களோட அங்க போயி சாப்பிடுவேன்னு.  கோயம்புத்தூர்ல இருந்த வரைக்கும் நானும் சுரேஷும் அடிகடி ஹோப் காலேஜ் பக்கத்துல இருக்குற கிரில் சிக்கன் கடைல போயி சாப்பிடுவோம். நூறு ரூபா இருந்தா போதும் ஒரு முழு சிக்கனை பாதி பாதி வெட்டி முழுங்கிடுவோம். ரொம்ப நாளா அந்த சந்தர்பம் கிடைக்கல, கோவை போனாலும் ஏதாவது வேலையா போகவேண்டி இருக்கு அது முடியவே நேரம் ஆகிடும் அதனால அதிகமா அந்த சைடு போறதுக்கு  டைம் இருக்கிறது இல்ல. போன முறை போன போ எப்படியாவது சாப்பிடனும்ன்னு நினைச்சேன், அந்த நேரம் பார்த்து காசு இல்ல. ஆனா சுரேஷ் இருந்தான். வாடா நண்பா  ஒரு கோழியை முழுங்கிட்டு வரலாம்ன்னு அவனை இழுத்துட்டு சரவணம்பட்டில இருந்த ஒரு கடைக்கு போனேன். அது ஒரு மலையாளத்தான் நடத்துற கடை, ஒரு கிரில் சிக்கன் ரேட் கேட்டா இருநுறு ரூவான்னு சொல்லுறான். என்னடா ரேட் எல்லாம் தாறு மாறா ஏறி இருக்கேன்னு அவன் கிட்ட கேட்டேன். கடைசியா எப்போடா சாப்பிட்டன்னு அவன் கேக்க  யோசிச்சி பார்த்து  அஞ்சு வருஷம் இருக்கும்ன்னு சொன்னேன். என்னைய முறைச்சி பார்த்தான், சரி விடுடான்னு  டாபிக் மாத்திட்டேன், பயபுள்ள இல்லைனா ஹோட்டல்ன்னு கூட பார்க்காம அசிங்க அசிங்கமா திட்டி இருப்பான். ஒரு  கோழியை  வாங்கி ரெண்டு பேரும் சாப்பிட்டோம், ஆஹா என்ன டேஸ்ட் என்ன டேஸ்ட், ஒரு வித ஜூசியா வாயில ஊரும் பாருங்க அட்டகாசமா இருக்கும்.


அந்த நியாபகத்துல இங்க வாங்கின கிரில் சிக்கனில் ஒரு பர்சன்டேஜ் கூட இந்த கடைல இல்ல. ஏதோ மசாலாவை தடவி  இருக்கானே தவிர அது நல்லா முத்தின கோழி போல நல்லாவே இல்ல.  ஏன்டா வாங்கினோம்ன்னு வெறுப்பா இருந்துச்சு. கடைசில எங்க  டம்மிக்கு அன்னைய நைட் நல்ல வேட்டையா இருந்துச்சு. சாப்பிட்டு பிரபாகருக்கு போன் பண்ணேன், லைன்ல வாடா மவனே உனக்கு இருக்குன்னு. அவன் போன் எடுக்கவே இல்ல சரின்னு  விட்டுட்டேன். நேத்து காலைல பிரபாவே போன் பண்ணி இருந்தான். டேய்ன்னு சவுண்ட் விட்டேன் ஆனா அவனோட வாய்ஸ் ரொம்ப மாறி இருந்துச்சு, என்னடா உடம்புக்கு முடியலையான்னு கேட்டேன். பெரிய ஆஸ்பத்திரில இருக்கேன்டா, ரெண்டு முணு நாளைக்கு முன்னால அப்பாக்கு சீரியஸ் ஆகிடுச்சு. அதனால அப்பா கூட இருக்கேன்னு சொன்னான். பிரபாக்கு அம்மா இல்ல, அவன் அம்மாக்கு சுகர் இருந்துச்சு அதனால ஹார்ட் அட்டாக் வந்து இறந்த  சமயத்துல அந்த அதிர்ச்சி தாங்க முடியாம அவன் அப்பாக்கு ஸ்டோக் வந்துடுச்சு. முளைல எதோ பாதிப்பு ஏற்பட்டு ரொம்ப முடியாம இருந்தாரு, போன வாரம் பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததுல இப்போ திரும்ப அந்த பாதிப்பு வந்துடுச்சு. அஞ்சு நாளா ஹாஸ்பிட்டல இருக்காரு எந்த முன்னேற்றமும் இல்ல கேக்கவே கஷ்டமா இருந்துச்சு.  


சிக்கன் பத்தி பேச நினைச்சு போன் பண்ணே, ஆனா இப்படி ஒரு நிலைமைல இருப்பான்னு நான் நினைச்சி கூட பார்க்கல. இன்னைக்கு மதியம் அவங்க அப்பாவை பார்க்க போறேன்  ஆண்டவா அவர் நலம் பெற அருள்புரியும்.--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Monday, September 26, 2011

சங்கதிகள் செப் 26/11

எங்கேயும் எப்போதும் 


அடுத்த நாள் கரூரில் எனக்கு கல்யாணம், முந்தய நாள் தங்கை வீட்டில் உறவினர்களுடன் இருக்கிறேன். மதியம் காஞ்சிபுரத்தில் இருந்து தம்பி வந்திருந்தான், ஐந்து மணிநேரத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து கரூர் வந்ததாகவும் விழுப்புரத்தில் இருந்து திருச்சி ரோடு நன்றாக இருந்ததால் ஒண்ணரை மணி நேரத்தில் வந்ததாக சொன்னான். மகா மாசமா கரூரில் அவ அம்மா வீட்டுல இருந்த சமயம் பார்க்கணும் தோணுச்சினா உடனே கிளம்பிவிடுவேன், திருச்சிக்கு போகும்  பிரைவேட் பஸ்ல தான் போவேன்,  ஏறும் போதே  ஐந்தரை மணி நேரத்தில் திருச்சின்னு சவுண்ட் விடுவாங்க செம பாஸ்டா போகும் அந்த வேகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். 

ஏதாவது ஒரு பிசினஸ் பண்ணனும்ன்னு  யாராவது கேட்டா போதும் கார் வாங்கி ட்ரவல்ஸ் ஓட்ட சொல்லுவேன், என்கிட்ட பணம் இல்ல இருந்தா ஒரு குவாலிஸ் வாங்கி ரெண்டு நாளைக்கு ஒரு தடவை சென்னை டு திருச்சி, திருச்சி டு சென்னை போக நாலு மணிநேரம் வர நாலு மணிநேரம் ஒரே நாளில் போயிட்டு வந்தா போதும்  ரெண்டாயிரம் ருபாய் கைல இருக்கும்ன்னு சொல்லுவேன் .
 
