Wednesday, October 27, 2010

உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்

சாவு வீட்டுக்கு சென்றால் அந்த வீட்டில் இருந்து வரும் அழுத்தமான அழும் குரலை கேட்கும் போது மனசை ஏதோ செய்யும். இறந்தவரை பற்றி சிலர் பேசிக்கொண்டு இருப்பார்கள், அவரின் கடந்த காலம், அவர் செய்த நல்லது கெட்டது எல்லாம் அங்கே அசை போட்டு கொண்டு இருப்பார்கள். இந்த சாவு நமது வீட்டில் நடந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று சில நிமிடங்கள் பயம் கலந்த நினைப்பு வருவதை நிறுத்த முடியாது. 2006 என்று நினைக்கிறன் தம்பி, நண்பன், உறவுக்காரர் ஒருவர் என்று அடுத்து அடுத்து சில மரணங்களை சந்தித்த போது அடுத்தது யாராக இருக்கும் என்று எனக்குள் நிறைய கேள்வி கேட்டுக்கொண்டேன். ஒரு கட்டத்தில் நண்பன் ஒருவனுக்கு போனில்  புலம்பினேன் மச்சான் அடுத்து யார்ன்னு தெரியலடா மாசம் ஒண்ணுன்னு  மூணு மாசமா தொடர்ந்து யாரவது செத்துட்டு இருக்காங்க அடுத்து யார்ன்னு தெரியலன்னு புலம்பினேன். ஒரு கட்டதில் அது நானாக இருந்தால் என்கிற நினைப்பு வந்து இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் கெடுத்து தொலைத்தது. அடுத்த  மாதம் எந்த சாவும் விழாததால் கொஞ்சம் கொஞ்சமாக சாவு பயத்தில் இருந்து விலகினேன்.

ஒரு மனிதன் தன் வாழ்கையில் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று நினைத்து அதன்படி வாழ்ந்து உள்ளான் ? அல்லது உங்களிடமே இந்த கேள்வியை கேட்டு பாருங்கள் இந்த சமயம் நான் இப்படி வாழ நினைக்கிறேன் அதை செய்வதால் என்ன லாபம் அல்லது நஷ்டம்  என்று நினைத்து கூட பார்க்காமால் அதை உடனே செய்துவிடுவது என்று ஒரு நாளாவாது அதை செய்தது உண்டா!!!  ஆனால் இந்த நாவலில் வரும் சம்பத் இந்த சமயம் இதை செய்யபோகிறேன்  என்று தனக்கு தானே முடிவு செய்து  அதன்படி  நடப்பவன். தனக்கு தோன்றியதை  சரியா தவறா அதனால் மற்றவர்கள் பதிப்பு அடைவார்களா என்று ஒரு கணமும் யோசிக்காமல் செய்பவன். நாவலை முழுவதும் படித்து முடிப்பதற்கு முன்பே நாம் ஏன் சம்பத்தை போல இல்லை என்கிற எண்ணம் தோன்றுவதை நிறுத்தமுடியவில்லை. 


சம்பத் இறந்துவிட்டான் என்கிற செய்திவுடன் நாவல் தொடங்குகிறது.அழகர், சம்பத், ராமதுரை, மாரியப்பன் மற்றும் யாமினி எல்லோரும் ஒரே கல்லூரியில் வகுப்பில் தமிழை முதல் பாடமாக படித்தவர்கள். முதலில் அழகர் முலமாக சம்பத் பற்றிய நினைவுகள் விரிகிறது. பிறகு ராமதுரை, மாரியப்பன், சம்பத் மனைவி ஜெயந்தி, யாமினி என்று இவர்கள் முலமாக சம்பத்தின் கடந்த கால வாழ்கையை தெரிந்து கொள்ள முடிகிறது. 

நண்பர்கள் மூவருக்கும் சம்பத் மீது அன்பு இருந்தாலும் அவனை தூரத்தில் வைத்து தான் பார்க்கிறார்கள். அழகருக்கு சம்பத்தை பிடித்து இருந்தாலும் அவன் சம்பத்தை அவ்வளவு நெருக்கத்தில் வைத்து பார்த்து கொண்டது இல்லை. அது சம்பத் செய்த சில செயலுக்காக கூட இருக்கலாம். அழகரின் திருமணத்திற்கு கலந்துகொள்ள விருப்பம் இல்லை என்று அவன் திருமண தினத்தில் ஒரு தந்தி அனுப்புகிறான் சம்பத். ராமதுரை மட்டுமே அவ்வபோது சம்பத்தை அரவணைத்து செல்கிறான். யாழினி அவனுக்கு சில உதவிகளை செய்கிறாள். ஜெயந்தி அவனை தோளோடு அணைத்து கொண்டு அவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஆட்டு குட்டியை போல செல்கிறாள்.  

