Wednesday, March 21, 2012

திரைச்சீலை - ஓவியர் ஜீவா

இப்பவும் அடிகடி வந்து போகும் நினைவுகளில் ஒன்று அம்மா, அண்ணன், தங்கையுடன் பார்த்த ஆடிவெள்ளி படம். சின்ன வயசில் பார்த்த படங்களில் நினைவில் இருக்கும் ஒரே படம். கொஞ்சம் விபரம் தெரிய ஆரமித்த வயதில் பார்த்த படங்கள் வருசையில் நண்பர்கள் படத்தை அப்பாவுடன் பார்த்தது மட்டும் நினைவில் இருக்கிறது, எண்ணூர் கீதா தியேட்டரில் அப்பாவுடன் பார்த்த ஒரே படம். பள்ளியில் உடன் படித்த நண்பர்களுடன் முதல் முதலில் ஸ்கூல் கட் அடித்து பார்த்த படம் இருவர். உட்லண்ட்ஸ் தியேட்டரில் பார்த்தது அப்போது ஒன்பதாவது படித்து கொண்டு இருந்தேன். பின்வந்த நாட்களில்  கட் அடித்து பார்த்த படங்கள் எண்ணிகையில் கூடி கொண்டே போனது. எங்களில் முதல் ஸ்பாட் தேவி தியேட்டர். அங்கே ஏற்கனவே பார்த்த படங்கள் இருந்தால் அடுத்து சாந்தி மற்றும் அண்ணா தியேட்டர் அங்கேயும் புது படம் இல்லை என்றால் பக்கத்தில் இருக்கும் பொட்டி கடையில் தினத்தந்தி பேப்பர் வாங்கி எந்த தியேட்டரில் என்ன படம் ஓடுது, எங்கே போகலாம் என்று கூட்டு களவாணி நண்பர்கள் முடிவு செய்வோம். எந்த தியேட்டர் என்றாலும் ஆறு ருபாய் டிக்கெட் தான் எங்கள் இலக்கு. எவ்வளவு பணம் இருந்தாலும் சரி இந்த ஆறு ருபாய் டிக்கெட் வாங்க வருசையில் நசுங்கி, சட்டை எல்லாம் கசங்கி ஸ்கூல் க்ரவுண்ட்ல விளையாடியிருந்தால் கூட அவ்வளவு  அழுக்கு ஆகி இருக்காது அப்படி ஒரு நிலைமையில் சட்டை பேன்ட் இருக்கும். அண்ணா விட்டா உட்லண்ட்ஸ், அங்கே இல்லையா சத்யம், அங்கே இல்லையா ஆனந்த். சில சமயம் டிக்கெட் கிடைக்காமல் ஹிந்தி படத்திற்கு போனது உண்டு. அந்த வகையில் ஷாருக்கான் நடித்த பர்தேஸ் படத்தை தேவிபாரடைஸ் தியேட்டரில் ஐந்து முறை பார்த்து இருக்கிறேன். கெயிட்டி, காசினோ தியேட்டர் பக்கம் எல்லாம் ஸ்கூல் யுனிபாம் போட்டு கொண்டு போக முடியாதப்படி ஒரே  பிட்டு  படங்கள் தான் ஓடி கொண்டு இருக்கும். காலேஜ் படிக்கும் போது கரெக்டா பாளோ பண்ணி முதல் நாளே பார்க்க வேண்டிய படத்தை குறித்து கொண்டு கோவையில் கங்கா தொடங்கி கேஜி, சாந்தி வரைக்கும்  சுற்றிய நாட்கள் அதிகம். 

இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன் குசேலன் படத்தில் வரும் சினிமா சினிமா பாட்டை கேட்டு விடுங்கள். ஏன்னென்றால் இந்த புத்தகம் முழுக்க சினிமாவை தவிர வேறு ஒன்றும் இல்லை. 

