Sunday, July 21, 2013

மொக்கை வாங்கலியோ மொக்கை



ஒருத்தர் கிட்ட மொக்கை வாங்குவதென்பது நமக்கு எல்லாம் புதுசா என்ன. மொக்கை வாங்கி ஒண்ணு அசடு வழிஞ்சிட்டு இருப்போம் இல்ல இடத்தை காலி பண்ணிட்டு போயிட்டே இருப்போம். நாளைக்கு அந்த மொக்கை பற்றிய நினைப்பு இருக்குமோ இருக்காதோ. ஆனா நாம பெத்தது கிட்ட வாங்கும் மொக்கை இருக்கே ஆயுசுக்கும் மறக்கவே முடியாது.

ஜூனியர் இப்போ LKG படிக்கிறான் பயபுள்ள ஒவ்வொரு நாளும் ஸ்கூல் கிளம்பும் போது எங்களை படுத்தி எடுப்பான். காலைல ப்ரஷ் பண்ணுறதில் இருந்து போராட்டம் துடங்கும். சாப்பிடுறதுக்கு நாங்க ரெண்டு பேரும் தலைகீழாக நின்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

வரும் செவ்வாய்கிழமை அவனுக்கு கதை சொல்லும் போட்டி. சின்னதா ஒரு கதையை தேர்ந்தெடுத்து அதை எப்படி சொல்லணும் என்று நானும் மகாவும் போட்டி போட்டு சொல்லி கொடுத்து இருந்தோம். ஆற்றுக்கு நடுவில் போட்டு இருக்கும் பலகையில் இரண்டு ஆடுகள் ஒரே சமயத்தில் எதிர் எதிர் புறமாக வந்து கொண்டு இருக்கிறது. நீ வழி விடு இல்ல நீ வழி விடு என்று சண்டை போட்டு இரண்டும் ஆற்றில் விழுந்து விடுகிறது. தமிழில் சொல்லி தருவது என்று முடிவு செய்தோம். 

எங்கள் இருவருக்கும் யார் எளிமையாக அவனுக்கு புரியும் படி சொல்லி தருவது என்கிற போட்டி நடந்தது. நான் ஒன்றை சொன்னால் அதற்கு மாற்றாக மற்றொன்றை அவள் சொல்வாள். அவள் ஒன்றை சொல்ல அதற்கு மாற்றாக மற்றொன்றை சொல்வேன். நிலைமை எமெர்ஜென்சி வார்டில் இருக்கும் பேஷன்ட் போல இந்த பக்கமும் இல்லாமல் அந்த பக்கமும் இல்லாமல் ஊஞ்சல் ஆடி கொண்டு இருந்தது. இப்படி நாங்க ரெண்டு பேரும் பேசுவதை பார்த்து கொண்டே இருந்தான் ஜூனியர். பார்த்து கொண்டு  இருந்தவனிடம் கண்ணா அப்பா சொல்லுறதை அப்படியே சொல்லிடு என்றேன். அம்மா சொல்லுறதை சொல்லுடா செல்லம் என்று மகா கொஞ்ச. இங்கே வந்து மிகபெரிய டிவிஸ்ட். 

One Day two goats walking ..... அப்படியே கண்டினியு பண்ணி முழு கதையையும் இங்கிலீஷ்ல சொல்லி முடிச்சிட்டான். பேயி அறைஞ்சது போல ரெண்டு பேரும் அவனை பார்த்துட்டு இருக்கோம். 

டேய் இந்த கதை உனக்கு தெரியுமா

ஓ தெரியுமே  

யார் சொல்லி கொடுத்தது 

மிஸ் சொல்லி கொடுத்தாங்க

முதலே சொல்லி இருக்கலாம்ல

நீ கேக்கேவே இல்ல

இப்பவே இப்படி இன்னும் வளர வளர என்ன மாதிரியோ :))


With love
Romeo ;)

Thursday, July 18, 2013

சங்கதிகள் 18/07/2013

தென்மேற்கு பருவ மழை கேரளாவில்  தீவிரம் காட்ட இங்கே கோவையில் சீதோஷண நிலை நிறையவே மாறி இருக்கிறது.  ஒரு மாதத்துக்கு முன்னர் வரை வெயிலில் காய்ந்து கிடந்த பூமி இப்போ சிலு சிலுன்னு வீசும் காற்றுக்கு அடிமையாகி கிடக்கிறது. சென்ற வருடம் பொய்த்து போன இந்த மழை வட்டியும் முதலுமாக இந்த வருட குளிர் காலத்தின் முதல் நாளில் இருந்தே நல்லதொரு மாற்றத்தை தந்து இருக்கிறது. எப்பொழுது மழை வரும் என்றே தெரியவில்லை. 

###################################################################

கேரளாவில் பெய்யும் மழையை பற்றி பேசும் போது இங்கே கோவையில் இருக்கும் மலையாளிகளை பற்றி பேசாமல் இருக்க முடியாது. எங்கே சென்றாலும் மலையாளிகள் கடைகளை பார்க்க முடிகிறது. டீ கடையில் சேட்டா ஒரு டீ என்று யாரது ஒருவர் சொல்வதை கேட்கலாம். மலையாளிகள் என்றாலே டீ கடை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும் ஆனால் இப்போது இவர்கள் கை வைக்காத தொழிலே இல்லை என்கிற அளவுக்கு எல்லா துறையிலும் இருக்கிறார்கள். சென்ற வாரம் உறவினர் ஒருவரை பார்க்க KMCH மருத்துவமனைக்கு சென்று இருந்தேன். எங்கே பார்த்தாலும்  மலையாளிகள்தான் நர்ஸ் டாக்டர் என்று கும்பல் கும்பலாக இருக்கிறார்கள். கேரளாவில் இருந்தும் பொருட்களை இறக்குமதி செய்கிறார்களோ இல்லையோ வருடம் முழுக்க செவிலியர்களை இறக்குமதி செய்து கொண்டே இருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் பீர்மேடு பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வாழ்த்து கொண்டு இருப்பதால் அந்த பகுதியை தமிழ்நாட்டில் இணைக்க வலியுறுத்தி வருகிறார்கள். ஒருவேளை அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் மலையாளிகள் அதிகம் வாழும் கோயம்புத்தூர் பகுதியை கேரளாவுடன் இணைக்க சொல்லி அவர்கள் போராட்டம் நடத்தினாலும் நடத்துவார்கள். 

###################################################################
லையாளிகளை பற்றி பேசும் போது மலையாள படங்களை பற்றியும் கண்டிப்பாக பேச வேண்டும். இணையத்தில் இப்போதெல்லாம் மலையாள படங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். எனக்கு முதலில் இருந்தே மலையாள படங்களை பார்ப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். ஹிந்தி படங்களை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது போல மலையாள படங்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. இணையத்தில் சில படங்களை பற்றி ஆஹா ஓஹோ என்று எழுதிய பதிவுகளை படித்ததும் லேசாக சபலம் தட்டியது. அப்படி என்ன தான் இருக்கு அதில் என்று முதல் முதலில் ஆமென்  அடுத்தது 22 பீமெல் கோட்டயம் அடுத்தது ஷட்டர். கடந்த ஒருவாரத்தில் இந்த முன்று படங்களையும் பார்த்து முடித்துவிட்டேன். ஆங்கில படங்களை எளிதாக புரிந்து கொள்ள Subtitle இருப்பதை போல மலையாள படங்களில் இருந்தால் நன்றாக இருக்கும். பல இடங்களில் காட்சிகளை வைத்தே  கதையை யூகித்து கொண்டு செல்ல வேண்டியதாக இருக்கிறது. மற்றபடி இந்த முன்று படங்களில் கதை களம் எல்லாம் வேறு முன்றுமே அட்டகாசம். அதிலும் 22 பீமெல் கோட்டயம் சான்சே இல்லை. ஆமென் படத்தின் கடைசி பாடல் காட்சி என்ன மியூசிக்டா எழுந்து நடனம் ஆடவேண்டும் போல இருந்தது. ஷட்டர் நல்லதொரு திரில்லர். இந்த படங்களை பார்ப்பதற்காவது மலையாளத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

###################################################################

லையாள படங்களுக்கு நடுவில் சில ஹாலிவுட் படங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. Olympus has fallen, Killer Joe, The Employer Dead Man Down போன்ற படங்களை பார்க்க முடிந்தது. இதில் ஈ அடிச்சான் காப்பி லிஸ்ட்டில் The Employer படத்தை கொண்டு வரலாம். 

