Friday, April 22, 2011

வெட்டுபுலி - தமிழ்மகன்
வரலாறு எவ்வளவு முக்கியம் என்பது வயது ஏற ஏற தான் தெரிகிறது. நாம சிறுவர்களாக இருக்கும் போது எங்க காலத்துல இப்படி இருந்தோம்ன்னு சொல்லுற பெருசுகளை பார்த்து மொக்கையா ஒரு சிரிப்பு சிரிச்சு வச்சுட்டு போயிட்டே இருப்போம். இப்போ யாராவது கொஞ்ச நேரம் அந்த மாதிரி பேசுவாங்களா இந்த ஏரியா இதுக்கு முன்னாடி எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சிக்க தோணுது. 

என்னோட பாட்டி இருந்த வரைக்கும் கொஞ்சம் பழைய கதையை சொல்லிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு பிறகு யாரும் நாற்பது ஐம்பதுகளில் தமிழ்நாடு எப்படி இருந்தது என்று சொல்லவில்லை.அதை பற்றி தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லாமல் இருந்தது.  அப்பா ஸ்கூல் படிக்கிறதுக்காக தினமும் அஞ்சு கிலோமீட்டர் நடந்து போயிட்டு வருவாராம். ரோடு வசதி எதுவும் இல்லாததுனால பத்தாவது வரைக்கும் நடந்தே போயிட்டு வருவாராம். புதரு மண்டிக்கு நடுவுல நரி இருக்குமாம். இந்த புத்தகம் படிச்ச பிறகு பாட்டி இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருந்து இருக்கலாம்னு தோணுது. இப்போ அப்பா பிறந்த இடம் ரொம்ப முன்னேறி இருக்கு.   இன்று நம் கண்முன் நடக்கும் ஒரு சம்பவம் என்பது நாளை நமது பேரன் பேத்திகளுக்கு வரலாறாக தெரிகிறது. சில சமயம் இந்த வரலாறு என்பது வாய் மொழியாக  அங்கே கேட்டேன் இங்கே கேட்டேன் என்று ஒன்று ஒன்பதாக திரித்து அதன் உண்மையான வடிவமே மழுங்கி போயிருக்கும். சம்பவங்களை வரலாறாக மாற்றிய பெருமை எல்லாம் ஊடகங்களுக்கே சேரும். இப்படி வரலாற்றை நாவல் வடிவமாக கொஞ்சம் புனைவையும் சேர்த்து கொண்டு நம்மை ஒரு காலச்சக்கரத்தில் ஏற்றி 1930 இருந்து 2000 ஆண்டு வரை முக்கிய நிகழ்வுகள் வாயிலாக இரு குடும்பத்தின் கதையை திராவிட கட்சியின் வரலாறை கொண்டு அட்டகாசமான நாவலை படைத்துள்ளார் ஆசிரியர் தமிழ்மகன்.இந்நுலின் ஆசிரியர் தமிழ்மகனுக்கு ஒரு பெரிய பூங்கொத்து  கொடுக்கவேண்டும். இந்நாவலுக்காக ஆசிரியருக்கு ஜெயந்தன் நினைவு செந்தமிழ் அறகட்டளை விருது கிடைத்துள்ளது அவருக்கு வாழ்த்துக்கள்.  ஒரு நூற்றாண்டில் நடந்த முக்கிய சம்பவங்களை ஒரே புத்தகத்தில் தாண்டி வருவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதை கொஞ்சம் சுருக்கி முக்கிய நிகழ்வுகள் வாயிலாக உண்மையுடன் கொஞ்சம் புனைவையும் சேர்த்து நமது சிந்தனையை அந்த காலகட்டத்தில் பயணிக்க வைத்துள்ளார். நாவலை முடிக்கும் போது தான் ஆசரியரின் முழு உழைப்பின் தாக்கம் வெளிவருகிறது. வெட்டுபுலி தீப்பெட்டியில் இருக்கும் படம் தனது தாத்தா தான் என்று சொல்லும் தமிழ் அவன் நண்பர்கள் பிரகாஷ் மற்றும் பெர்னாண்டஸ்சுடன் அதன்   பூர்வீகத்தை தெரிந்துகொள்ள புறப்படுகிறான்.நாற்பதில் ஆரம்பிக்கிறது கதை, தசராரெட்டி, அவர் மனைவி மங்கம்மா,இவர்களின்   வாரிசு லட்சுமணரெட்டி, ஜமிந்தார், அவர் மனைவி, படவேட்டான், ஜப்பான்காரன் குண்டு போடுவான் என்கிற பயத்தில் மயிலாப்பூரில் இருந்து வந்திருந்த அப்புசாமி,அவர் மனைவி, வெள்ளைக்காரன் ஜேம்ஸ் என்று சில மனிதர்களை கொண்டு அந்த காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஒரு அத்தியாயத்தில் சொல்லியுள்ளார். நாற்ப்பதுகளில் இருந்த பழக்கவழக்கம், சாலை வசதி, ரயில்வசதி,வட்டார வழக்கு பேச்சுக்கள்,கல்கத்தா செல்ல இருந்த வழித்தடம் என்று முதல் அத்தியாயமே அட்டகாசமாக ஆரம்பம். முக்கியமாக சின்னா ரெட்டி சிறுத்தை புலியை எப்படி கொன்றார் என்று மங்கம்மா சொல்லும் அந்த ஒரு இடம் போதும் நாவலை கொண்டாட. நம் கண்முன் அந்த சம்பவம் நடப்பதை போல மங்கம்மா முலம் விவரித்து இருக்கிறார். படிக்க படிக்க நெஞ்சு திக்கு திக்குன்னு அடித்து கொண்டு இருக்கும் அந்த ரெண்டு பக்கமும் சரியான திரில்லர் .
   