ரெண்டு நாளைக்கு முன்னால இந்த படத்தை பார்த்தத்துல  இருந்து இந்த கனவுகளை எல்லாம் ஏறக்கட்டி வச்சிட்டேன். வேகமா போயி என்ன பண்ண போறோம்??   தினமும் செய்தி தாள்களில் படிக்கும் விபத்து பற்றி ஒரு நிமிடத்தில் கடந்து சென்று விடுகிறோம்.  அதன் பாதிப்பை அருகில் இருந்து பார்த்தால் தானே நமக்கு அதன் குருரமான உண்மை நிலை தெரியும்,  கடைசி பதினைந்து நிமிடங்கள் அதை கண்முன் காட்டி விடுகிறார் டைரக்டர் சரவணன். ஜெய் அஞ்சலி காதலை அவ்வளவு அழகா சொல்லிட்டு கடைசில ஜெய்யை சாகடிச்சதை தான் ஏத்துக்க முடியல. ஒரு ஜோடி பிரிய ஒரு ஜோடி சேர்கிறது, எங்கேயும் எப்போதும் எதுவும் நடக்கும்.


படத்தை பற்றி இதுவரை நிறைய விமர்சனம் வந்துடுச்சு நான் ஏதும் புதுசா எழுத போறது இல்ல என்பதால் இத்துடன் நிறுத்திக்கிறேன்.

படம் பாருங்க நல்லா இருக்கு - ப்ளீஸ் வேகம் வேண்டாம் . 


மங்காத்தா

எதிர்பார்த்த  மாதிரி தல கலக்கி இருக்காரு. இவ்வளவு பெரிய ஒபெனிங் இருக்கும்ன்னு நினைச்சி இருப்பார்களான்னு தெரியல, ஒருவேளை சன் வெளியிடு என்பதால் கூட இருக்கலாம்.
The Dark  Knight - 2008ல் வந்த ஹாலிவுட் படம். சக்கை போடு போட்ட படம். இந்த படத்துல வில்லனாக ஜோக்கர் என்கிற கதாபாத்திரத்தில் Heath Ledger செமயா நடிச்சி இருப்பாரு.  படத்துல முதலில் வரும் பேங்க் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களில் ஒருவர் வேலை முடிந்தவுடன் அடுத்தவன் அவனை கொன்று விடுவான். ஷேர் பிரிப்பதில் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்டவே இப்படி நடக்கும். கடைசியில் ஜோக்கர் மட்டுமே அத்தனை பணத்தையும் கொள்ளை அடித்துவிட்டு செல்வான். அதே போல வேற சில சீன் உருவி தமிழ் சினிமாக்கு ஏத்த மாதிரி உல்டா பண்ணி சூப்பர் ஹிட் கொடுத்து இருக்காங்க. தமிழ் சினிமால ஹீரோ என்றாலே நல்லவன் என்கிற நீதியை உடைத்துகாக வெங்கட் பிரபுவை வாழ்த்தலாம். ஆனா இவ்வளவு மொக்கையாக ஒரு கொள்ளை சீன் பார்த்ததே இல்ல வெங்கட் பிரபு.
கொடுமை

போன வாரம் அம்மா கோயம்புத்தூர் போனாங்க, அவங்களை சேரன் எக்ஸ்பிரஸ்ல போனாங்க, லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல அவங்களை ஏத்தி விடும் போது அதுல இருந்த டாய்லேட்ல ரெண்டு ஆளுங்க  ஏறினாங்க. லகேஜ் எடுத்துட்டு அம்மா உள்ள போகும் போது கதவு கிட்ட நான் நின்னேன் ஒரே சரக்கு வாசனை. உள்ளே போயி தண்ணி அடிக்கிறாங்க போலன்னு நினைச்சிட்டு இருந்தேன், அம்மா உள்ளே போனவங்க பயந்துட்டு பேக் மட்டும் சீட்ல வச்சிட்டு வெளியே வந்து நின்னுட்டு இருந்தாங்க. சரி எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு கிளம்புறேன் போற வழியில ரயில்வே போலீஸ் கிட்ட சொல்லிட்டு போறேன்னு சொல்லிட்டு போனேன்.  வேண்டாம்ன்னு தடுத்தவங்க கிட்ட தைரியம் சொல்லிட்டு போற வழியில் இருந்த ஒரு போலீஸ்காரர் கிட்ட சொன்னேன். நீங்களும் கூட வாங்கன்னு அவரு சொன்னாரு எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு சார்  நான் கிளம்பனும் நீங்க அங்க போயி பாருங்க ரெண்டு பேரு ரொம்ப நேரமா லேடீஸ் கம்பர்த்மென்ட் உள்ள இருக்காங்கன்னு சொல்லுறேன் அது எல்லாம் முடியாது, சார்ஜ் ஷீட் போடுற வரைக்கும் நீ கண்டிப்பா இருக்கனும்ன்னு  சொல்லி குண்டை தூக்கி போட்டாரு. நீ பாட்டுக்கு சும்மா சொல்லிட்டு போயிடுவ நாங்க அலையுணுமான்னு ஒரு கேள்வி வேற கேட்டாரு, என்னால வரமுடியாது சார் நீங்களும் போயி பார்காதீங்கன்னு சொன்னேன். அது எல்லாம் முடியாது நீ சொல்லிட்ட நான் கண்டிப்பா போயி பார்க்கணும் வா என் கூடன்னு இழுக்காத குறையா கூட்டிட்டு போனாரு. இது என்னடா வம்பா போச்சு ஒழுங்கா   மூடிட்டு கிளம்பி இருந்தா இந்நேரம் பார்க் ஸ்டேஷன்ல இருந்து ட்ரெயின் ஏறி இருக்கலாம்ன்னு அவரு பின்னாடியே போனேன்.  டாய்லேட்  உள்ள ஒருத்தர் செம மப்பு அவருக்கு போதை தெளியவைக்க ஒருத்தர் தண்ணி எடுத்து முகத்தை கழுவிட்டு இருக்காரு. அவங்க பேமிலி ஆளுங்க வெளிய இருந்தாங்க, போலீஸ்காரரும் அவங்களை வெளிய போக சொல்லிட்டு கிளம்பிட்டாரு. இனி கண்டிப்பா எந்த போலீஸ்காரன் கிட்டயும் புகார் சொல்லவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