Exam 


2009யில் வந்த ஆங்கில உளவியல்ரீதியான படம். காலியாக இருக்கும் ஒரு வேலையை நிரப்ப கடைசி கட்ட ரவுண்டில் 8 பேர் போட்டி போடுகிறார்கள். அவர்களை ஒரு ரூமில் விட்டுவிட்டு ஒரே ஒரு பேப்பர் மட்டும் கொடுத்துவிட்டு கேள்வியை கண்டு பிடித்து பதில் எழுத வேண்டும். அவர்களின் ரூல்ஸ் உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்களை தவிர வேறு யாரையும் தொடர்பு கொள்ள கூடாது. பேப்பரை வீணாக்க கூடாது மற்றும் அந்த அறையை விட்டு செல்ல கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் நீங்கள் தகுதி இழப்பு செய்யபடுவீர்கள். போர் அடிக்காத அளவுக்கு படம் நல்ல விறுவிறுப்பாக செல்லும். இந்த Exam படத்தை 12 Angry Man உல்டா என்னலாம். 


இப்படியான உல்டா வகை படம் தான் The Employer. 




Exam படம் போலவே தான் இந்த படமும். கம்பெனியில் இருக்கும் ஒரு காலி இடத்துக்கு நடக்கும் கடைசி கட்ட ரவுண்டுக்கு 5 பேர் தேர்வாகிறார்கள். ஒரு நாள் அவர்கள் ஐந்து பேரும் மயக்க நிலையில் ஒரு ரூமில் அடைத்து வைக்க பட்டு இருக்கிறார்கள். முதல் நாள் இரவு யாரோ அவர்களை தாக்கியது எல்லோருக்கும் நினைவில் இருக்கிறது. ஒவ்வொருவராக தங்களை அறிமுகபடுத்தி கொண்ட சமயத்தில் தான் அனைவரும் அந்த ஒரு வேலைக்கு போட்டி போட்டு கொண்டு இருப்பவர்கள் என்கிற உண்மை தெரிகிறது. அங்கே கிடைக்கும் ஒரு போனில் அந்த கம்பெனி முதலாளி பேசுகிறான். அந்த ரூமின் கதவு நான்கு பூட்டுகள் போடப்பட்டுள்ளது. ஒருவர் இறந்தால் தான் ஒரு பூட்டின் கோடு கிடைக்கும் அதன்படி ஐவரில் 4 பேர் இறக்க வேண்டும் கடைசியாக இருக்கும் ஒருவருக்கு வேலை நிச்சயம்.  நால்வரை கொன்று யார் கடைசியில் அந்த வேலைக்கு சென்றார்கள் என்பது தான் கிளைமாக்ஸ். ரொம்ப விறுவிறுப்பு என்று சொல்ல முடியாது. நிறையவே லாஜிக் உள்ள ஓட்டை படம். டைம் பாஸ் ஆகா பார்க்கலாம். 

###################################################################
ற்கொலை அல்லது கொலை  செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். ரொம்பவே விரக்தி அடைந்தவர்கள் தான் தற்கொலை கொலை செய்து கொள்வார்கள் அப்படியா காலகட்டம் என்றோ இருந்து இருக்கிறது இன்றோ சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது கொலை செய்து விடுகிறார்கள். நான்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் செய்தி தாளில் படித்தது. மொபைல் போன் வாங்கி தரவில்லை என்கிற காரணத்தால் பத்தாவது படிக்கும் பெண்ணொருத்தி தற்கொலை செய்து கொண்டாள். நேற்றைய நாளிததில் மனைவி 50 தேங்காயை திருடிவிட்டாள் என்பதற்காக கணவன் அவளை கொலை செய்துவிட்டார். மொபைல் போன் மற்றும் 50 தேங்காயின் விலை தான் ஒரு மனித உயிரின் விலை !!! 

###################################################################
சென்னையில் நீங்கள் காலி மனைகளை வாங்குவதென்பது எல்லாம்  கண்டிப்பாக நினைத்து பார்க்க முடியாது. சென்னையை தாண்டி செங்கல்பட்டுக்கு வெகு அருகில் திண்டிவனத்துக்கு பக்கத்தில் தான் காலி மனைகளை வாங்க முடியும். ஆனால் இங்கே கோவையில் ரியல் எஸ்டேட் கொடிகட்டி பறக்கிறது, நாளை உங்கள் சந்ததிக்காக மண்ணில் முதலீடு செய்ய ஆசைபட்டால் கோவையை மறக்காமல் தேர்ந்தெடுங்கள். ஆறு மாதத்துக்கு முன்னர் வரை கோவை அழிவு பாதையில் சென்று கொண்டு இருந்ததை எல்லோருமே அறிவார்கள். மின்வெட்டால் பட்ட அவஸ்தைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை எல்லா தொழிலும் பாதிப்புக்குள்ளானது. கோவை என்பது தொழில் நகரம் இங்கே குடிசை தொழில் போல லேத் பட்டறைகள் அதிகம். இவர்களால் குறித்த நேரத்துக்கு எந்த ஆர்டரையும் செய்து முடிக்க முடியாமல் ரொம்பவே அவஸ்தை பட்டுவிட்டார்கள். இப்போ இரண்டு மாதமாக இந்த தொல்லை இல்லாமல் இருக்கிறோம். அந்த மாதிரி கொடுமையான காலகட்டத்தில் கூட இங்கே கம்பீரமாக நின்றது ரியல் எஸ்டேட் தொழில்தான். இரண்டு வருடங்களுக்கு முன்  நாங்கள்  ஒரு அத்துவான காட்டில் வாங்கி போட்ட இடத்தின் மதிப்பு இப்போது இருமடங்கு ஆகிவிட்டது.  லோக்கல் சேனல்களில் 24 மணி நேரமும் ரியல் எஸ்டேட் பற்றிய செய்திகள் தான் ஓடி கொண்டு இருக்கிறது. உங்களுக்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆசை இருந்தால் மறக்காமல் கோவையை தேர்ந்தெடுங்கள். முதலீடு பல மடங்கு உயர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.



  

-- With Love
Romeo ;)


Wednesday, July 3, 2013

ஹாலிவுட் படம் - 3


லக படங்களை பார்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இருந்ததில்லை. அதாவது உலக படங்கள் எல்லாம் ரொம்ப மெதுவாக நகரும் படங்கள் என்கிற கண்ணோட்டத்தில் இருந்ததை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கொண்டு வருகிறேன். என்னுடைய ரசனை இது தான் என்று எனக்குள் நான் போட்டு இருந்த எல்லை எனக்கே தெரியாமல் விரிவாகி கொண்டே இருக்கிறது. தெரியாத மொழியில் என்னத்த பார்க்க போறோம் என்கிற எண்ணதை மாற்றியது அண்ணன் ஜாக்கி தான். அவரின் தளத்தின் வழியாக சென்றுபார்த்து ரசித்த படங்கள் அதிகம். எனது எல்லையை விரிவாக்கிய ஜாக்கி அண்ணனுக்கு நன்றி.


The Skin I Live In (2011) aka "La piel que habito"

 

 

ராபர்ட் புகழ்பெற்ற பிளாஸ்டிக் சர்ஜன், நெருப்பு மற்றும் பூச்சி கடியில் இருந்து தற்காத்து கொள்ள செயற்கையான தோல் ஒன்றை உருவாக்கி கொண்டு இருக்கிறார். தான் வாழ்ந்து கொண்டு இருக்கும் அரண்மையை போன்ற வீட்டில் ஒரு பெட் ரூமில் வெரா என்கிற பெண்ணை அடைத்து வைத்து இருக்கிறார். அவளுக்கு தேவையானது எல்லாம் அந்த வீட்டிலே தங்கி வேலை செய்யும்  வயதான கிழவி மரிலியா லிப்ட் மூலம் கொடுத்து அனுப்புகிறாள். இவர்களுக்கும் இடையே ஸ்பீக்கர் மைக் இருக்கும் அதன் மூலமே தொடர்பு கொள்கிறார்கள். வெராவின் ரூமில் இருக்கும் கேமரா மூலம் மரிலியா அவளை பார்க்க முடியும். 