நாவலில் உள்ளே போக போக ஆச்சரியம் இன்னும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. திராவிட கட்சி இந்த நாவலில் முக்கிய ஒரு கதாபாத்திரமாக வருகிறது. நமக்கு எல்லாம் தெரியாத பல விஷயங்கள்  ஆங்காங்கே இணைத்துள்ளார். உதாரணத்துக்கு வேப்ப்ரியில் இருந்த காலி மனையை பெரியாருக்காக காமராஜர் மற்றவர்களிடம் பேசி போட்டி இல்லாமல் அவருக்கே விற்றது. அதில் கொஞ்ச இடத்தை பெரியாரிடம் இருந்து ஆதித்தனார் வாங்கியது. இப்படியான விஷயம் எல்லாம் ஆங் ஆங்கே உள்ளே நுழைத்து வரலாற்றை அழகாக ஒரு புனைவின் முலம் மனதில் பதிய செய்துவிட்டார். 


தசராரெட்டி குடும்பம் மற்றும் ஆறுமுக முதலியார் குடும்பங்களின் வாழ்க்கை தான் நாவலின் மைய ஓட்டம். இந்த குடும்பங்கள் கடந்து வந்த பாதையில்  திராவிட கட்சி வரலாறையும் சேர்த்து நாவல் படிக்கும் போதே திராவிட கட்சியின் வளர்ச்சியை சொல்லி உள்ளார். அதே போல பெரியாரின் கொள்கைகள் மற்றும் பார்ப்பான் எதிர்ப்பை இங்கே நன்றாக காண முடிகிறது.  

புத்தகத்தில் பெரியார் கொள்கையை உயர உயர பறந்து கொண்டு இருக்கிறது. சில இடங்களில் அண்ணாவும் பெரியாரும் நம்மிடம் பேசுவதை போல இருக்கிறது. பெரியாரை விட்டு பிரிந்து சென்ற பிறகு அண்ணா துவங்கிய புதிய கட்சி அதற்கு பெரியார் தான் தலைவர் என்று சொல்லும் இடம். அதை கொண்டு லட்சுமன ரெட்டிக்கும் மணி நாயடுக்கும் நடக்கும் வாதம் எல்லாம் நன்றாக இருக்கிறது. பெரியார் ஏன் அவர் கட்சியை விட்டு அண்ணாதுரை கட்சியில் சேரவேண்டும் ?? காங்கிரஸ் கட்சியை எதிர்த்த பெரியார் பிறகு ஏன் அதை ஆதரித்தார்?? ஜஸ்டிஸ் பார்ட்டியை எதிர்த்த அண்ணா தனி கட்சி தொடங்கிய  பிறகு எதற்கு அதை ஆதரித்தார் ??  இப்படி நிறைய கேள்விகளை எழுப்பி அதற்கு ஒரு பதிலையும் கொடுத்துள்ளார். 