ஒரு படத்தை பற்றி விமர்சனம் செய்யும் போது அது மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் படி எழுதவேண்டும். உலக படத்தை பற்றி எழுதும் போது அதில் மிக கவனமாக இருந்தால் தான் உங்கள் கட்டுரைகள்/விமர்சனங்கள் சேர வேண்டிய இடத்தில சென்றடையும். அந்த வகையில் இந்த புத்தகம் எளியவரும் புரிந்து கொள்ள முடியும்படி எழுதி இருக்கும் ஓவியர்.ஜீவா அவர்களை ஒவ்வொரு கட்டுரைக்கும் பாராட்டலாம். 





தான் ரசித்த படங்கள், பாடல்கள், மனிதர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு தான் திரைச்சீலை வடிவில் வந்துள்ளது. 37 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. உலக படங்களில் இருந்து உள்ளூர் சினிமா வரை அலசி இருக்கிறார். ஞாபகசக்தி என்பது எவ்வளவு பெரிய வரம் என்பதை என்னை போன்ற மறதி ஆட்களுக்கு தான் புரியும். எவ்வளவு படங்கள், எவ்வளவு மனிதர்கள் எத்தனை மேற்கோள்கள் எப்படி இவர் இத்தனையும் நினைவில் வைத்துகொண்டு இருந்தார் என்பதே மலைப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் ஒரு செய்தியை சொல்கிறது. தலைப்பும் வித்தியாசமாக இருக்கிறதால் உள்ளே என்ன விஷயம் இருக்கும் என்கிற ஆவலை தூண்டி விடுகிறது. உதாரணத்துக்கு மண்டையோட்டில் டாலர் தேடிய மகாமுனி, மூச்சு, பின்பக்க ஜன்னலும் மூன்றாவது கண்ணும், கனவின் மாயா லோகத்திலே இப்படி வித்தியாசமாக இருந்தாலும் கட்டுரைகளை படித்து முடித்து தலைப்பை திரும்ப ஒருமுறை படித்து பார்த்தால் முழு கட்டுரையும் ஒரே வரியில் சொல்லிவிட்டாரே என்று தான் நினைக்க தோன்றும்.

ஒரு படத்தை பற்றி படிப்பதற்கு முன் கொடுக்கபட்டுள்ள  தகவல்கள் ஆச்சரியம் தருகிறது. உதாரணத்துக்கு முதல் கட்டுரையான  The Good, The Bad, The Ugly படத்தை பற்றியது. கவ்பாய் படங்கள் பற்றிய நீண்டதொரு பார்வை, கவ்பாய் படங்களில் வெற்றி பெற்ற இயக்குனர்கள், தமிழில் எடுக்கப்பட்ட கவ்பாய் படங்கள். ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் படங்கள், ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் என்கிற பெயர் எப்படி வந்தது, அகிரா குரசோவின் படங்கள் எவையெல்லாம் வெஸ்டர்ன் படங்களாக தயாரிக்கபட்டது. இப்படி ஏகப்பட்ட தகவல்களை படித்து கொண்டே சென்ற பிறகுதான் The Good, The Bad, The Ugly படத்தை பற்றிய கட்டுரை தொடங்குகிறது. 1968ட்டிலே ஆங்கில படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து இருக்கிறார்கள். இந்த படத்தின் பெயர் மண்டையோட்டில் டாலர் தேடிய மகாமுனி. 