வெராவை கொண்டு தனது சோதனை முயற்சிகளை தொடர்ந்து கொண்டு இருக்கிறான் ராபர்ட். ராபர்ட்டை வெரா உறவுக்கு அழைக்க அதை ஏற்காமல் அங்கு இருந்து சென்று விடுகிறான். வெரா நல்ல அழகி, பார்த்த உடனே பற்றிகொள்ளும் உடல்வாகு அப்படிபட்ட அழகான பெண்ணே உறவுக்கு அழைத்தும் ஒரு மறுக்கிறான் என்றால் !!!! 

ஒரு முறை வெரா தற்கொலைக்கு முயல அவளை அதில் இருந்து காப்பாற்றுகிறான் ராபர்ட். ராபர்ட் தனது வேலையை இழந்துவிட்டதை மரிலியாளிடம் சொல்லி அங்கே வேலை செய்து கொண்டு இருக்கும் மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பிட சொல்லி விட்டு  வெளியூருக்கு சென்று விடுகிறான். மற்ற வேலையாட்கள்  அங்கே இருந்து கிளம்பியதும்  Zeca அங்கு வருகிறான். Zeca அங்கே வேலை செய்து கொண்டு இருக்கும் மரிலியாவின் மகன். 

தனது மகன் அவன் கூட்டாளிகளுடன் ஒரு நகை கடையை கொள்ளை அடித்துவிட்டு அந்த  வீட்டில் தஞ்சம் தேடி வந்து இருப்பவன் என்பதை அறிந்து கொள்கிறாள் மரிலியா. அப்போது கேமராவில் தெரியும் பெண்ணை பார்த்ததும் காமவெறி தலைக்கு ஏறி அவள் இருக்கும் ரூம் சாவி கேட்டு தனது தாயையே மிரட்டுகிறான் Zeca. சாவி கிடைத்துவிட வெராவை கற்பழிக்க முயல்கிறான். அந்த சமயத்தில் நீ எப்படி கார் அக்சிடெண்டில் இருந்து தப்பித்தாய் என்கிறான். வெராவிற்கு Zeca யாரென்றே தெரியாது, முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறாள். அந்நியன் ஒருவன்  தன்னை கற்பழிக்க முயல்கிறான் என்றால் ஒரு பெண் அதை எதிர்த்து போராடுவாள் தானே. இங்கே வெரா வா கார்டனுக்கு போலகளாம் என்கிறாள் !!!

இந்த நேரத்தில் ராபர்ட் அங்கு வந்துவிட Zecaவை கொன்று விடுகிறான். மரிலியா ராபர்ட், Zeca  பற்றிய கதையை வெராவிடம் சொல்கிறாள். அவர்கள் இருவரும் எனது மகன்கள் தான் ஆனால் தந்தை வேறு வேறு. ராபர்டின் மனைவி மகளின் நிலைமை என்ன ஆனது. இங்கே இருந்து தான் படம் சஸ்பென்ஸ் உடைய தொடங்குகிறது. ஒரு கார் அக்சிடெண்ட்டில் இருந்து மிகவும் பாதிக்க பட்ட மனைவியை காப்பாற்றுகிறான் ராபர்ட். அவளுக்கு தன வீட்டில் வைத்தே சிகிச்சையை தந்து கொண்டு இருக்கிறான். ஒரு நாள் தன் மகள் பாடும் பாடலை கேட்டு அவளை பார்க்க வெளியே வரும் ராபர்ட் மனைவி கண்ணாடியில் தனது முகத்தை பார்த்து முன்றாவது மாடியில் இருந்து குத்திட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். அம்மாவின் சாவை நேரில் பார்த்த மகளுக்கு கொஞ்சம் மூளை கலங்கிவிட. வேறு ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டு அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள். அன்பு மகளில் சாவுக்கு பழிக்கு பழி வாங்க கிளம்புகிறான் ராபர்ட். 

இந்த படத்தின் கதையை இத்துடன் நிறுத்தி கொள்வோம். இதற்கு மேல்   தொடர்ந்தால் படம் பார்க்கும் போது  சுவாரஸ்யம் கம்மியாகிவிடும். 



Antonio Banderas ஸ்பானிஷ் மொழி படங்களில் பிரதான கதாநாயன்.  ஹாலிவுட் படங்களிலும் இவரை பார்த்து இருப்பீர்கள். ஒரு தந்தையாக மகளை நெருங்க முடியாத வேதனை. டாக்டராக தனது வேலையில் கச்சிதம்.இந்த படத்தில் அவ்வளவு நேர்த்தியாக பொருந்தி உள்ளார். 

 

 


Elena Anaya இவரும் ஸ்பானிஷ் நாட்டு நடிகைதான். Van Helsing படத்தில் ரத்த காட்டேரியாக வரும் மூன்று பெண்களில் ஒருவராக துக்கடா ரோலில் வந்து இருப்பார். இவரா அது என்று வியக்கும் அளவுக்கு வெரா கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்தியுள்ளார். தனிமை, பல வருடங்களாக ரூமில் அடைந்து கொண்டு வெளிக்காற்றை சுவாசிக்க முடியாமல் இருக்கும் தவிப்பு. ஒரே உடை அது துணியில் செய்ததில்லை. தன்னை சோதனை எலியாக பாவித்து ராபர்ட்டின் எல்லா சோதனைகளுக்கும் உட்படும் பெண்ணாக நன்றாக நடித்துள்ளார்.  

இந்த படத்தில் இவர்களில் பங்களிப்பை இனியும் சொன்னால் அது படத்தின் சுவாரசியத்தை கண்டிப்பாக குறைத்துவிடும்.


ராபர்ட்டின் மனைவி மகளுக்கு என்ன ஆனது. வெரா ஏன் பல வருடங்களாக அந்த அறையில் அடைத்து இருக்கிறாள். இந்த சஸ்பென்சை தெரிந்து கொள்ள டவுன்லோட் செய்து படம் பார்க்கவும். த்ரில்லர் படம் என்று சொல்வதை விட சின்னதாக சஸ்பென்ஸ் உள்ள படம் அவ்வளவுதான். வெரா பற்றிய அந்த சின்ன சஸ்பென்ஸ் தான் படத்தின் உயிர்நாடி. இவ்வளவு ரிஸ்க் எடுக்கும் ராபர்ட் எல்லாவற்றிலும் ரொம்பவே கேஸ்ஷுவலாக இருப்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. 



1984ஆம் வருடம் எழுத்தாளர் Thierry Jonquet   பிரெஞ்சு மொழியில் எழுதிய Mygale நாவலை அடிப்படையாக கொண்டு உருவான படம். இதே நாவல் பின்னர் Tarantula என்கிற பெயரில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. 

படத்தின் இயக்குனர் Pedro Almodovar பல படங்களை இயக்கி பல விருதுகளை அள்ளியவர். இந்த படத்தின் காட்சி அமைப்புகள் எல்லாம் பிரமாதம். படத்தை பார்க்கும் போதே சில கேள்விகள் எழாமல் இருக்காது.  அவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் முதல் படமாக இந்த படத்தை பார்த்து இருக்கிறேன். இனி மற்ற படங்களை பார்க்காமல் விடுவதில்லை.


படத்தின் டிரைலர்


 






-- With Love
Romeo ;)

Tuesday, July 2, 2013

ஹாலிவுட் படம் - 2



Russel Crowe பற்றி தெரியாதவர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். ஹாலிவுட் அக்க்ஷன் படங்களை பார்ப்பவர்கள் அவரின் முக்கிய படமான  Gladiator படத்தை தவறவிட்டு இருக்கமாட்டார்கள். கொஞ்சம் ரசனையுள்ள ஆள் என்றால் அவரது மற்ற இரண்டு முக்கிய படங்களான  A Beautiful Mind, Cinderella Man  பார்த்து இருப்பார்கள். இப்போது வரை எனக்கு பிடித்த ஆங்கில படம் எது என்றால் A Beautiful Mind தான் என்று சொல்வேன். ஜான் நாஷ் கதாபாத்திரத்தில் Russel Crowe செமையான நடித்து இருப்பார். இந்த படத்தை பற்றி பின்னர் வேறு ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.