நாற்பதுகளில் சினிமா எப்படி இருந்தது, தற்போது எப்படி இருக்கிறது அன்று இருந்த கொட்டாய், சினிமா செட், ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் எல்லாம் சூப்பர் ஸ்டாரா இருந்தார்கள். படங்களை எப்படி தயாரித்தார்கள். முதலில் வள்ளி திருமணம் என்று கடவுள் படங்களை எடுத்து வந்த சினிமா எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தனது நிறத்தை மாற்றியது பாய்ஸ் கம்பெனி, ராமசந்திரன், சிவாஜி, பாலசந்தர், ஸ்ரீதர், ரஜினி, கமல் அறிமுகங்கள் அட்டகாசம்..   
அறுபதுகளில் தமிழகம் என்ன என்ன மாற்றங்களை சந்தித்தது அரசியலில் காங்கிரஸின் வீழ்ச்சி, திமுகவின் எழுச்சி, அண்ணா முதலமைச்சர் ஆனது, மின்சாரம் குக்கிராமத்தை எல்லாம் தொட்டு கொண்டு இருந்தது,,  இப்படி ஒரு எல்லா விஷத்தையும் நாவலின் உலாவும் கதாபாத்திரங்கள் முலம் அழகாக சொல்லி இருக்கிறார். 


நாவலில் சில இடங்களில் குறைகள் இருக்கிறதை செல்லவேண்டும். பெரியார் மற்றும் திமுக பற்றி அதிகமாக பேசியுள்ளதால்  இது அரசியல் புத்தகம் போல ஒரு தோற்றத்தை தருகிறது. அதே போல திமுக வரலாறு பற்றி சொல்லிய அளவிற்கு ஆதிமுக பற்றி அதிகமாக சொல்லவில்லை. தியாகராஜன் வாழ்க்கை முலம் கட்சி கொள்கைகளை வீட்டிற்குள் கொண்டு வந்தால் என்ன விளைவுகளை சம்பாதிக்க வேண்டி வரும் என்று விவரித்துள்ளார். 
   

கொசுறு செய்தி:- இந்த வெட்டுபுலி தீப்பெட்டி கம்பெனி விம்கோ எங்கள் வீட்டுக்கு அருகில் தான் இருக்கிறது. 


வெட்டுபுலி 
ஆசிரியர்-தமிழ்மகன்
உயிர்ம்மை
11/29 சுப்பிரமணியன் தெரு
அபிராமபுரம்
சென்னை-600018.
தமிழ்நாடு
Tele/fax: 91-44-24993448
e-mail: sales@uyirmmai. comஆன்லைனில் பெற http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=262


-- 
With Love
Romeo ;)

Tuesday, April 5, 2011

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - வா.மு.கோமு

கொஞ்ச நாளுக்கு முன்னாடி விஜய் டிவில 16 படம் போட்டாங்க. ரொம்ப ஆவலா அந்த படத்தை பார்த்து கடைசீல த்துதூ துப்பிட்டு போனேன். படம் அவ்வளவு கேவலமா இருந்துச்சு, அதும் அந்த கிராமத்தில் வளர்ந்த காதல் கதை சுத்த கொடுமை. அந்த சின்ன பொண்ணு பேசுற டயலாக் கேட்டு கேட்டு என்னோட மண்டைய நல்லா சொரியவிட்டங்க, ஓவர் காண்பிடன்ஸ் அந்த படத்தோட டைரக்டருக்கு எப்படி படம் எடுத்தாலும் மக்கள் அதை ரசிப்பாங்கன்னு நினைச்சிட்டாரு போல அதான் படம் ஊத்திகிச்சு. இப்படி தான் இருக்கு சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும். கொஞ்சம் விரிவா உள்ள பார்க்கலாம் வாங்க.  