 புல்லட் பயணம்

கோவையில் ஒரு இடம் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை, அதுக்கு ஏத்த மாதிரி ரெண்டு முன்று சைட் கொஞ்சம் சீப்பா இருக்கு வாங்க பார்க்கலாம்ன்னு சொந்தகாரங்க ஒருத்தங்க சொன்னங்க. மேட்டுப்பாளையம் பக்கத்துல இருந்தது அந்த இடம். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரைக்கும் புல்லட்ல தனியே பயணம். இந்த புல்லட் எங்க சித்தப்பாவோட வாகனம், பழைய பெட்ரோல் இஞ்சின் லெப்ட் சைடுல கியர், ரைட் சைடுல பிரேக். கொஞ்சம் ஏமாந்தாலும் பிரேக்ன்னு நினைச்சு கியரை மேதி மேதின்னு மேதிச்சு வண்டி நிக்கலையேன்னு பயத்தை ஏற்படுத்திடும். டாப் கியரில் கூட ரொம்ப மெதுவா வண்டியை ஓட்டிட்டு போகலாம். பெரியநாயகம்பாளையத்தில்  இருந்து சாய்பாபா காலனி செல்லும் வரை ரோடு ரொம்ப மோசமா இருக்கு, மத்த வண்டி எல்லாம் கியர் மாத்தி மாத்தி போயிட்டு இருக்கும் போது டாப் கியர்ல மெதுவா போயிட்டு இருந்தேன். அடுத்த தடவை போன பொள்ளாச்சி  பக்கம் ஒரு ரவுண்ட் போயிட்டு வரணும் .

இடிகரை பக்கத்துல குறைஞ்ச விலையில் முன்று சென்ட் வாங்கி போட்டு இருக்கேன், சென்ட் ஒன்னரை லட்சம் தான். வீடுகள் எல்லாம் பக்கத்துலையே இருக்கு என்பதால் அந்த ஏரியா டெவலப் ஆகா ரொம்ப நாள் எல்லாம் பிடிக்காது. இந்த ரேட்க்கு கோவைல வேற எங்கேயும் இடம் வாங்க முடியாது. யாருக்காவது கோவைல இடம் வாங்க வேண்டும் என்றால் சொல்லுங்க நான் வாங்கின சைட்க்கு பக்கத்துலையே இன்னும் சில சைட் இருக்கு. கோவை பத்தி ஒரு நீளமான பதிவு எழுதணும். கொஞ்சம் கொஞ்சம் நினைவுகளை திரட்டி குறிப்பு எடுத்துட்டு இருக்கேன். சாதாரணமா நான் பார்த்த கோவை இதுன்னு எழுத மனசு வரல. ஆறு  வருஷத்துக்கு முன்னாள் நான் வாழ்ந்த கோவையை காட்டிலும் இப்போ நிறைய மாற்றம். முன்று பகுதிகளா எழுதணும்.புதிர் 

நாளைய இயக்குனர் தற்போதைய சீசனில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குறும்படம். திரைகதை யுத்தியை அழகாக கையாண்டு இருக்கிறார். ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தால் தான் புரிகிறது.


 நோ கமண்ட்ஸ் 

போட்டோவை பாருங்க சிரிங்க :)))

 


--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)


Thursday, September 1, 2011

போன ஞாயிற்று கிழமை


காலை ஒன்பது  மணிக்கு எழுந்துக்கும் போது  முந்தன இரவு அடித்த மானம்கெட்ட ஓல்ட் மாங்க் தரும் எப்பெக்ட்எப்படியோ அப்படி இருந்தது ஹாங்ஓவர்.. ரொம்ப நேரம் தூங்கினால் ஏற்படும் கிர்ர்ர்ர் தான்.   இன்று அமாவாசை ஆதனால்  வீட்டில் அசைவம் இல்லை என்கிற விதியை மாத கடைசி ஆனதால் கண்டிப்பாக இருவரும் கடைபிடித்தோம்.  காலை உணவு ராகி கஞ்சி ஜூனியருடன் கொஞ்சம் விளையாட்டு அப்படியே கொஞ்ச நேரம் வண்டியில் ரவுண்டு அடித்து கொண்டு இருந்தோம். மதியம் சாப்பாடு சாம்பார், ரசம், அப்பளம் அப்பறம் வீட்டின் அருகில் இருந்த மாரியம்மன் கோவிலில் ஊற்றிய கூல் வித் முருங்கை கீரை பொரியல் (இந்த காம்பினேஷன் எவன் கண்டுபுடிச்சான்னு தெரியல, எப்படி குடிச்சாலும்/ சாப்பிட்டாலும் ரெண்டும் வேறு வேறு டேஸ்ட்  தான் தெரியுது) பிறகு குட்டி தூக்கம். சாயந்திரம் எங்காவது செல்வது என்று தீர்மானித்து பிறகு மாத கடைசி  என்பதால் முவரும் எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் சிப்ஸ் உடன் அந்த மாலை பொழுதை கழித்தோம்.  சிறிது நேரம் கலைஞர் டிவியில் ராமன் தேடிய சீதை படம் பார்த்து கொண்டு இருந்தேன், படம் எனக்கு பிடித்திருந்தது  மகாவுக்கு பிடிக்கவில்லை என்பதை அவள் அடிகடி படத்தை பற்றி கொடுத்த கமெண்ட் முலம் தெரிந்து கொண்டேன்.  இரவு எட்டு மணிக்கு தோசை என்கிற வஸ்துடன் தேங்காய் சட்னி  வந்தது. பத்து மணியளவில் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகி கொண்டு இருந்தது  அன்றைய டைடில்  சைவம் வெர்சஸ் அசைவம் அட போடாங்க ____ ... டிவியை ஆப் செய்து  விட்டு கொஞ்ச நேரம் புத்தகம் படிக்கலாம் என்று ஆனந்த விகடன் எடுத்தேன் சொல்லி கொள்வது போல இந்த வாரம் சுவாரஸ்யமாக இல்லை. வேற ஏதாவது படிக்கலாம் என்று தேடிய போது சிக்கியது பணம். புத்தகத்தை பற்றி  விமர்சனம் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன் . முடிந்தவரை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் செந்தில், நான் என்பது யார் என்று தான் தெரியவில்லை. இந்த நான் படுத்தும்பாடுதான் பெரும்பாடாக இருக்கிறது அதற்கு பதில் ஏதாவது கதாபாத்திரத்து பெயர் வைத்து எழுதி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.  ஒரே அடியாக எல்லாவற்றையும் சொல்லாமல் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று எகிறி குதித்து  குதித்து  செல்வதால் இது என்ன வகையான புத்தகம் என்கிற சந்தேகம் வருகிறது.  அடுத்ததாக வேறு புத்தகம் போடும் ஐடியா இருந்தால் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா கையாளுங்கள் .  இரவு ஒரு மணியளவில் தூக்கம் வந்தது, அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கே எழுந்தேன் இப்போதும் தலை கிர்ர்ர்ர்ர் என்று சுற்றியது, 