ஜானின் மனைவி லாரா தனது கம்பெனி முதலாளியை கொலை செய்த குற்றத்துக்காக ஜெயில் தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறார். உண்மையில் அந்த கொலையை அவர் செய்யவில்லை ஆனால் சூழ்நிலை அவரை கொலை குற்றவாளி ஆக்குகிறது. ஜான்  தன்னால் முடிந்த அளவு சட்ட போராட்டம் நடத்தியும் அவரது மனைவிக்கு விடுதலை வாங்கி தர முடியவில்லை. லாரா மகன் லூக் மீது அளவு கடந்த பாசம் வைத்து இருக்கிறார். ஒவ்வொரு முறை தன்னை பார்க்க வரும் இருவரிடமும் தனது வேதனையை தெரிவிக்கிறார். இனி அவள் விடுதலை ஆவதற்கு வாய்பில்லை  என்பதால் ஜான் லாராவை ஜெயிலில் இருந்து  தப்பிக்க வைக்க  திட்டம் போடுகிறார். இதற்காக ஜெயிலில் இருந்து அதிகம் முறை தப்பித்த ஒரு குற்றவாளியை அணுகுகிறார். அவர் சில டிப்ஸ் கொடுக்க அடுத்த அடுத்த நாட்களில் திட்டத்தை ஜான் உருவாக்குகிறான். ஒரு நாள் தன்னை பார்க்க வரும் ஜானிடம் இன்னும் முன்று நாட்களில் தற்போது இருக்கும் ஜெயிலில் இருந்து மாற போகும் செய்தியை லாரா தெரிவிக்கிறாள். அடுத்த முன்று நாட்களில் நடக்கும் அதிரிபுதிரி தில்லிங் எஸ்கேப்பிங் தான் படத்தின் முக்கிய பாகம். பிளான் துல்லியமாக இருக்க வேண்டும் கொஞ்சம் சொதப்பினாலும் கணவனும் மனைவியும் ஆயுள் முழுக்க ஜெயில் தான். தொடுவது எல்லாம் ரிஸ்க்  டைமிங் மிக மிக முக்கியம். ஒரு நிமிடம் கூட குறைய கூடாது. எல்லாம் சரியாக சென்று கொண்டு இருந்த நேரத்தில் சின்னதாக ஒரு தவறு நடந்துவிடுகிறது. அதில் இருந்து அவர்கள் தப்பிதார்களா என்ன !!! படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். 




இந்த படம் தில்லார் வகையை சார்ந்தது. கடைசி கட்ட காட்சிகள் இப்படி தான் இருக்க போகிறது என்று ஜான் போடும் ப்ளானில் இருந்து கொஞ்சமே  கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். போலீஸ்காரர்களுக்கும் இவர்களுக்கும் இடையே நடக்கும் சேஸிங் செம. படத்தின் கடைசி கட்ட காட்சிகள் பல படங்களில் இருந்து உருவியது போல இருந்தாலும் அட போட வைக்கிறது. 

2008 ஆண்டு பிரெஞ்ச்மொழியில் வெளியான Pour Elle (Anything for her) படத்தின் ரீமேக் தான் THE NEXT THREE DAYS. படத்தை  இயக்கியவர்  . டைரக்டர் என்பதற்கு பதில் நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டர் என்று சொல்லலாம். இவர்   ரைட்டராக  Quantum of Solace Casino Royale ஆகிய இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பணியாற்றி இருக்கார்.  


படத்தின் டிரைலர் 
 


-- With Love
Romeo ;)

Monday, July 1, 2013

ஹாலிவுட் படம் - 1

The Raid Redemption (2011)

மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை முன்வைத்து  வந்த படங்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் இவனுங்களுக்கு  இதே வேலையா போச்சு என்று ஒதுக்கி வைத்து இருந்தேன். கடைசியாக பார்த்த மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் Ong Bak தான்.  அந்த படங்களின் கதைகள் எல்லாம் அரச காலத்து கதையையும் நம்ப முடியாத அளவுக்கு அந்தரத்தில் பறந்து கொண்டு இருப்பதெல்லாம் எல்லாம் இங்கேயே தமிழ் சினிமாவில் விஜய் அஜித் போன்ற உலக நடிகர்கள் மூலம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் என்றாலே மூவர் தான் நம் நினைவுக்கு  சட்டென வருவார்கள் ப்ருஸ்லீ, ஜாக்கி சான் மற்றும் ஜெட் லீ.

புருஸ்லீ படங்கள் எல்லாம் ரொம்பவே பழைய காலத்து படம் ஆகிவிட்டது. ஜாக்கி சான் படமும் போர் அடிக்க ஆரமித்து விட்டது. ஜெட்லீ படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது. இவர்கள் வருசையில் புதியதாக டோனி ஜா என்கிற தாய்லாந்து நாட்டு நடிகரின் Ong Bak சீரியஸ் மார்ஷியல் படங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. 

படம் பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ரசனையை விரும்புகிறார்கள். அக்க்ஷன் படங்கள் ஒரே மாதிரி வந்து கொண்டு இருந்த சமயத்தில் அதை வெகுவாக ரசித்து வரவேற்கும் ரசிகன் தான் ஒரு கட்டத்தில் அந்த படங்களை ஒதுக்கி வைத்துவிடுகிறான். அடுத்து ரொமான்ஸ் படங்கள் வரிசை கட்டி கொண்டு வரும் பிறகு காமெடி பிறகு திர்ல்லர் இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் ரசிகர்களின் ரசனை மாறுபடுகிறது.. இப்போது அக்க்ஷன் படங்கள் வரிசை .. 

The Raid - Redemption



அதிகாலையில் ஒரு ரெய்டு நடத்த இருவது பேர் கொண்ட போலீஸ் டீம் கிளம்புகிறது. அவர்களின் டார்கெட் 30 மாடிகள் கொண்ட அந்த அப்பார்ட்மெண்டிடை ரெயிடு செய்வது தான்.

அந்த டீமை வயதான கிழவன் அழைத்து செல்கிறான். ஐந்தாவது தளத்தை தாண்டியதும் Tama என்கிற அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் தாதா ஸ்பீக்கர் மூலம் அந்த அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தியை சொல்கிறான். ஆறாவது தளத்தில் போலீஸ் வந்துவிட்டது அவர்களை யார் கொள்கிறார்களோ அவர்கள் இனிமேல் அந்த அப்பார்ட்மெண்டில் இலவசமாக குடியிருந்து கொள்ளலாம். சுற்றிலும் அடிஆட்கள் கையில் எல்லா  ஆயுதமும் இருக்கிறது.  எங்கே இருந்து சுடுவார்கள் எப்போ தலையில் போடுவார்கள் என்றே தெரியாது. ஒரு பக்கம் போலீஸ்காரர்களை கொன்று குவித்து கொண்டு இருக்க மறுபக்கம் எப்படியாவது அங்கே இருந்து எஸ்கேப் ஆகா நினைக்கும் சில போலீஸ்காரர்கள். இவர்களிடம் மாட்டாமல் எஞ்சியவர்கள் எப்படி எஸ்கேப் ஆனர்கள் என்பது தான் கதை. 