பழனிச்சாமியின் காதல் மற்றும் காமத்தின் நினைவு குறிப்புதான் இந்த நாவல். இதை முழு நீள நாவல் என்று சொல்வதைவிட ஒரு குறுநாவல் மற்றும் சில சிறுகதைகள் என்று சொல்லலாம்.   

பழனிச்சாமி பள்ளி கூடத்தில் படிப்பதில் இருந்து ஆரம்பிகிறது சந்தாமணியுடனான காதல் கதை. விரட்டி விரட்டி சாந்தமணியை காதலிக்கிறான் முதலில் பயந்து ஒதுங்கும் சாந்தா பிறகு அவன் பக்கம் சாய்கிறாள். இருவரும் லவ்வோ லவ்வுன்னு லவ்வுறாங்க அடிகடி காதல் கடிதங்கள் பரிமாறி கொள்கிறார்கள்.  இப்படி இருந்த அவர்களின் தெய்வீக காதல் ஒரு கட்டத்தில்  புட்டுக்குது அது ஏன் எதானால் எப்படி என்று நீட்டி  முழங்கி இருக்கும் கதையே சாந்தாமணியின் அத்தியாயம். பழனிச்சாமியின் நண்பன் சக்தி, அவனுக்கு ஒரு காதலி பெயர் பூங்கொடி. இவர்கள் காதல் ட்ராக் ஒரு பக்கத்தில் சென்றுகொண்டு இருக்கிறது, ஒரு கட்டத்தில் பூங்கொடியின் தொல்லை தாங்காமல் சக்தி அவளிடம் இருந்து பிரிந்துவிடுகிறான். கடைசியாக பூங்கொடியிடம் பேசும் வசங்கள் எல்லாம் நச்சு. ரொம்ப உண்மையான வார்த்தைகளா  இருக்கிறது அதில், எந்த ஒரு காதலியும் தனது காதலன் தன் சொல் கேட்டு நடக்கவேண்டும் என்றே நினைக்கிறார்கள். அதற்காக எது வேண்டுமானாலும் செய்வதற்கு துணிந்து விடுகிறார்கள், பலர் அவனை பயமுறுத்தியே காரியத்தை சாதித்து கொள்கிறார்கள். இதை நச்சுன்னு எழுதி இருக்காரு, இந்த அத்தியாயத்தில்  எனக்கு பிடிச்ச பகுதி சக்தி பூங்கொடி கிட்ட பேசுற இடம் தான். 

சாந்தாமணி தங்கை சுகந்தி.. இவ்வளவு அபத்தமான ஒரு கதாபாத்திரத்தை இது வரை பார்த்தது இல்லை. மச்சானுக்காக எதுவேண்டும் என்றாலும் செய்ய காத்துகொண்டு இருக்கிறாள்.  மலை கோவிலுக்கு செல்லும் போது பழனிசாமியை தூக்க வைத்து அவள் செய்யும் அழிச்சாட்டியம் எல்லாம் புத்தகத்தில் தான் படிக்க முடியும். ஸ்கூல் படிக்கும் பெண்ணிற்கு இவ்வளவு அறிவு கூடாது ஆசிரியரே, அந்த சம்பவத்தை படிக்க படிக்க சிரிப்புதான். சுகந்தி கதாபாத்திரத்தை வைத்து காம விளையாட்டு ஆடியிருக்கிறார்  வா.மு.கோமு.  