தூரத்தே எறியும் நெருப்பு என்கிற கட்டுரை அடுத்த ஆச்சரியத்தை தருகிறது. முழுக்க முழுக்க பாடல்கள் பற்றிய கட்டுரை. ஹாலிவுட்டில் ஆரமித்து ஹிந்திக்கு வந்து கடைசியாக தமிழில் முடியும் அருமையான தொகுப்பு. வெள்ளி திரையில் முதல் முதலில் வெளி வந்த பாடல்கள் என்று ஆரமித்து ஹிந்தியில் கோலோச்சிய இசை மன்னர்கள் குறிப்புக்கள் படிக்கும் போது  ஆசிரியர் சினிமா மீது வைத்திருக்கும் தீரா காதல் நமக்கு புரிகிறது. முக்கியமாக அந்த காலத்தில் ஹிந்தி படங்களில் வெளிவந்த பாடல்களை மொழி புரியாவிட்டாலும் சென்னையில் அந்த பாடல்களுக்காகவே ஆட்டம் போட்ட நாட்கள். எந்த படம் இங்கே சக்கை போடு போட்டது மொழிகளை கடந்து தமிழ்நாடு மக்கள் எப்படி அந்த படங்களை கொண்டாடினார்கள் என்று விரிந்து கொண்டே இருக்கிறது.

வன்முறை படங்களை வருசை படுத்தும் சிட்டி ஆப் காட்ஸ் படங்கள் ஒரு பக்கம் என்றால் டைம்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த நுறு படங்களில் ஒன்றான குருதத்  படத்தை பற்றிய கட்டுரையை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியவில்லை. மிக கனமான அந்த படைப்பை போலவே  கட்டுரையும் உள்ளது.

உள்ளங் கவர் நாடோடி என்கிற தலைப்பில் சார்லி சாப்ளின் பற்றிய கட்டுரையில் சிட்டி ஆப் லைட்ஸ் படத்தை இந்திய சினிமாவில் யார் எல்லாம் நகல் எடுத்துள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு படத்தின் தீம் எப்படி இன்னொரு படத்தில் எடுத்து கொண்டு அதை எப்படி மாடுல் செய்கிறார்கள் என்று இவர் தந்து இருக்கும் படங்களின் வருசையில் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.


தனி மனிதர்களை கொண்டாடிய கட்டுரைகள் அற்புதம்.  நடிகர் திலகம் சிவாஜி, இயக்குனர் அகிராகுரசோவா, மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன், டைரக்டர் ஸ்ரீதர், நடிகர் சார்லி சாப்ளின். இவர்களில் மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் அவர்களை தலையின் மேல் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கிறார்.   

சிவாஜி பற்றிய கட்டுரையின் கடைசியில் வரியில் இப்படி சொல்லி இருப்பார் "தமிழ் மக்கள் மனதில் நடிப்பு என்ற வார்த்தைக்கு ஒரே அர்த்தம் சிவாஜி கணேசன்". இந்த கட்டுரையை நான் எழுதி கொண்டு இருக்கும் நேரத்தில் கர்ணன் படம் ரீரிலிஸ்சாக வந்து சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறது.

டைரக்டர் ஸ்ரீதர் அவர்களை பற்றிய  நெஞ்சம் மறப்பதில்லை கட்டுரை அட்டகாசம். ஸ்ரீதர் அவர்களின் படங்களை பார்த்து இருந்தாலும் படத்தின் இயக்குனர் பற்றி கேள்வி கேட்காத நாட்களில் ரசித்த படங்கள் அவருடையது என்று தெரிந்து கொள்ளும்போது அட அப்போ அந்த படத்தை யார் இயக்கியது இதை யார் இயக்கியது என்று எனது தேடலை தொடங்க வைத்து விட்டார். இந்த கட்டுரையில் இருக்கும் முக்கியமான ஒரு விஷயம் ஸ்ரீதர் செய்து பார்த்த சுய பரிட்சைகள். கலர் படங்கள் வந்து கொண்டு இருந்த நாட்களில் தடால் என்று சிவாஜியை வைத்து கருப்பு வெள்ளை படத்தை எடுத்தது. இந்திய சினிமா வரலாற்றில் சிவந்த மண் படத்திற்காக வெளிநாடு சென்று பாடல்களை எடுத்த முதல் படம் என்கிற பெயரை தட்டி செல்கிறது. ரொம்ப சோகமான ஒரு நிகழ்வு இந்த கட்டுரையை அவர் எழுதி முடித்த நேரம் இயக்குனர் ஸ்ரீதர் மறந்திவிட்டார் என்பது. 