முழுக்க முழுக்க அதிரடி அக்க்ஷன் இந்தோனேசிய  படம். இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் பார்ப்பது நல்லது. ரியல் அக்க்ஷன் எப்படி இருக்கும் என்பதற்கு படம் நல்ல உதாரணம். ஹீரோ வில்லன்  எல்லோரும் அடிமேல் அடி வாங்கி கொண்டு இருக்கிறார்கள். Yayan Ruhian தனியாக ஒரு போலீஸ்காரருடன் போடும் சண்டை. போதை மருந்தை தயார் செய்து கொண்டு இருக்கும்  பெரிய கும்பலை எதிர்த்து ஹீரோ Iko Uwais அவனுடன் மற்ற இரண்டு போலீஸ்காரர்கள் போடும் சண்டை. கடைசியாக Yayan Ruhian எதிர்த்து Iko Uwais மற்றும் அவன் சகோதரன் போடும் சண்டை இந்த முன்று பிரதான சண்டை காட்சிகள் மிஸ் பண்ணவே கூடாது..   


இந்தோனேசியாவின் தற்காப்பு கலையான Pencak Silat பிரதானமாக வைத்து மிரட்டி இருக்கிறார்கள். ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழுகிறது செம பாஸ்ட் சண்டை காட்சிகள். இதில் Yayan Ruhian Pencak Silat  தற்காப்பு கலையில் எல்லா லெவலையும் முடித்து மிக சிறந்த வீரராக இருக்கிறார். அதனால் தான் என்னவோ படத்தின் டைரக்டர் இவரை அடித்து வீழ்த்த முடியாது என்பதை அவர் இறக்கும் காட்சியின் மூலம் தெரியபடுத்துகிறார். 

படத்தை எழுதி டைரக்டர் செய்தவர் Gareth Evans . இது அவரது முன்றாவது படம் இதற்கு முந்தைய படங்களை பார்த்தே தீரவேண்டும் என்கிற ஆவலை கொண்டு வந்துவிட்டார். படத்தின் பின்னணி இசையை அவ்வளவு எளிதில் ஓகே என்று சொல்லி விடமுடியாது அதிரடி அடிதடிக்கு ஏற்ப பின்னணி இசையும் செமயா மிரட்டி இருக்கார்.



அக்க்ஷன் ரசிகர்கள் தவற விட கூடாத படம் :).


--
With Love
ரோமியோ 

Tuesday, March 26, 2013

சங்கதிகள் - 25/03/2013

சங்கதிகள் என்கிற தலைப்பில் சின்ன சின்னதா சில பத்திகள் எழுதி கொண்டு இருந்தேன். ப்ளாக் எழுதுவதில் இருந்த ஆர்வம் குறைந்தால் இதை அப்படியே நிறுத்திவிட்டேன் இனி தொடரலாம் என்கிற ஐடியா இருக்கிறது பார்க்கலாம். 


 ----------------------------------------------------------------------------

 அநியாயத்துக்கு இங்கே மின்வெட்டு, யார் எப்படி போனால் என்ன என்கிற நினைப்பில் இருக்கிறார்கள் போல. கடந்த 1 வாரத்தில் இரவுகளில் ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை மின் தடை. புழுக்கம், கொசுகடியால்  தூக்கம் போய் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன். அதிகாலை 6 மணி முதல் 9 மணிவரை மின்சாரம் இருக்காது. இந்த நேரத்தை தேர்ந்தெடுத்த நாதேறி எவன் என்று தெரியவில்லை. வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்க வேண்டுமே என்னை செய்ய ?? திரும்ப அம்மிகல்லுக்கும் அட்டாங்கல்லுக்கும் வேலை வைத்துவிட்டார்கள் இந்த ஆட்சியாளர்கள். மின்சாரத்தை நம்பி தொழில் செய்பவர்களுக்கு செம அடி என்று சொல்லலாம். அக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன் இதை போன்ற மின்வெட்டால் தமிழ்நாடே சிக்கி திணறி கொண்டு இருந்தது. இங்கே தமிழ்நாடு என்பது சென்னையை தாண்டிய பகுதிகள். சென்னை என்றோ தமிழ்நாட்டில் இருந்து விடுபட்டு தனி மாநிலமாக இருக்கிறது.


 ----------------------------------------------------------------------------

தமிழனுக்கு என்ன தேவை என்பதை ஹிந்திகாரன் நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறான்.  பெரிய பெரிய நிறுவனங்கள் முதல்  பஞ்சு மிட்டாய் வியாபாரம்  அவர்கள் உள்ளே புகுந்து கிடைத்த வரை லாபம் என்கிற கணக்கில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் .

நேற்று காலை வீட்டில் இருந்து கிளம்பும் போது ஹிந்திகாரன் ஒருவன் சிம்மினி விளக்கு விற்று கொண்டு வந்தான். எதிர் வீட்டு மாமி அவனிடம் பேரம் பேசி கொண்டு இருந்தார். அவர்கள் வீட்டில் UPS வசதி இருக்கிறதே அப்பறம் எதுக்கு சந்தேகத்தை அவரே நிவர்த்தி செய்தார். பேட்டரி சார்ஜ் செய்வதற்கு கூட கரண்ட் இருப்பதில்லையே.  

 ----------------------------------------------------------------------------


வெயில் இங்கே  செம காட்டு காட்டுது. இரண்டு நாட்களுக்கு முன்  வண்டியில் கோயம்புத்தூர்  இருந்து மேட்டுபாளையம் போயிருந்தேன் 40 கிலோமீட்டர் தான். அன்னூர் போயி கட் பண்ணிக்கலாம்ன்னு அக்குடியா, அன்னூர் போறவரைக்கும் கூட அவ்வளவா வெயில் தெரியல. அங்கே இருந்து மேட்டுபாளையம் 20 கிலோமீட்டர்  30 நிமிஷத்துல போயிட்டேன் ஆனா மொட்டை வெயிலில் போறது தான் பெரும் பாடாகி போச்சு. போற வழியெல்லாம் எவனாவது சைட் பிரிச்சி போட்டு அங்கேயே ஒரு குடுசையும் போட்டு இளிச்சவாயன் எவனாவது சிக்குவானான்னு தேவுடு காத்துட்டு இருக்காங்க. இவர்கள் ரொம்ப சாமார்த்தியமாக சில வேலைகளை செய்கிறார்கள். சைட் பிரித்ததும்  கொஞ்ச நாட்களுக்கு பிறகு அங்கே இரண்டு முன்று வீடுகளை இவர்களே கட்டி வருபவர்களிடம் எல்லாம் அந்த இடத்தின் சொந்தகாரர் வீடு கட்டுறார் என்று பொய் சொல்லி இடத்தை விற்றுவிடுகிறார்கள். அன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை இப்படி என்றால் மேட்டுபாளையத்தில் இருந்து காரமடை (மெயின் ரோடு இல்லை ஊருக்குள் சுற்றோ சுற்றென்று சுற்றி வரணும)  வரும் வழியில் நிறைய இடங்களை சைட் பிரித்து இருக்கிறார்கள். எனது அத்தை ஒருவர் அந்த மாதிரியான அத்துவான காட்டில் ஒரு வீடு கட்டி கொண்டு இருக்கிறார். யானைகள் தொல்லை அதிகம் என்பதால் அதை வாடகைக்கு மட்டுமே விட இருக்கிறார்.  உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி ஜூஸா என்றதுக்கு அவரால்  பதில் சொல்ல முடியவில்லை.   

----------------------------------------------------------------------------

வீட்டுக்கு போகும் வழியில் நுங்கு விற்று கொண்டு இருப்பார் ஒருவர். 10 ரூவா கொடுத்தா 3 நுங்கு கொடுக்குறாங்க.. அவ்வ்வ் அநியாயமா இருக்கே சென்னைல ரூவாய்க்கு 1 இல்லைனா 10 ரூவாய்க்கு 8 நூங்கு கிடைக்கும்.  தெளுவு (பன மரத்தில் இருந்து எடுக்கப்படும்) 1 லிட்டர் 40 ருவாயம்... பனை மரத்துக்கு எந்த உரமும் வேண்டாம் தண்ணி கூட வேண்டாம் அதுபாட்டுக்கு வளந்து நிக்கும். அங்கேயிருந்து பறித்துக்கொண்டு வந்து கொள்ள லாபத்துல விக்கிறாங்க, இதற்கு நேர் மாறாக  தர்பூசணி விலை அநியாயத்துக்கு எறங்கி போயி கேடக்குது ஒரு கிலோ 8 ரூவாயிக்கு விக்கிறாங்க. பெரிய பழம் எப்படியும் 4-5 கிலோ வரும் 5 பேர் கொண்ட குடும்பம் ஒண்ணு ரவுண்டு கட்டி திங்கலாம், ஜூஸ் போடலாம். ஜூனியர் ஸ்கூல் மிஸ் தர்பூசணி சாப்பிடுவது நல்லதுன்னு சொல்லிட்டாங்களாம் டெய்லி ரெண்டு அல்லது முன்று துண்டுகளை உள்ளே தள்ளிட்டு இருக்கான்.