நைட் சரியா துங்கல பாஸ் அதான் :) 
Saturday, August 20, 2011

சங்கதிகள்: 20 -ஆகஸ்ட்- 2011


எழுத்தாளர்கள்

வா.மு.கோ.முவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பத்து பதினைந்து நிமிடங்கள் பேசி இருப்போம் சிரித்து சிரித்து வயறு வலி வந்துவிட்டது. ஒரு எழுத்தாளன் என்கிற மிதப்பு எதுவும் இல்லை. நெருங்கிய நண்பனிடம் பேசியதை போல பேசிக்கொண்டு இருந்தார், சாரை மாறியாக ஜோக் வந்துகொண்டு இருந்தது. தற்போதைய நிலைமையை கூட வெகு இயல்பாக ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்டார். நான் கள்ளியை வெகுவாக ரசித்ததையும் அதே அளவு  சாந்தாமணியை வெறுப்பதாகவும் சொன்னேன். சாந்தாமணி நாவலை பற்றி அவரது எண்ணத்தையும் அந்த புத்தகம் எதற்காக எழுதியது என்றும் விளக்கினார். ஆனந்த விகடனுக்கும்  உயிர்மைக்கு எப்படி சிறுகதை  எழுதணும் என்று சொன்னாரே அந்த நிமிடத்தில் நான் சிரித்த சிரிப்புக்கு ஆபீஸ் இருந்தவர்கள் என்னை ஒரு மாதரியாக பார்த்தார்கள். வருட இறுதியில் அவரது இரண்டு நாவல்கள் உயிர்மை வெளியிட இருப்பதாக சொன்னார் அது எவ்வளவு தூரம் உண்மையோ தெரியவில்லை. 

இதற்கு பிள்ளையார்சுழி போட்ட மயில்ராவணன்னுக்கு நன்றி :)

வா.மு.கோ.முவிடம் ஷாராஜ் நம்பர் பெற்று அடுத்த நாள் அவரிடம் பேசினேன். இவரும் ரொம்ப இயல்பாகவே பேசினார், 2004ஆம் ஆண்டு வெளிவந்த இந்த தொகுப்பை பற்றி இப்போது பேசியதில் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார். தற்சமயம் ஓவியத்தில் மட்டுமே கவனத்தை நிலைநிறுத்து கொண்டுள்ளதால் சிறுகதைகள் அவ்வளவாக எழுதுவதில்லை என்றார். இந்த வருட கடைசியில் அவரது ஓவியங்கள் கோவையில் கண்காட்சி வைக்க உள்ளதாகவும் அடுத்த வருடம் தொடக்கத்தில் சென்னையில் அவரது கண்காட்சி வைக்க எண்ணியுள்ளதாக சொன்னார்.  அவரின் வேறு ஒரு தொகுப்பு இந்த வருடம் வரலாம் என்று சொல்லி இருக்கிறார்.
 
வெட்டுபுலி நாவல் பற்றிய கலந்துரையாடலுக்கு சென்றதில் புத்தகத்தின் ஆசிரியர் வாராதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. கலந்துரையாடலில் பேசியவர்கள் அவர் அவர்கள் பார்வையில் புத்தகத்தை பற்றி பேசினார்கள் குறிப்புக்கள் இல்லாமல் நாவலை பற்றி பேச முடியாது என்று பேசியவர்களுக்கு தெரிந்து இருந்தது,  அண்ணன் அப்துல்லா அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லையென்றாலும் கடைசியில் பேசினார். அன்று இரவு தமிழ்மகன் அவர்களிடம் முகபுத்தகத்தில் பேசிக்கொண்டு இருந்த போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத அளவு தனக்கு வேலைபளு இருந்ததாகவும் வராததுக்கு வருந்தினார். தனது அடுத்த நாவலான ஆண்பால் , பெண்பால் பற்றி கொஞ்சம் சொன்னார். அவரின் போன் நம்பர் வாங்கி வைத்துள்ளேன் பேசவேண்டும். 

விடை தெரியா கேள்விகள்  
 
 இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து ஆபீஸ்க்கு செல்ல மின்சார ரயிலில் ஏற சென்றேன். எனக்கு முன்னால் ஒருவர் இடது கையில் ஒரு வருடம் கூட ஆகாது ஒரு குழந்தையும்  வலது கையில் ஒரு ட்ராவல் பேக்  தூக்கி சென்றார். ரயிலில் ஏற இருந்த அவசரத்தில் அவரை சரியாக பார்க்கவில்லை, அவரை கடந்து செல்லும் போது வேறு ஒருவர் அந்த நபரை ரயிலின்  உள்ளே செல்ல உதவி செய்தார், அப்பொழுதுதான் தெரிந்தது  அவருக்கு பார்வையில்லை என்று.  ஏதோ மனதுக்குள் உறுத்தி கொண்டு இருந்தது, அவர் எங்கே போகிறார்?? ஊருக்கா அல்லது சென்னையிலே இருக்கும் அவர் வீட்டுக்கா?? எங்கு இருந்து வருகிறார் ?? அந்த குழந்தையை எப்படி அழைத்து வந்தார்? உடன் குழந்தையின் அம்மா இல்லையே குழந்தை அழுதால் என்ன செய்வார்?? அந்த குழந்தையை படிக்க வைக்க என்ன செய்வார் ?? இப்படி எத்தனையோ கேள்விகள் வந்து கொண்டே இருந்தது அடுத்த நிறுத்தம் வரைக்கும். கோட்டை நிறுத்தத்தில் ஒரு ஹிந்திகாரர்  நான் இருந்த பெட்டியில் ஏறினார், நான்கு நாட்கள் சாப்பிடாதவன் போல ஆள் பார்ப்பதற்கே ரொம்ப நொந்து போயிருந்தார். சென்ட்ரல் வந்தால் சொல்லுங்கள் நான் ஒரிசா போகவேண்டும் என்றார், சாப்பிட ஏதாவது இருக்குமா என்றார் பர்சில் இருந்தது இருபது ருபாய் பத்து ரூபாயை அவரிடம் கொடுத்தேன். இப்போது  நானும் அவரும் பொருளாதார ரீதியில் ஒன்றாக இருந்தோம், பூங்கா நிலையத்தில் அவர் இறங்குவதற்குள் என்னுள் அடுத்த கேள்விகள் வர ஆரமித்துவிட்டது. பத்து ரூபாயை வைத்து கொண்டு எப்படி அவர் ஒரிசா போக போகிறார்?? அதுவரை பசிக்காத அவருக்கு?? ட்ரெயின் டிக்கெட் எடுப்பார??   என்கிற கேள்விகள் வந்து கொண்டு இருந்தது. பூங்கா நிறுத்தத்தில் அவர் இறங்கும் போது எனக்கு ஒரு சலாம் வைத்து விட்டு சென்றார். ஐந்து நிமிடத்தில் இரண்டு நபர்கள் என்னுள் எழுப்பிய கேள்விகள் எத்தனை எத்தனை !!! விடைகள் தான் கிடைக்கவில்லை. அன்னா ஹசாரே

சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுத்தான் என்கிற பழமொழிக்கு ஏற்ற ஆள் யோகா மாஸ்டர் ராம்தேவ், அதே போல இப்போ அன்னா ஹசாரே. அவரை சுற்றியே இங்கிலீஷ் சேனல் எல்லாம் மொய்த்து கொண்டு இருந்தது, திகார் ஜெயிலின் வாசலிலே பழியாக கிடந்த அந்த சேனல் கேமராவை பார்த்து பார்த்து  டென்ஷன் ஆனது தான் மிச்சம். நாடு முழுவதும் லாரி ஸ்ட்ரைக் சொன்னாங்களே அதை பற்றி  ஏதாவது தெரிஞ்சிக்கலாம்ன்னு நானும் IBN, Timesnow, NDTV, Headlines சேனல் மாத்தி மாத்தி பார்க்கிறேன் அன்னா பற்றிய நியூஸ் தானே இருக்கு ஒழிய வேற ஒண்ணுத்தையும் காணோம். நல்ல வேலை சன், ராஜ், ஜெயா, கலைஞர் சேனல் எல்லாம் இதுக்கு அவ்வளவா முக்கியத்துவம் தராம முக்கிய செய்தியுடனே முடிச்சிகிட்டாங்க. கலைஞர் கைது போதோ இல்லைனா ஜெயலலிதா கைது போதோ நமக்கு கண்டிப்பா தமிழ் சேனலில் இந்த சோதனை வரும்.


பத்திரிக்கை

இந்த வாரத்து ஆனந்த விகடனுடன் சுகாவின் முங்கில் முச்சு பகுதி நிறைவு பெற்றது. தொடர் ஆரமித்தது முதல் ஒவ்வொரு வாரமும் முதலில் படிப்பது இவரின் கட்டுரையை தான்.  தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை  கோர்த்தது  தான் இந்த தொடர் என்றாலும், சுகாவை விட குஞ்சு தான் இந்த தொடரின் நாயகன்.  குஞ்சுவை கடைசி வரை காட்டாமல் மறைத்துவிட்டது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. சுகாவை பிரிகிறோம் என்று நினைக்கும் போது அவரை போல இப்போது ராஜுமுருகன் என்கிறவர் சில பக்கங்களை நிரப்ப ஆரமித்துள்ளார். சுகாவை போலவே சுவாரசியமாக எழுதுகிறார், அனஸ்தீஸ்யா குடுக்க பெற்ற பெண்களின் நிலைமையை சொல்லி பெண்கள் எப்படி எப்போதெல்லாம் ஆண்களை வசைபாடுவார்கள் என்று சில சம்பவங்களை முன்னிறுத்தியது நன்றாகவும் கொஞ்சம் கிலியையும் கிளப்பிவிட்டுவிட்டார். முடியும் தருவாயில் வரும் (போட்டு வாங்குவோம்) அடுத்த தொடக்கத்துக்கு ஏற்ற முடிவு.


குமுதம் புத்தகம் வாங்கினேன், ஏதோ சுயமுன்னேற்ற புத்தகத்தை வாங்கியது போல ஒரு பீலிங், பீச் ஸ்டேஷனில் படிக்க ஆரமித்து சேத்துபட்டில் முடிந்து விட்டது.. 10 நிமிடங்களுக்கு மேல் எப்படி புரட்டினாலும் பப்பரப்பேஎஎ எ எ எ எ எ எ தான் ..  


திருவொற்றியூர் காமெடிகள் 

திருவொற்றியூர் பகுதியில் திடிர் திடிர் என்று சில போஸ்டர்கள் கண்ணில் பட்டு சிரிப்பை வரவழைக்கும், கொஞ்ச நாட்களாக தேமுதிக ஆட்கள் அதை குத்தகைக்கு எடுத்கிட்டாங்க.  தலைவர் விசயகாந்துக்கு இந்த மாதம் 25 ஆம் தேதி பிறந்தநாள் வருது அதுக்காக ஆகஸ்ட் ஒண்ணாம் தேதில இருந்து எங்க பார்த்தாலும் விசயகாந்த்தை  வாழ்த்தி நிறைய டிஜிட்டல் போர்டுகள். பலமாக காத்து அடிச்சா கண்டிப்பா அதுக்கு பக்கத்துல இருக்கிறவன் மண்டையை பதம் பார்க்காமவிடாது. வள்ளலே, நல்லவரே, வல்லவரே,, அந்த வரே இந்த வரேன்னு உடன்பிறப்புகளையும், ரத்தத்தின் ரத்தத்தையும் ஓவர்டேக் பண்ணி வாழ்த்தோ வாழ்த்துன்னு வாழ்த்தி இருக்காங்க.. இதுக்கெல்லாம் நாங்க அசரமாடோம்ன்னு ஒரு ரத்தத்தின் ரத்தம் முதல்வரை போற்றி அடிச்ச   போஸ்டர்ல கொட்டை எழுத்தில் பிரிண்ட் பண்ணி இருந்துச்சு எங்கள் நாடி துடிப்பே.     
 