தமிழ் படங்களை பற்றி இவரது பார்வை என்பது இந்த தொகுப்பில்  பத்து சதவிதம் கூட இல்லை. வெயில் படத்தை மட்டுமே இங்கே குறிப்பிட்டு எழுதி உள்ளார். அதே போல தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் மணிரத்னம், பாரதிராஜா, பாலசந்தர், கமலஹாசன், ரஜினி, எஸ்.பி முத்துராமன், பந்தலு போன்றவர்கள் பற்றிய செய்திகள் இங்கே இல்லை என்கிற குறை இருக்கிறது. ஹிந்தி இசை அமைப்பாளர்களை பற்றி சிலாகித்து  எழுதி இருப்பவருக்கு இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி பற்றி மறந்தது ஏனோ. போனால் போகட்டும் என்கிற நிலையில் அங்கொன்று இங்கொன்று என்று சில இடங்களில் மட்டுமே இவர்களின் பெயர்களை பார்க்க முடிகிறது. ஆறு முறை தேசிய விருது வாங்கிய வைரமுத்து பற்றியும், கவிஞர் கண்ணதாசன் பற்றியும் இரண்டு பத்தியில் முடித்துவிட்டார் என்பது வேதனையான செய்தி. 

 
பல படங்கள் ஏற்கனவே மற்றவர்களால் அதிகமுறை  விமர்சனம் செய்யப்பட்டுள்ளது  என்பதால் அதிகம் கவரவில்லை. அதே சமயம் அந்த படங்கள் பற்றிய கட்டுரையின் ஆரம்பம் அருமை, உதாரணத்துக்கு சிட்டி அப் காட்ஸ் என்கிற படத்தை பற்றிய வன்முறைப்பேட்டை கட்டுரையின் தொடக்கத்தில் யமுனா ராஜேந்திரன் அவர்களின் "வன்முறை:திரைப்படம்:பாலியல்" பற்றி பேசி அப்படியே  கோவையில் தான் வாழ்ந்த இடத்தில் கண்முன்னால் நடந்த வன்முறையை சொல்லி அப்படியே கதைக்குள் வருகிறார். சத்யஜித் ராய் அவர்களின் பதேர் பாஞ்சாலி படம் ஒரு நாவலில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி தான் என்றும். பதேர் பாஞ்சாலி  Triology என்றும் அதன் தொடர்ச்சியாக வந்த படங்கள் எப்படி செல்கிறது என்கிற கட்டுரை வியப்பை அளிக்கிறது.  


இந்த பதிவை எழுத எனக்கு வெகு நாட்கள் ஆனது, உண்மையான காரணம் ஒவ்வொரு கட்டுரைக்கும் நான் எடுத்து கொண்ட குறிப்புக்கள் தான். இப்போது எல்லா கட்டுரைகளுக்கும் என்னிடம் சிறு சிறு குறிப்புக்கள் இருக்கிறது அவை எல்லாம் இங்கே எழுதினால் இந்த புத்தகத்தை மற்றவர்கள் படிக்கும் போது ஏற்படும் பரவசம், ஆச்சர்யம் எல்லாம் போய்விடும் என்பதால் கழித்து கட்டவேண்டிய நிலைமையில் இருந்தேன். எதை எழுத எதை கழித்து கட்டுவது என்று தெரியாமல் இரண்டு முன்று நாட்கள் அதற்கே செலவு செய்யவேண்டி இருந்தது. மொத்தத்தில் இந்த கட்டுரை தொகுப்பை தமிழில் மட்டும் அல்லாமல் வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டிய ஒரு புத்தகம். சினிமா பற்றிய கனவில் இருக்கும் எல்லோரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு புத்தகம். 