----------------------------------------------------------------------------


இப்போ எல்லாம் 1 ரூபா சில்லறை இல்லை என்று சொல்வது பேஷன் இல்லை போல, 5 ரூபா சில்லறை இல்ல இந்தாங்க பூஸ்ட் பாக்கெட் என்று கையில் திணிக்கிறார்கள்.. அவனிடமே அதை திரும்ப தந்துவிட்டு அடுத்த முறை வரும் போது வாங்கிக்கிறேன் என்பது எனது வாடிக்கை ஆகி கொண்டு இருக்கிறது.  இன்னைக்கு காலைல மெடிக்கல் ஷாப்பில் ஜூனியருக்கு மருந்து வாங்கிவிட்டு  சில்லறை 7 ரூபா இல்ல ஷாம்பு தரட்டுமா என்ற பெண்ணிடம் இருங்க வரேன் என்று வீட்டுக்கு சென்று 50 பைசா சில்லறையை 3 ரூபாய்க்கு எடுத்துட்டு வந்து கொடுத்தேன். 50 பைசா எல்லாம் வாங்குவதில்லை என்ற பெண்ணிடம் அப்பறம் எதுக்கு 50 பைசா சாக்லேட் விக்கிறீங்க என்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் சில்லறையை கல்லாவில் போட்டுவிட்டு  10 ருபாய் நோட்டை தந்தார் ## கொய்யால யாரு கிட்டா.. ஊட்டுல 50 பைசா காயின் நிறைய வச்சி இருக்கேன் :)

----------------------------------------------------------------------------

இந்த மாத முதல் வாரத்தில் திருப்பூரில் இருக்கும் மாமா வீட்டுக்கு சென்று வந்தேன். அப்படியே இந்த புகைப்படத்தையும் எடுத்தேன்.


எனது கூகுள் +, மற்றும் Facebook பக்கத்தில் இந்த படத்தை பகிர்ந்து இருந்தேன். ராஜன் நெல்லை என்கிறவன் இந்த படத்தை எடுத்து அதில் அவனது பெயரை போட்டு அவன் எடுத்ததை போல Facebookக்கில் போட்டு இருக்கிறான். கொடுமை என்னவென்றால் இந்த புகைப்படம் எனது தம்பி வேறு ஒரு க்ருப்பில் இருந்ததை பார்த்து அவனது பக்கத்தில் ஷேர் செய்து இருந்தான். அதை பார்த்து தான் இந்த ராஜன் நெல்லை என்கிற கபோதி செய்த திருட்டு தனம் தெரிந்தது.  அவனது Facebook பக்கம் சென்று கேள்வி கேட்டதும் உடனே படத்தை  எடுத்துவிட்டான். அவன் பக்கத்தில் இருந்தது எல்லாம் வேறு ஒரு  இடத்தில இருந்து உருவியது தான்.  இந்த படத்துக்கு ஏண்டா இவ்வளவு சீன் போடுறானே என்று நினைப்பீர்கள். உங்கள் கைக்குட்டை சின்னது தான் அதை மற்றொருவன் எடுத்து சென்றால் பார்த்துட்டு  சும்மாவா இருப்பீங்க ??



அன்புடன் 
ரோமியோ 



Sunday, March 24, 2013

பரதேசி



வாழ்கையில் இனி எக்காரணத்து கொண்டும் அதிகபடியான விமர்சனங்களை படித்து படம் பார்ப்பதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன் ###  பரதேசி விமர்சனம் தேடி தேடி படித்து எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் படம் பார்த்து தொலைத்தேன் :((... இரண்டு சீன் மட்டும் ஆணி அடிச்சது போல நெஞ்சில் ஒட்டிகிச்சு  1. இடைவேளை சமயத்தில் இறக்க போறவனின்  கை.... 2 . கடைசி சீனில் அங்கமாவை பார்த்து கதறும் ராசா.



இடலாக்குடி ராசாக்கும் இந்த படத்தின் ராசாக்கும் என்ன சம்பந்தம் ??? இடலாக்குடி ராசா ஒரு கோட்டிகாரன்  இதில் அதர்வா ஒண்ணும் அப்படிபட்டவன் இல்லையே. ராசா என்கிற பெயரும்.. ராசா வண்டியை விட்டுடுவேன் என்கிற வசனமும் தான் உபயோகப்படுத்தி இருக்கார். அதுக்குள்ளே அந்த கதையையும் இதுல இழுத்து விட்டு ஆஹா ஓஹா பேஷ் பேஷ்னு பேசிட்டு இருக்காங்களே !!!  G.V. பிரகாஷ் சுத்தம் என்ன எழவுக்கு  பாலா இவன் கூட எல்லாம் கூட்டணி   வச்சிகிட்டார்.. பின்னணி இசையை எங்கேயோ கேட்டது போலவே இருக்கு இளையராஜாவை ரொம்ப மிஸ் பண்ணிய படம்.

தனிஷ்கா நெம மெர்சலான இருக்கு,,  நல்லாவே நடிக்கிது..

எரியும் பனிக்காடு என்கிற நாவலின் களத்தை மட்டும் எடுத்து கொண்டு இந்த படத்தை எடுத்தார் என்கிற வாதம் எல்லாம் தூக்கி போடுங்க.. இடைவேளைக்கு பிறகு வரும் கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க அந்த நாவலில் இருந்து உருவி எடுத்தது தான்.

பாராட்ட எவ்வளவோ இருக்கு எழுதுவதற்கு தான் ஒண்ணும் இல்லை. இந்த ஒருவாரத்தில் படத்தை பவர் சோப்பு   போட்டு அடியோ அடியென்று அடித்து டங்குவெரு கிழிந்து தொங்குகிறது. இதில் நானும் சேர வேணுமா !!!!


-------

ரோமியோ

Friday, February 15, 2013

கூகுள் கூட்டல்

இப்போதெல்லாம் ப்ளாகில் எழுதுவதில்லை, காரணம் ஒன்றும் அதிகமில்லை சோம்பேறி தனம் தான். ஆனால் கூகுள்+ சிலும் , Facebook பகுதியில் சின்ன சின்னதாக அதிகமாக எழுதி கொண்டு தான் இருக்கிறேன். சிலவற்றை இங்கே தொகுத்து வைக்கலாம் என்று ஏற்கனவே ஒரு பதிவை தேத்தி இருக்கிறேன், இனி அதை போலவே அங்கே பகிர்ந்தது சிலவற்றை இங்கேயும் பதிவு செய்யலாம் என்றிருக்கிறேன். 

         ____________________________________________________________________

இட ஒதுக்கீடு பற்றி பேச்சு வரும்போதெல்லாம் நான் அமைதியாகிவிடுவதுண்டு..  நான் படிக்காதவன்,, எந்த அரசு வேலைகளுக்கும்  முயற்சி செய்யாதவன், இவ்வளவு ஏங்க இன்னும் ரேஷன் கார்டே வாங்காதவன் என்பதால் எந்த பக்கம் சாய்வது என்று தெரியவில்லை.