வடசென்னை பகுதி என்றாலே ஷேர் ஆட்டோகளுக்கு தனியா ஒரு பாதையை உருவாகணும் போல. எங்க எல்லாம் டிராபிக் ஆகுதோம் அதுக்கு முக்கால் வாசி காரணம் ஷேர் ஆட்டோவாகத்தான் இருக்கும். போன வாரத்தில் ஒரு நாள் சாயந்திரம் தேரடியை தாண்டி செல்ல பதினைந்து நிமிடங்கள் ஆனது. தேரடியில் இருந்து திருவொற்றியூர் மார்க்கெட் வரை நீண்ட வருசையில் எல்லா வானகனங்களும் காத்து கொண்டு இருப்பது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த பகுதியில் இருக்கும் சில ஆக்கிரமிப்புகளை அகற்றமுடியாமல் நகராட்சி திணறி கொண்டு இருக்கிறது. எப்போதுதான் விடிவுகாலம் பிறக்குமோ இந்த தொல்லைகளுக்கெல்லாம். 


 
பாடல் 

ஏதோ ஒரு பத்திரிகைல பவதாரணி குடுத்த பேட்டியில் தனது குடும்பத்தார் இசையில் மட்டுமே பாடுவேன் என்றார், சமிபகாலமாக அவரின் குரலை அதிகமாக  கேட்டதாக நியாபகமில்லை. கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் பாடல்கள் கேட்கும் போது  இது பவதாரணி குரல் தானே ஆச்சரியம்.. உசர திருடி போறா ஒருத்தி  என்று துடங்கும் அந்த பாடல் நன்றாக இருக்கிறது. 
வேலைவாய்பு செய்திகள் 


Development
- .Net (2-13 Yrs)
- Java (2- 6 Yrs)

Quality Assurance

- Manual Testing (4-8 Yrs)
- Automation Testing (3-5 Yrs)
- Silk Testing specialists (2-5 Yrs)
- QA Manager

Product Management
- Product Manager -
Datawarehousing

Others

-SQL DBA (5-12 Yrs)
-System Admin (5-8 Yrs)
-DB2 Database Development & Admin(2-5 Yrs)ரெஸ்யூம்   அனுப்ப வேண்டிய முகவரி : romeoboy.81@gmail.com
--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)Wednesday, August 10, 2011

அம்மிச்சி

அப்பாவின் அப்பாவை அப்பாரு என்றும், அம்மாவை ஆத்தா என்றும், அது போல  அம்மாவின் அப்பாவை அப்புச்சி என்றும் அம்மாவை அம்மிச்சி என்று அழைக்க வேண்டும் என்பது எங்கள் உறவு முறையின் வழக்கம். எங்கள் வீட்டில் இது உல்டா, அப்பாவின் அம்மாவை நாங்கள் அம்மிச்சி என்று அழைத்தே வந்துள்ளோம். இதற்கு ரவி மாமா தான் காரணம் என்று அம்மா சொல்லுவார். ரவி மாமா அப்பாவின் தங்கை மகன் எனக்கு மாமா முறை, அவர் அம்மிச்சி என்று அழைத்தது எங்களுக்கு எல்லாம் எப்போது தொற்றிகொண்டது என்று தெரியவில்லை. ஆத்தா எப்போது அம்மிச்சி ஆனார் என்று தெரியாத வயதில் இருந்தே நாங்கள் அம்மிச்சி என்று தான் அழைத்து வந்துள்ளோம்

அம்மிச்சியின் கடந்த கால நினைவுகள் பற்றி அப்பா அம்மா அத்தை வாயிலாக தெரிந்து கொண்டேன். அம்மிச்சி வாழ்ந்தது காரமடையில், அவரின் அப்பா பெரும் செல்வந்தர். அம்மிச்சி அப்பாருக்கு இரண்டாவது மனைவி. அவரின் முதல் மனைவியின் முலம் குழந்தை பிறக்காததால் இவரை இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டார். அம்மிச்சி கல்யாணம் ஆகி வரும் போது தங்கம், வைரம் , வெள்ளி வீட்டுக்கு தேவையான சாமான் என்று அப்பாருடன் கோவையில்  இருக்கும் விளாங்குறிச்சி என்கிற கிராமத்துக்கு  வந்தார். அப்பாரு எப்போதும் கவலையில்லாமல் வாழ்ந்தவர், சீட்டு விளையாடவே நேரம் அவருக்கு சரியாக இருக்குமாம். 

அம்மிச்சி கல்யாணம் செய்து கொண்டு வந்தாலும் பன்னிரண்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்துள்ளார், யாரோ ஒருவர் சொன்ன யோசனையில் வள்ளலார் சன்னதிக்கு சென்ற பிறகு முதல் குழந்தை பிறந்தது,  அதனால் முதல் குழந்தையான எனது அப்பாவிற்கு ராமலிங்கம் என்று பெயர் வைத்தார்கள். அப்பாவிற்கு பிறகு இரண்டு பெண் , இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுள்ளார். அம்மிச்சி வீடு நிர்வாகத்தை கவனித்து கொண்டு இருந்தார், அப்பாரு எப்பொழுதும் போல சீட்டு விளையாடி கொண்டு  இருந்தாராம், அப்பாரு வாழ்ந்த வீட்டை அவர் பெயருடன் சாதியின் பெயருடன் சேர்த்து முக்கு வீடு என்று தான் அழைப்பார்கள், கொங்கு நாட்டின் இது ஒரு வழக்காகவே அப்பொழுது இருந்துள்ளது.   

அப்பாரின் இந்த உதாரிதனத்தால் வீட்டில் இருந்த பொன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே சென்று கொண்டு இருந்தது. அம்மிச்சி எவ்வளவு தான் காப்பாற்ற நினைத்தாலும் அப்பாரு எதையும் விட்டுவைக்காமல் சீட்டாட்டத்தில் தொலைத்து கொண்டு இருந்தாராம். ஒரு நாள் எல்லாம் போன பிறகு வாழ்ந்த வீட்டையும் தொலைத்தார், அப்பாவிற்கு  அப்போது வாலிப வயது கூட நெருங்கவில்லை. அந்த வீடு அப்பரின் கையை விட்டு சென்ற அன்று அம்மிச்சி எப்படி அழுதார்,, எப்படி எல்லாம் அந்த வீட்டை வாங்கியவனை சாபம்கொடுதார் என்று அத்தை வேதனையுடன் சொல்லுவார்.