திரைச்சீலை - ஓவியர் ஜீவா
விலை: 110 
திரிசத்தி பதிப்பகம் 
56/21, First avenue, Sastri nagar, 
Adyar, Chennai - 600 020



--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)




Monday, March 12, 2012

தலைகீழ் மனிதர்கள்

கரூர் பிளான்  பண்ணும் போதே மகாவின் சின்ன சித்தப்பா கிடா வெட்டுக்கு போகுற மாதிரி தான்  பிளான் பண்ணினா. அதுமில்லாம அது அவளோட  முன்னாள் குலதெய்வ கோயில். கல்யாணமான பிறகு கணவனின் குலதெய்வம் தான் மனைவிக்கும் என்பது யாரோ எங்கோ எப்படியோ சொல்லியதை இன்றும் என்றும் எப்போதும் நடைமுறைப்படுத்தம் இந்து மதத்தில் பிறந்ததால் மகாவின் குல தெய்வம் முன்று வருடங்களுக்கு முன்னர் மணலூரில் இருந்து கோயம்புத்தூருக்கு மாறிட்டாங்க. இங்கே ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும், என்னோட தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்தது கரூர் தான். கல்யாணம் நடந்தது கோயம்புத்தூர்ல. மாப்பிள்ளை வீட்டில் பொண்ணை விட்டுட்டு வர நானும் என்னோட சித்தப்பா பையனும் கூட போயிருந்தோம். சுமோல கடைசி இடத்தை எங்களுக்கு தந்தாங்க, எனக்கு முன்னாடி தங்கச்சி, மச்சான், எங்க அண்ணி, சித்தி எல்லாம் இருந்தாங்க. அண்ணி தங்கச்சி கிட்ட உன் விட்டுக்காரர் குலதெய்வம் எங்க இருக்குன்னு கேக்க சொன்னங்க. தங்கச்சி என்ன பண்ணினா தெரியுமா, ஏங்க நம்ம குலதெய்வ கோயில்  எங்க இருக்குன்னு மச்சான் கிட்ட கேட்டா. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆகிச்சு எனக்கு, கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட ஆகால இத்தனை நாளா கோயம்புத்தூரில் இருந்த அவ குலதெய்வம் இப்படி தடாலடியா  கரூர்க்கு இடம் மாறிடுச்சே. என்னை விட அண்ணியும் சித்தியும் தான் ரொம்ப ஷாக் ஆனாங்க.