ஆனா என்னிடம் ஜாதி சான்றிதல் இருக்கிறது. எனக்கு இது வரை அது  உபயோகப்படவே  இல்லை நாளை எனது சந்ததிக்கு வேண்டுமென்றாலும் உபயோகப்படும் இல்லை படாமலும் போகலாம்.  ஜாதி முக்கியம் அமைச்சரே என்றால் அதை வைத்து படிப்பு, வேலை சமுதாய அந்தஸ்துக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும். தனி மனித ஒழுக்கத்துக்கு எல்லாம் சரிவராது.
 13, Feb 2013

ரிஸானா என்கிற பெண்ணிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டணையை Facebook பக்கத்தில் கண்டேன். வெள்ளை உடை உடுத்திய அரபு ஷேக் ஒருவன் அவள் தலையை ஒரே வீச்சில் கீழே விழ செய்தான். ரிஸானா உடுத்தி இருந்ததும் வெள்ளை உடை, அவள் கண்கள் கட்டப்பட்டு இருந்ததும் வெள்ளை உடை தான்.. தயவு செய்து இனி யாரும் வெள்ளை நிறம் என்பது சமாதானத்துக்கானது என்று சொல்லாதீர்கள். கொலைக்கும் குற்றத்துக்கும் தண்டனைக்கும் கூட அவை உபயோகபடுத்தபடலாம்.

11,Feb 2013

நினைவுறுத்துபவரின் பெண்   (The Memory Keeper's Daughter)
கிம்  எட்வர்ட்ஸ்
தமிழில் - தருமி

வலசை  புத்தகத்தை எடுத்தும் சும்மா புரட்டினேன் கண்ணில் கருப்பு வெள்ளையில் இந்த பெண்மணி புகைப்படத்தை பார்த்ததும் படிக்க துண்டியது (காரணம் எதுவாக இருக்கும் என்று சரியாக தெரியவில்லை).. மூல நூலில் இருந்து இரண்டு முக்கியமான பகுதிகளை மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.. Down Syndrome என்கிற நோயால் பாதிப்புள்ளாகும் பீப் நினைத்து கண்கள் கலங்குகிறது. தனது மகள் உயிரோடு இருப்பதை கரோலின் நோராவிடம் சொல்லிய பிறகு அவள் மனநிலை   எப்படி இருக்கும். அவள் பீப்பை ஏற்று கொள்வாளா !!! அப்படி ஏற்று கொண்டாலும் 13 வருடங்களாக அம்மாவாக இருந்து அவளை கண்ணும் கருத்துமாக காப்பாற்றி கொண்டு இருந்த கரோலினை  விட்டு பீப் எப்படி  நோராவை ஏற்று கொள்வாள் !!!...  எவ்வளவு கேள்விகள் உணர்ச்சி போராட்டங்கள்..  Seriously You guys made my day to think about this child :)

10, Feb 2013

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஸ்கூலில் இருந்து வந்தவன் JCB போடுன்னு சிஸ்டம் முன்னாடி உட்கார்ந்து பார்த்துட்டு இருந்தான். ஒரு கஸ்டமர் எதோ சந்தேகம் கேட்க நான் அதை பார்க்க போயிட்டேன். திரும்ப வந்தா தலைவரு அப்படியே தூங்கிட்டு இருக்கான் :)))..

08, Feb 2013

இன்று காலை குளித்து முடித்து சாமி கும்பிட்டு நெற்றியில் திருநீரை பூசி கொண்டு ஹாலில் திருக்குர்ஆன் வாசித்து கொண்டு இருந்தேன். ஏதோ சொல்லவேண்டி எனது ஹவுஸ் ஓனர் வந்தவர் வாசலில் இருந்தபடியே  என்னையும் கையில் இருந்த புத்தகத்தையும் பார்த்தவர் குழப்பத்துடன் திரும்பி சென்றுவிட்டார் :))))... காலையில் ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்க நைட் எப்படியும் வாசலிலே வழி மறித்தாலும் மறிப்பார் :))

07, Feb 2013

மெரினா பீச்சில் பதிவர் சந்திப்பு, முதல் முறையாக அன்று தான் டோண்டு ராகவன் சாரை பார்க்கிறேன். அவ்வளவு இயல்பாக பேசி கொண்டு இருந்தார். அவரின் பதிவுகளில் தலைக்கு மேலே தூக்கி பிடிக்கும் இந்துத்துவாவை வெறுத்தாலும் அவர் எழுத்துகளுக்கு நானும் அடிமை. வாங்கோ அப்படியே சமுத்திரத்தில் கால் நனைச்சிட்டு போகலாம் என்றார். இல்ல சார் நான் ஆபீஸ் போகணும் டிரஸ் எல்லாம் நனைஞ்சிடும்.. ஓகே நோ ப்ராபளம்.. இங்கேயே நில்லுங்கோ வந்துடுறேன். திரும்பி வந்தவர் தனது மொழிமாற்று வேலையை பற்றி நிறைய பேசினார். அவர் வயது என்ன எனது வயது என்ன!!!  ஹ்ம்ம் அதை எல்லாம் அவர் கண்டுக்கவே இல்ல.. சிகரெட் பிடிக்காதீங்க கேன்சர் வந்துடும் அட்வைசை பண்ணின்னார். அவருக்கு முதலில் கேன்சர் என்கிற செய்தியை கேட்டு திடுக்கிட்டேன். கேன்சருக்கு எடுத்து கொண்ட சிகிச்சைக்கு பிறகு  தலையில் முளைத்த முடியை கூட சுவாரசியமா எழுதி இருந்தார்.

We Miss you சார் :(...
06, Feb 2013

சார் நாங்க ஹைதராபாத்ல இருந்து பேசுறோம் (தமிழ் மொத்தமும் ஒடஞ்சி  போயிந்தி)

சொல்லுங்க

எங்க ஜூவல்லரில இருந்து குலுக்கல் முறையில் 50 பேரு தேர்ந்தெடுத்து அவங்களுக்கு ஒரிஜினல் ஹைதராபாத் முத்து அனுப்புறோம். நீங்க 50 பேர்ல ஒருத்தர்.. உங்க அட்ரஸ் கொடுங்க போஸ்டல் சார்ஜ் 950 மட்டும் கட்டினா போதும்..

ஹைதராபாத் என்ன வெளிநாட்டுலயா இருக்கு.. இல்ல நீ அனுப்புற பார்சல் வெயிட் என்ன 10 கிலோவா 950 ரூவா கேக்குற !!

அது வந்து சார்...

@#@!*&^$போன் வைடா..
 
05, Feb 2013
 
கடுப்பேத்துவது என்றால் என்ன !!!


எப்போதும் எனது டேபளில் இரண்டோ மூன்றோ புத்தங்களை வைத்து இருப்பேன். இந்த புத்தகங்களை பார்த்து புத்தக நண்பர்களானவர்கள் சில பேர். நேற்று  ஒரு கஸ்டமர் நான் படிக்கும் புத்தங்களை பற்றி பேசி

எவ்வளவு புத்தகம் வாங்குவீங்க

வருஷத்துக்கு ஐந்து ஆயிரம் ருபாய் அளவுக்கு வாங்குவேன் என்றேன்.

அவ்வளவு தானா எனக்கு எப்படியும் பத்து ஆகிடும் !!!..

திகைத்துவிட்டேன் வீட்டில் ரெண்டு பீரோ அளவுக்கு புத்தகம் இருக்கிறது என்றார். பெரிய படிப்ஸ் போல இருக்காரே என்றது மனம்.

என்ன மாதிரியான புத்தகம் படிப்பீங்க..

shidney sheldon அப்பறம் சில ஆங்கில பெயர்களை சொன்னார் (எழவு அவங்களை எல்லாம் படிச்சி இருந்தாதானே பெயரை நினைப்பில் வச்சி இருக்க முடியும்).

அப்பறம் வேற என்ன புத்தகம் படிப்பீங்க..

பொன்னியின் செல்வன் படிப்பேன் , அப்பறம் கண்ணதாசன் பதிப்பகம் shidney sheldon அப்பறம் இன்ன பிற ஆங்கில எழுத்தாளர்களின் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருக்காங்க அந்த புத்தகம் !!! (அது தான் ஆங்கிலத்தில் படிச்சாச்சே !!!)

அப்பறம் சார் நிறைய இருக்கு

சார் .. கோபல்ல கிராமம், கோபல்ல மக்கள் புத்தகம் படிச்சி இருக்கீங்களா..

இல்ல அது யாரு எழுதியது .

கி.ரா ..

கி.ராவா  யாரு அது ??? ..