அப்பா அம்மா இருவரும் வேலைக்கு சென்றபிறகு எங்களை பார்த்துகொண்டது அம்மிச்சிதான், என்னால் முடிந்தமட்டும் அவருடன் வாழ்ந்த பழைய நினைவுகளை கிளறி பார்க்கிறேன் சட்டென எதுவும் நினைவுக்கு வரவில்லை. இது எனக்குள் இருக்கும் ஒரு குறைபாடு, எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு எளிதாக நினைவில் என்னால் வைத்து கொள்ளமுடியாது. 

என்ன காரணம் என்று தெரியவில்லை அம்மிச்சிக்கும் அம்மாவுக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒத்துவரவில்லை. சில நாட்கள் அம்மிச்சி எங்கள் அருகில் இல்லாமல் இருந்ததுண்டு. சித்தப்பாக்கள் இருவரும் அருகில் இருந்தாலும் அம்மிச்சி ஒரு குடிசை வீட்டில் தனியாக வாழ்ந்து கொண்டு இருந்தார். இப்போது நாங்கள் புதியதாக கட்டி குடிவந்து இருக்கும் இடத்தில தான் அம்மிச்சி தனியாக சில காலங்கள் வாழ்ந்தார். ஒரு முரணான விஷயம் அதே காலகட்டத்தில் அம்மாவின் அம்மா பதினைந்துக்கும் அதிகமான ஒண்டு குடித்தனம் வீடுகளை வாடகைக்கு விட்டு சுகமாக வாழ்ந்து கொண்டு இருந்தார். எனக்கு தெரிந்து  அப்பா அம்மிச்சியை தினமும் சந்தித்து கொண்டு இருந்தார். வீட்டில் இருந்து அவருக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு செல்வார். அம்மிச்சிக்கு சப்பாத்தி என்றால் ரொம்ப பிடிக்கும். பல் போன பிறகு கூட அந்த பொக்கைவாயில் சப்பாத்தி மென்றதை நான் பார்த்து இருக்கிறேன். 

இப்போதும் அப்பா மற்றும் சித்தப்பாக்கள் மீது இது தான் எனக்கு வருத்தம், அம்மிச்சி இருந்த வீட்டுக்கு அருகில் தான் முவரும் குடி இருந்தார்கள் தவிர யாரும் அவரை அருகில் வைத்து பார்த்துக்க முன்வரவில்லை. எதனால் என்று இப்போது ஓரளவுக்கு யூகிக்க முடிந்தாலும் அவரை தனியாக சில காலங்கள் விட்டுவைததை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. 

அவர் தனியாக வாழ்ந்த காலத்தில் தான் எனக்கு இந்த கருப்பட்டி காபியின் சுவை தெரிந்தது. அம்மிச்சி பால் ஊற்றி எனக்கு காபி போட்டு கொடுத்தது இல்லை, எப்போது அங்கு சென்றாலும் வற காபிதான் கிடைக்கும், அதும் நரசுஸ் காபி தூள் பாகெட் சின்னதை தான் பார்ப்பேன். உடன் ஒரு பிஸ்கட் வாங்கிக்க சொல்லி ஒரு ருபாய் கொடுப்பார். மஞ்சள் நிறத்தில் சற்றே வட்டமும் இல்லாமல் நட்சத்திரம் வடிவிலும் இல்லாமல் நடுவில் சாந்து போல சிவப்பு கலரில் ஒரு பொட்டு இருக்கும்.  காபி ஒரு கப்பில் இருக்கிறது என்றால் இன்னொரு கையில் இந்த பிஸ்கட் இருக்கும், இரண்டும் வேறு வேறு சுவை இருந்தாலும் கொஞ்சம் காபி கொஞ்சம் பிஸ்கட் என்று சாப்பிடவும், குடிக்கவும் பிடிக்கும். நாங்கள் குடியிருந்த இடத்துக்கு அருகிலே  அவர் வசித்தது எனக்கு இந்த வகையில் நன்றாக உதவியது. கிரவுண்டில் விளையாடி கொண்டு இருப்பேன் காபி குடிக்கவேண்டும் என்று தோன்றினால் உடனே மதில் சுவர் ஏறி குதித்து அம்மிச்சி வீட்டுக்கு சென்றுவிடுவேன்.ஒரு முறை அப்பா அம்மா இருவரும் ஊருக்கு சென்று இருந்த சமயத்தில் எங்களை பார்த்துக்கொள்ள அம்மிச்சி வீட்டுக்கு வந்திருந்தார். அன்று சந்திர கிரகணம் சாயங்காலம் ஏழு மணிக்கே நாங்க சாப்பிட வேண்டும் என்று பச்சை பருப்பை கடைந்து  கொடுத்தார். அம்மிச்சிக்கு பாசி பருப்பு கடைந்து வைப்பது என்பது கைவந்த கலை, அவரின் குழந்தைகள் முதல் எங்கள் தலைமுறை வரைக்கும் அவரின் பாசிபருப்பு கடைந்து வைத்ததை சாப்பிடாமல் இருந்தது இல்லை.

பருவ வயது வருகிற போது நாம் பெரியோர்களை மதிப்பதே இல்லை, வீட்டில் இருப்பவர்கள் ஆயினும் சரி, வெளியே இருபவராயினும் சரி நமக்கு தான் எல்லாம் தெரியும் என்கிற மிதப்பில் இருப்போம். நான் மட்டும் அதற்கு விதிவில்லகா என்ன ? அம்மிச்சிக்கு  வயது ஆகா ஆகா கண்கள் சரியாக தெரியவில்லை என்று சொல்லி கொண்டு இருந்தார், நான் எப்போது அங்கு சென்றாலும் எனது கைகளை தடவி தடவி கொடுக்கும் அந்த கை பிறகு மற்றவர் உதவிக்காக ஏங்கியது. அம்மிச்சியின் கைகளில் பச்சை குத்தி இருப்பார் தோல் சுருங்கி அந்த பச்சை நிறத்து படங்கள் எல்லாம் என்ன படம் என்று சொல்ல முடியாத வர்ணமும், ஓவியமுமாக இருக்கும்.  நாள் ஆக ஆக அவரை பார்க்க தவிர்த்தேன், எப்போது சென்றாலும் எதையாவது சொல்லி குறைபட்டு கொண்டே இருக்கிறாரே என்கிற எரிச்சல், எப்போதும் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கும். வெளிப்புறத்தில் இருந்து அவர் அணித்து இருக்கும் கண்ணாடியை பார்த்தால் அவரின் இரண்டு கண்களும் பெரிது பெரிதாக இருக்கும். அந்த கண்ணாடி மோசமான நிலையில் இருக்கும்.  அம்மிச்சியை அந்த வீட்டில் நான் பார்க்கிற சமயங்களில் எல்லாம் வெளியே ஒரு  வயர்  சேரில் உட்கார்ந்து கொண்டு இருப்பார். ஒரு முறை சென்றிருந்து  போது  கீழே தடுக்கி விழுந்து முகம் எல்லாம் காயத்துடன் இருந்தார். பார்க்கவே ரொம்ப பரிதாபமாக இருந்ததும் அன்று இதை போல சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பிவிட்டேன்.
 