தன்னை ஒருவரும் நெருங்க முடியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துகொண்டு செய்கிறானா அல்லது அவன் ஒரு பைத்தியகாரனா என்று தோன்றும் அளவில் இருக்கிறது அவன் செயல்கள். அவனை ஹீரோ என்பதா அல்லது ஜீரோ என்பதா என்று நாவல் முடிந்த பிறகும் மனதுக்குள் சண்டை போட்டு கொண்டு இருக்கிறது.

சம்பத் தேர்ந்தெடுத்த அரசியல்வாதி போல இருக்கிறான், ஒரு நல்லா விற்பனையாளன் போல செயல்ப்படுகிறான், ஒரு தொழில் அதிபர் போல நர்சரி வைத்து பராமரிக்கிறான், சம்பத்துக்கு எது செய்தாலும் அதில் ஒரு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து செயல்படுகிறான் ஆனால் எந்த ஒரு செயலையும் முழுவதுமாக செய்து முடிக்கமாட்டான். அரசியலாக  இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி அல்லது காதலியாக இருந்தாலும் சரி பாதிலையே கழற்றி விட்டுவிடுவான். சம்பத் அவன் வழியில் சென்று கொண்டு இருந்தான் என்று தான் சொல்லவேண்டும். ஜெயந்தியிடம் சம்பத் பலமுறை கேட்க்கும் ஒரே கேள்வி என்னை பைத்தியம்ன்னு நினைகிறாயா??? அதற்கு அவள் கண்ணீரோடு இல்லை என்கிறாள். 

காலம் தான் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது, கல்லூரியில் படிக்கும் போது வகுப்புக்கு கருப்பு சட்டை அணிந்து வந்து ஆசிரியரை எதிர்த்து பேசிய நாத்திகவாதி சம்பத் பிறகு தனது செயல்களுக்காக கன்னியாஸ்திரி ஒருவரிடம்  காலை பிடித்து மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கெஞ்சுகிறான்!! சம்பத் எதை நோக்கி செல்கிறான் என்றே தெரியவில்லை, கால்போன போக்கில் வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறான். ஜெயந்தியை கூட ஒரு நாள் விட்டு செல்ல துணிந்துவிடுகிறான். 

  
ஆசிரியர் நாவலை கொண்டு சென்ற விதம் வெகு அருமை, ஒவ்வொரு கதாபாத்திரமும்  அவர்களின் வாயிலாக சம்பத்தை பற்றி விவரித்த விதம் சிம்ப்ளி சூப்பர். நாவலை படிக்க ஆரமித்த முதல் முடியும் வரை கீழே வைக்கவே முடியவில்லை அந்த அளவுக்கு சம்பத் அடுத்து என்ன செய்து இருப்பான் என்கிற கேள்வியை நோக்கியே நாவல் நகருகிறது. கொஞ்சமும் அயர்ச்சி தராத எஸ்.ரா அவர்களில் வார்த்தை ஜாலங்கள் பற்றி என்ன சொல்ல!!!

வரும் புத்தக கண்காட்சியில் நீங்கள் வாங்க நினைக்கும் புத்தகங்களின் வருசையில் கண்டிப்பாக இதையும் சேர்த்து கொள்ளுங்கள். 

படித்து பாருங்கள் புத்தகத்தை பற்றி நான் எழுதியதை விட பண்மடங்கு மேலான எண்ணத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவீர்கள்.

உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன் 
விலை- 75
உயிர்மை வெளியிடு
சென்னை 

--
With Love
Romeo ;)
7 comments:

 1. உறுபசி படித்திருக்கிறேன்
  நான் படித்த எஸ்.ரா வின் முதல் நாவல்
  காலம் குறித்த கேள்வியை எழுப்பும் நாவல் ,காலம் நம் வாழ்வில் எவ்வாறெல்லாம் கோலமிடுகிறது என்று சிந்திக்க தூண்டியது
  இந்நாவலில் எந்த ஒரு சந்தோசமான செய்தியையும் பார்க்கமுடியாது
  இதன் பிறகு எஸ்.ரா வை தொடர்ந்து படித்து வருகிறேன்
  நினைவு படுத்தியமைக்கு நன்றி

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. நல்ல விமரிசனப் பகிர்வு. சமீபத்தில்தான் படித்தேன்.

  ReplyDelete
 4. நான் இன்னும் படிக்கலை,வாய்ப்பு கிடைத்தால் படிக்கிறேன்.

  ReplyDelete
 5. இன்னும் படிக்கவில்லை. வாங்கிப் படித்து விடுகிறேன்.

  ReplyDelete
 6. தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

  ReplyDelete