இந்த முதல் அத்தியாயம் முற்றிலும் கோணல் என்றே சொல்லலாம். பள்ளியில் படிக்கும் காலத்தில் நடந்த காதல் கதை என்று எழுதி இருந்தாலும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் எல்லாம் ரொம்ப மெச்சுரிட்டியாக இருக்கிறது. இதுவே போதும் புத்தகத்தின் தரத்தை குறைப்பதற்கு. அடுத்து காதல் கடிதங்கள் என்கிற பெயரில் இருக்கும் அறுவை பக்கங்கள். சொன்னதயே திரும்ப திரும்ப சொல்வதை போல வார்த்தைகள் மட்டும் இடம் மாற்றி இருக்கிறது. கொடுமை சுகந்தி கூட பழனிச்சாமிக்கு கடிதம் தந்துவிடுகிறாள். சாந்தாமணி காதல் கதை கல்லூரியில் நடப்பதை போல இருந்தாளாவது அவர்கள் பேசிக்கொள்வதை கொஞ்சம் நம்பலாம். இதற்கு நடுவில் பழனிச்சாமிக்கு ஜான்சி மீது ஒரு கண். அவளும் அதே போல தான் இருக்கிறாள் அதாவது இங்கே இருவரிடமும் தெய்வீக காதல் இல்லை இருப்பது காமம் மட்டுமே எப்போ டைம் கிடைக்கும் மேட்டர் பண்ணலாம் என்கிற நினைப்பிலே இருகிறார்கள். பதின்மவயதில் ஏற்படும் காதல் எவ்வளவு அடிவாங்கும் என்று ரெண்டு பேர் பக்கத்தில் இருந்து சொல்லி இருக்கிறார். சொன்னதையும் சொன்னார் கொஞ்சம் சுவாரசியமாக சொல்லி இருக்கலாம்ல முதல் அத்தியாயம் நீண்டு கொண்டே செல்கிறது. அதும் அந்த காதல் கடித பக்கங்கள் எல்லாம் ஓவர் டோஸ் நடுவில் கவிதை வேறு. 

இந்த குறைகளாலே பக்கங்களை அலுப்புடன் நகர்த்தவேண்டி இருக்கிறது. கதையை சாதாரண மொழி நடையில் எழுதி இருந்ததால் வந்த வினையோ என்று நினைக்கிறன். இதுவே கொங்கு தமிழில் எழுதி இருந்தால் சுவாரசியம் கூடி இருக்கும், கள்ளியின் கையாண்டு இருந்த கதைகளம் தான் இதிலும் கையாண்டு இருக்கிறார் அதே போல கொங்கு தமிழிலே கதையை நகர்த்தி கொண்டு சென்றிருந்தால் கண்டிப்பாக கள்ளி இரண்டாம் பாகம் என்று நினைக்கும் அளவுக்கு புத்தகம் வந்து இருக்கும் பச் அது இல்லாமல்  கொஞ்சம் போலவே கொங்கு தமிழை பயன்படுத்தியது மிக பெரிய சறுக்கல். கள்ளியில் கையாண்டு இருந்த அந்த நக்கல் நையாண்டி இதில் மொத்தமாக தொலைத்து போயிருக்கிறது.


அடுத்த அத்தியாயம் இன்ன பிற காதல் கதைகள் 


இந்த பகுதியில் வருவது பழனிச்சாமி கரெக்ட் பண்ண பெண்கள், பெண்மணிகள், அவனை கரெக்ட் பண்ண பெண்கள் பெண்மணிகள் அப்பறம் அவன் நண்பர்கள். 

பழனிச்சாமி மோடா குடிகாரனாய் இருக்கிறான் எப்பொழுதும் தண்ணி போட்டு கொண்டே இருப்பதுதான் வேலை கூடவே பெண்களையும் !!!

கீதா,பெல்லா, சுமதி, ஷாலினி,மீனா, வால்பையன் என்று லிஸ்ட் நீண்டு கொண்டு செல்கிறது. பெண்கள் பெயரில் வரும் அத்தியாங்கள் எல்லாம் முதலிலே தெரிந்து விடுகிறது பழனிச்சாமி மேட்டர் பத்தி தான் இருக்கும் என்று, நமது எண்ணத்தை அவ்வாறே நிறைவேற்றி விடுகிறார். செல்போனில் நடைபெறும் காம உரையாடல்கள் எல்லாம் கிளு கிளுப்பை தருகிறது. இரண்டு முன்று நபர்களிடம் இவ்வாறு போனில் கடலை போடும் விதம் எல்லாம் உண்மைகள் நடந்தவைகளே என்று நம்ப தகுந்த வட்டாரதில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன. 