அம்மிசியால் மற்றவர் துணையின்றி எதுவும் செய்யமுடியாது என்கிற நிலை வந்தபோது தான் அவர் எனது சித்தப்பா வீட்டிற்க்கு வந்தார், இரண்டு சித்தப்பா வீட்டிலும் கொஞ்ச நாட்கள் இருந்தார்.  கல்லூரியில்  படித்து கொண்டு இருந்த போது ஒரு  முறை அம்மிச்சியை பார்க்க சித்தப்பா வீட்டிற்கு சென்றிருந்தேன், எப்போதும் போல் வீட்டுக்கு வெளியே அதே வயர் சேரில் அமர்ந்து கொண்டு ஏதோ யோசனையில் இருந்தார், கடந்த கால நினைவாக இருக்கலாம், சொந்தங்கள் சூழ்ந்து இருந்தும் அவர்கள் நம்மை தனிமையில் விட்டுவிட்டால்  அது  எவ்வளவு கொடுமையானது என்று எனக்கு பத்து வருடங்களுக்கு மும்பே தெரிந்துயிருந்தது, அவரோ எல்லாற்றையும் பார்த்தவர் பழைய  நினைவுகள் எப்படி எல்லாம் அவரை புரட்டி போட்டு இருக்கும் ?? அம்மிச்சி என்று குரல் கொடுத்தேன், நான் தான் என்று தெரிந்துகொண்டவர் எப்போதும் போல எனது கைகளை பற்றி கொண்டு என்னை பற்றி விசாரித்து கொண்டு எப்பொழுதும் போல அழுது கொண்டு இருந்தார்.. இப்போதும் இந்த செயல் எனக்கு எரிச்சல் தந்தது, ஏதேதோ சொல்லி அங்கு இருந்து கிளம்பிவிட்டேன்.. அது தான் அம்மிச்சியை நான் பார்த்தது கடைசியாக.... எங்கள் சந்திப்பு ஒரு மோசமான ஒரு சந்திப்பாக ஆனதை இன்று நினைத்தால் எவ்வளவு மோசமான ஒருவனாக நான் இருந்து இருக்கிறேன் என்று இப்போது தெரிகிறது. அம்மிச்சியை ஏன் அவ்வாறு நான் மதிக்காமல் சென்றேன் என்று இப்போதும் தெரியவில்லை.

 ஒரு நாள் காலையில் அப்பா போன் செய்திருந்தார், அம்மிச்சி திரும்ப கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்து விட்டது என்றார். ஆபரேஷன் செய்ய அவர் உடல்நிலை ஒத்துழைக்காத அந்த நேரத்தில் அவரை புத்தூருக்கு அழைத்து சென்றுள்ளர்கள். இந்த சம்பவத்துக்கு  பிறகு இரண்டொரு நாளில் அம்மிச்சி உடல்நிலை மோசமாக இருக்கிறது என்கிற செய்தி வந்தது. அக்கா, மாமா என்று ஊரில் இருந்த எல்லா உறவுகளும் சென்னைக்கு கிளம்பியது எனக்கு எக்ஸாம் இருந்ததால் என்னால் சென்னைக்கு செல்ல  முடியாமல் போய்விட்டது. அடுத்த நாள் அம்மிச்சி இறந்துவிட்டார் என்று அப்பா போனில் சொன்னார். அம்மிச்சியின் இறுதி சடங்குக்கு கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இதில் ஒரு கொடுமை அந்த தேர்வில் நான் தேர்ச்சி அடையவில்லை என்பது. 

ஆடி அம்மாவசை அன்று முன்னோர்களுக்கு திதி குடுக்கலாம் என்று தெரியும். இது வரை அதை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேனே தவிர வேறு ஒன்றும் நினைவுக்கு வந்தது இல்லை. இப்போது அடுத்த வருடம் கண்டிப்பாக அம்மிச்சிக்கு திதி  கொடுக்கவேண்டும் என்று நினைத்துள்ளேன்.  

அம்மிச்சி வாழ்ந்த வீடு விளாங்குறிச்சியில் இப்போதும்  இருக்கிறது அவ்வபோது அந்த வீட்டுக்கு உள்ளே செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் உள்ளே சுற்றி சுற்றி பார்ப்பேன், இது எங்கள் பூர்வீக வீடு என்கிற மிதப்பு அடிகடி வரும், அந்த வீட்டில் குடியிருக்கும் மனிதர்களை நான் நேசித்ததே இல்லை, அவர்களிடம் வெளியே சிரித்து பேசிக்கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் செயலில் காட்ட முடியாத கோபம்  இன்றும் இருக்கிறது. ஒரு நாள் கூட உறங்காத அந்த வீட்டை பற்றி எனக்கு இருக்கும் சந்தோசம் கர்வம் கோவத்தை விட  அப்பா சித்தப்பாவிற்கு எவ்வளவோ  இருக்கும். சென்ற வருடம்  செம்மொழி மாநாடுக்காக ரோட்டை அகலப்படுத்த அந்த வீட்டை பாதி அளவு இடித்துவிட்டார்கள், கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் ஏனோ அதன் சுவடு மாறியதில்  நிம்மதி. இடித்து கட்டியதில் அந்த வீட்டை கண்டுபிடிக்க சிரிது நேரம் ஆனதில் தெரிந்தது அந்த வீடு எப்போதும் எங்களுக்கு சொந்தமில்லை என்று.

இந்த நினைவுகள் எல்லாம் நான் ஏன் புரட்டி பார்க்கவேண்டும் ???

"ழ" காபே தான்  காரணம், பதிவர்கள் சந்திப்பில் குடித்த அந்த கருப்பட்டி காபி தான் அம்மிச்சி பற்றிய நினைவுகளை கிளறிவிட்டது.--
With Love
அருண் மொழித்தேவன் ;)