 ( டைம் ஆச்சு கடையை சாத்தலாம் - மைண்ட் வாய்ஸ் )  அவரும் ஒரு எழுத்தாளர்தான்

படிச்சி இருக்கலாம் சார் !!!

சரி நீங்க நீயா நானா கோபி எழுதிய புத்தகம் படிச்சி இருக்கீங்களா !!!

(ஓ நீங்க அந்த மாதிரியான படிப்பாளியா !!!!) இல்ல சார் என்னோட நண்பர் கோபி எழுதியதை தான் அடிகடி படிக்க வேண்டி வருகிறது..

நீங்க அவருக்கு நண்பரா

யாருக்கு

நீயா நானா கோபிக்கு

(சத்தியமா இந்த இடத்தில சிரிச்சிட்டேன்) இல்ல சார் இது வேற கோபி .. சரி நீங்க அந்த சிஸ்டம் எடுத்துகோங்க. (தப்பிச்சேன்)..

வெளியே போகும் போது நாடோடி தடம் புத்தகத்தை பார்த்து.

இது என்ன மாதிரியான நாவல்.

இது நாவல் இல்ல சார் கட்டுரை தொகுப்பு

தமிழருவி மணியன் கட்டுரை தொகுப்பு எல்லாம் நான் படிச்சி இருக்கேன் . புத்தகமும் இருக்கு அடுத்த தடவை வரும் போது எடுத்துட்டு வரேன்.

ரொம்ப நன்றி சார் ( நாளைக்கே கடையை இழுத்து சாத்திடணும், இல்லைனா என்னையும் கோபி புத்தகத்தை படிக்க வச்சிடுவாரு) :))
 
05, Feb 2013
 
காலைல பையனை எழுப்புறதுக்கே தலைகீழா நிக்க வேண்டி இருக்கு, இதுல அவனை குளிப்பாட்டி ரெண்டு வாயி சாப்பிடவச்சி ஸ்கூல் போகுறதுக்குள்ள பெரும் போராட்டம் தான் போங்க.

 7.30 - 8 வரை ஒளிபரப்பாகும் Thomas the train படுத்துட்டே பார்க்கிறது.
 8 - 9 மணிக்குள்ள  தான் ப்ரஷ் பண்ணி காம்ப்ளான் குடிச்சு,   குளிச்சு கிளம்ப முடியும்.
 9 மணி ஆனா போதும்  போகோ சேனல்ல சோட்டா பீம் போடு அப்போ தான் சாப்பிடுவேன், இவனுக்கு அடிதடி மாஸ்டர் இந்த சோட்ட பீம் தான் ..

ஆ ஊ ஐ என்று கத்தி கொண்டே ஒதைப்பான் மகாவை.   இவனுக்கு சந்தோசம் என்றாலும் அடி அவளுக்கு தான் யார் மீது கோவம் என்றாலும் அடி அவளுக்கு தான்.. சோட்டா பீமை தடை செய்ய சொல்லி ஒரு வழக்கு போடணுங்க என்றாள் நேற்று :))..

 இவன் செய்யும் சேட்டைகள் எல்லாம் நான் செய்து இருக்கிறேனா என்று அம்மாவிடம் கேட்டேன். அவங்களுக்கு சரியாக  தெரியவில்லை, அப்பாவும் அம்மாவும் வேலைக்கு சென்று கொண்டு இருந்ததால் எங்கள் வளர்ப்பில் அப்பாவின் அம்மாவிற்கே பெரும் பங்கு இருந்தது. அம்மிச்சி இருந்து இருந்தால் எனது குழந்தை தனத்தை தெரிந்து கொண்டு இருக்கலாம். இதை எல்லாம் ஒரு டயிரியில் எழுதி வைக்கணும். அவன் குழந்தை சேட்டை செய்யும் போது உன்னை போல தானே உன்னோட குழந்தை இருக்கும் என்கிற ஆதாரத்தை காட்டலாம் :)



 01, Feb 2013

 --
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)

Thursday, February 14, 2013

மறுவீடு

பெண் குழந்தை பிறந்ததும் மகாலட்சுமி வீட்டுக்கு வந்துவிட்டாள் என்று சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருப்பார்கள்.  அந்த குழந்தை குமரி ஆகி  அவள் மற்றொரு வீட்டுக்கு மருமகளாக போகும் நேரம் எவ்வளவு வேதனையை அனுபவிப்பார்கள். எனது அக்கா  கல்யாணம் முடியும் போது நான் சிறுவன், அக்காவிற்கு 17 வயதிலே கல்யாணம் முடிந்துவிட்டது. அப்போதெல்லாம் உறவுகள் பற்றிய சிந்தனைகள்  ஒன்றும்  தோன்றியதில்லை. அதுவும் அக்கா தங்கையை பற்றிய நினைவுகள் வந்ததே இல்லை. ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா விளையாட்டு அவ்வளவு தான்.

எனது தங்கையின் கல்யாணத்தில் தான் பிரிவின் வேதனையை புரிந்து கொண்டேன். கல்யாணம் முடிந்து மண்டபத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல நேரம் வந்துவிட்டது. உறவுகள் அத்தனையும் ஒன்றாக மண்டபத்தில் இருக்க முதல் விசும்பல் யாரிடம் இருந்து ஆரமித்தது என்று தெரியவில்லை அடுத்தடுத்து அந்த விசும்பல் பெரும் கண்ணீராக எல்லோருடைய கண்களில் இருந்து வந்து கொண்டு இருந்தது. சந்தோஷத்துடன் துடங்கிய அந்த நாள் ஒரு பிரிவை தாங்கி கொள்ள முடியாமல் கண்ணீரில் முடிந்தது. எனது தங்கையின் பக்கத்தில் நான் போகவே இல்லை, அவளருகில் சென்றால் கண்டிப்பாக நானும் அழுதுவிடுவேன்  என்று தெரிந்ததால் சமையல்கட்டு பக்கமாக சென்றுவிட்டேன்.  விதி யாரைவிட்டது அவள் மறு வீட்டுக்கு அழைத்து சென்ற டாட்டா சுமோ வண்டியின் பின்புறத்தில் என்னையும் எனது சித்தப்பா மகனையும் ஏத்தி விட்டுவிட்டார்கள். 

நான் பார்த்த வரை பல கல்யாணத்தில் மணப்பெண் தாலி கட்டும் போதே கண்ணில் நீர் வர ஆரமித்துவிடுகிறது,  நடிகை சிநேகா கூட இதுக்கு  விதிவிலக்கு அல்ல என்று அவரது கல்யாண வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன்.   ஆனால் இன்று பார்த்த கல்யாணம் மனதுக்கு சந்தோஷத்தை தந்தது. சுரேஷ் எனது ஆருயிர் நண்பன் எனது வளர்ச்சியின் மீது பெரிதும் அக்கறை உள்ளவன் அவனுக்கு தான் இன்று திருமணம் நடந்தது, திருமணத்தை மணமேடைக்கு அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் மணமக்களை பார்த்து கொண்டு இருந்தேன் இருவர் முகத்திலும் எந்த சலனமும் இல்லை சந்தோசம் மிகுதியாக இருந்தது.  தாலி கட்டி வேறு சில சம்பிரயாதங்கள் எல்லாம் முடிந்தது அந்த பெண்ணின் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம். உறவினர்களுடன் நிறைய புகைப்படங்கள் எடுத்து கொண்டார்கள் சுரேஷ் கூட ஏதோ அசதியில் இருந்த முகம் போல போஸ் கொடுத்து கொண்டு இருந்தான் மணப்பெண் முகத்தில் அவ்வளவு புத்துணர்ச்சி. என் மனைவிடம் அதை சுட்டி காட்டினேன், அவளும் ஆச்சரியபட்டாள். எப்படி இந்த பெண் இவ்வளவு சந்தோஷமா இருக்கா !! வருத்தமே இல்லையா திரும்ப திரும்ப ஒலித்த கேள்விகள். என்ன சொல்வதென்று  தெரியவில்லை ஆனால் மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. 


இன்று சாயந்திரம் அவள் மறுவீடு செல்வாள் அப்போது கச்சேரி ஆரமித்து  இருந்தாலும் இருக்கும்.



--
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)