கீதா என்கிற பெண்ணிற்கு எழுதி இருக்கும் கடிதத்தில் தன்னை எப்படி எல்லாம் அவர் அலைகழித்தார் என்று சொல்லி இருக்கிறார். இந்த பெண்ணை போல ஒரு சில பெண்களை நான் கோவையில் சந்தித்து இருக்கிறேன். ஒரு நாள் ஒருத்தனுடன் உடலை ஒட்டி கொண்டு வருபவள் அடுத்த நாள் வேறு ஒருவனுடன் அதே போல வருவாள். இப்படி ஆளை மாற்றி மாற்றி வரும் சில பெண்களை கரெக்ட் செய்வதற்கே சில அல்ல கைகள் அங்கு சுற்றி கொண்டு இருக்கும். தூண்டில் போடாமலே மீனை பிடிகிறது எப்படி என்று அவர்களிடம் தான் கேட்கவேண்டும். இரண்டொரு நாளில் அவனுடன் கிராஸ்ரோட்டில் இருவரும் கைகோர்த்து நடப்பதை பார்த்தால் தெய்வீக காதலர்கள் போல தெரிவார்கள். என்னை பார்த்த உடனே ரெண்டும் பம்பிட்டு அப்படியே எஸ் ஆகிடும்.  

வால்பையன் ஒரு அத்தியாயத்தில் வருகிறார், இருவரும் போனிலே ஒருத்தர் மாற்றி ஒருத்தர் ஆபாச ஜோக் சொல்லி அடித்து விளையாடுகிறார்கள். அந்த அத்தியாயம் முழுக்க ஜோக்குகள் சாரமாரியாக வந்து சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.    


செல்போன் வைத்து என்ன விதை எல்லாம் காட்டலாம் என்று பல அத்தியாங்களில் சொல்லி இருக்கிறார். மீனாகுட்டி ஆகட்டும், பத்மப்ரியா ஆகட்டும் எல்லோரிடமும் கடலை போட்டுக்கொண்டே இருக்கிறார். இரண்டாம் பாகத்தில் எல்லா பெண்களிடமும் இப்படியே பண்ணி கொண்டு இருப்பதை படிக்க படிக்க அயர்ச்சியாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் நாம விளக்கு புடிக்கிறது :(.  இதை எல்லாம் தாண்டி வந்தால் கடைசில் இருக்கிறது மிக பெரிய ஆப்பு. இவ்வளவு கேப்மாரிதனத்தை பண்ணிவிட்டு புரசியாளன் கணக்காக ஜெயாவை கல்யாணம் பணிகொள்கிறது எல்லாம் தமிழ் சினிமாவில் கடைசில் சீன்ல போலீஸ் வருவதை போல இருக்கு. 

சாரு புத்தகத்தை வெளியே எங்கு சென்று படித்தாலும் மடியில் வைத்தே படிக்க வேண்டி இருக்கும்.அதே போலதான் வா.மு.கோமு புத்தகங்களையும். கொஞ்சம் ஏமாந்தாலும் பொதுவில் நமது மானம் கப்பல் ஏறிடுமோ என்கிற கவலைவருகிறது. அதற்காகவே இன் பண்ணி இருந்த சட்டையை வெளியே எடுத்து விட்டு படிக்கவேண்டி இருக்கு. 


புத்தகத்தை பற்றிய எனது கருத்து மட்டுமே எழுதி இருக்கிறேன். நீங்கள் புத்தகத்தை படித்து அதை ஆஹா ஓஹோ என்று பாராட்டினால் அதற்கு வா.மு.கோமு  கம்பெனியே பொறுப்பு. சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - வா.மு.கோமு

உயிர்மை பதிப்பகம் 
11/29 சுப்பிரமணியன் தெரு,
அபிராமபுரம்
சென்னை -600018.
தமிழ்நாடு
இந்திய
Tele/fax: 91-44-24993448
e-mail: sales@uyirmmai. com ஆன்லைனில் வாங்க --
With Love
Romeo ;)