கரூரில் இருந்து மணலூர் 35கிலோமீட்டர் இருக்கும். கரூரில் இருந்து கோயம்புத்தூர் பைபாஸ் ரோடுல போனா சின்னதாராபுரம் போக லெப்ட் சைடுல ஒரு ரோடு பிரியும். அதுல அப்படியே 25கிலோமீட்டர் போனா சின்னதாராபுரம். லெப்ட் சைடுல ரோடு பிரியும்னு சொன்னேன்ல அந்த இடத்தில இருந்து சின்னதாராபுரம் போகுறவரைக்கும் ஒரு பெட்ரோல் பங்க் இருக்காது. போற வழி எல்லாம் பொட்டல்  காடு.  சின்னதாராபுரத்தில் இருந்து மணலூர் போக சுத்தி சுத்தி, வழியில் வரும் ஆட்களிடம் மணலூர் எப்படி போகணும்,, இப்படியா அப்படியான்னு கேட்டே ஆகணும், அந்த அளவுக்கு அது ஒரு போர்டே இல்லாத  குக்கிராமம். நான் அந்த கோவிலில் இருந்த வரை ஒரே ஒரு மினி பஸ் தான் காலைல இருந்து சாயந்திரம் வரைக்கும் சின்னதாராபுரத்தில் இருந்து  வந்துட்டு போச்சு. கிடா வெட்டி வகுறு நெம்ப கறியும் சோறும் சாப்பிட்டு சாயந்திரம் முணு மணிக்கா கரூர் கிளம்பினோம். வண்டியை 80ல விரட்டிடே வந்தேன் கரூர் 19 கிலோமீட்டர்ன்னு ஒரு போர்டு பார்த்தேன் அங்கேயே வண்டி ஆப் ஆகிடுச்சு. வண்டியில பெட்ரோல் இல்ல வரும் போதுதான் பெட்ரோல் போட்டுட்டு வந்தோம் அதுக்குள்ள தீர்ந்து போச்சே. இன்னும்  போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கு சுத்தி முத்தி ஒரு பெட்ரோல் பங்க்  இல்ல மகாவும் ஜூனியரும் கூட இருக்காங்க எப்படி வீடு போயி சேரபோறோம்ன்னு கவலை வந்துடுச்சு. இறக்கத்துல வண்டி வந்ததால  கொஞ்ச தூரம் முன்னாடி இழுத்துட்டு போயிடுச்சு. வலது பக்கம் ரெண்டு பேரு இருந்தாங்க அவங்க கிட்ட வண்டியை நிறுத்தி பெட்ரோல் பங்க்  பத்தி கேட்டுட்டு இருந்தேன், லோக்கல்ல பெட்ரோல் விக்கிற கடை இருக்கு அதுக்கு ஒரு கிலோமீட்டர் போகணும்ன்னு சொன்னங்க. எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல, தெரியாத இடம் எப்படி இவங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு போகுறதுன்னு தயக்கமா இருந்துச்சு. நான் நின்னுட்டு இருந்ததை பார்த்து ஒரு வயசானவர் வந்தாரு, என்ன விஷயம்ன்னு அவர் கேக்க நான் பெட்ரோல் தீர்ந்து போனதை பத்தி சொல்லிட்டு இருந்தேன். நாங்க முன்னாடி பேசிட்டு இருந்தோம்ல அவர்கிட்ட இவர் போயி பெட்ரோல் வாங்கி கொடுடா முருகா நம்ம ஊருல ஒருத்தர் வந்து உதவி கேக்குறாரு இதை கூட செய்ய மாட்டியான்னு கேக்க அவரும் காசு கொடுங்க வாங்கிட்டு வரன்னு சொன்னாரு.  அவர் கிட்ட காசு கொடுத்துட்டு இந்த பெரியவர் கிட்ட பேசிட்டு இருந்தேன். எங்களை பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில உட்கார சொல்லி அங்க இருந்தவங்களை இடம் தர சொன்னார். அவர் என்ன சொன்னாரோ அதை அங்க இருந்தவங்க செஞ்சாங்க. அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்பதை பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம். அந்த மனிதர்கள் வெளியூர் ஆளுக்கு உதவி செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்ததால் அவர் சொன்னதை செய்தார்கள். பெட்ரோல் வரும் வரை அந்த பெரியவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். என்னை பற்றி அதிகம் கேள்விகளை கேட்டு கொண்டு இருந்தார். கடைசி வரைக்கும் அந்த ஊர் பெயர் என்ன அவர் பெயர் என்ன என்று நான் கேட்கவே இல்லை. கொஞ்ச நேரத்தில் பெட்ரோல் வர அவர்களிடம் நன்றி சொல்லிட்டு கிளம்பினோம். வரும் வழி எங்கும் சிந்தித்து கொண்டே வந்தேன். இதுவே சென்னையா இருந்தா ஒரு பக்கியும் பக்கத்துல வந்து என்ன எதுன்னு கேட்க மாட்டாங்க. 

இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் சென்னை ரிடர்ன், எப்பயும் 9 அல்லது 10 ஆவது பிளாட்பாரத்தில் வந்து நிற்கும் மங்களூர் எக்ஸ்பிரஸ் வண்டி அண்ணைக்கு 6வது பிளாட்பாரத்துல வந்து நின்னுச்சு. இதுல ஒரு சவுகரியம் எஸ்கலேட்டர் இருப்பது, ஊரில் இருந்து எடுத்துட்டு வந்த லகேஜ் தூக்கிட்டு படி வழியா ஏற வேண்டிய நிர்பந்தம் இருக்காதேன்னு ஒரு சந்தோசம் வந்துடுச்சு. எஸ்கலேட்டர் பக்கம் போன போது மகாவை தேடினேன் மெதுவா அவ ஜூனியரை தூக்கிட்டு வந்துட்டு இருந்தா. அவங்களுக்காக வெயிட் பண்ண நின்னுட்டு இருந்த சமயம் ஒரு முஸ்லிம் குடும்பம் எஸ்கலேட்டர்ல  ஏற போச்சு, ஒரு ஆண், அவர் மனைவி அப்பறம் அவரோட அம்மா. முதலில் அவர் முன்னாடி ஏறிட்டு போயிட்டாரு அடுத்தது அவர் மனைவி, கடைசியா அங்க பெரியம்மா ரொம்ப தயக்கத்துடன் ஏற போனாங்க அவங்களுக்கு எப்படி அதுல போகணும்ன்னு தெரியாம படிக்கட்டில் தவறி விழுந்துட்டாங்க. அந்த இடத்தில நான் அப்பறம் ஒரு போர்டர்  மட்டுமே இருந்தோம், நான் போட்ட சத்தத்தில் யாரோ ஒரு புண்ணியவான் எமெர்ஜென்சி ஸ்டாப் பட்டன் அழுத்தி எஸ்கலேட்டர் நிறுத்திட்டாரு.   என்கிட்ட இருந்த லகேஜ் எங்கே போட்டேன்னு தெரியாம முன்னாடி ஓடி போயி அந்த அம்மாவை தூக்க முயற்சி செஞ்சேன் அவங்க இருந்த வெயிட்டுக்கு என்னால தூக்க முடியல பின்னாடியே அந்த போர்ட்டர் வந்து உதவி செஞ்சாரு அவராலையும் முடியால பின்னாடி திரும்பி பார்த்தேன் இருபது பேருக்கு மேல வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க. யாராவது ஒருத்தர் வாங்க சார்ன்னு குரல் கொடுத்தேன் ஒரு பொறம்போக்கு தாயோளியும் வரல. அந்த அம்மா மகன் மேல இருந்து இறங்கி வந்து கை கொடுக்க கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்தினோம். பாவம் அந்த அம்மா அழுதுட்டே இருந்தாங்க, அவங்களால படி ஏறி நடக்க முடியாது எஸ்கலேட்டர் ஆன் பண்ணுக நான் அழைச்சிட்டு போறேன்னு அவர் சொன்னாரு. ஆனா அதுக்கு எலக்ட்ரிசியன் வரணும் இப்போ ஏதும் முடியாதுன்னு போர்டர் சொல்ல நானும் கிழே இறங்கி வந்தேன். அங்க இருந்த கும்பல்ல ஒருத்தன் சொன்னான் ச்சே இப்படி பாதிலயே நின்னுடுச்சே, வந்த ஆத்திரத்துக்கு அவன் செவில்ல அறையணும்ன்னு தான் தோணுச்சு. இத்தனைக்கும் அவன் கையில ஒரு ட்ராலி முதுகுல லேப்டாப் பேக். 

இந்த மாதிரி சுயநலவாதிகள் மத்தியில் வாழ்வது எவ்வளவு அருவெறுப்பை தருகிறது என்று அடிக்கடி கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறேன்.  கண் முன்னால் நடக்கும் ஒரு விபத்தில் கூட உதவி செய்ய முடியாத மேல் தட்டு ராசாக்களை  விட அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் கிராமத்துக்கு எளிய மனிதர்கள் எப்போதும் என் மனதில் உயர்ந்தே இருக்கிறார்கள். 


--
With Love
அருண்மொழித்தேவன் (Romeo) ;)