Sunday, October 4, 2015

மிளிர்கல் - இரா.முருகவேள்

மிளிர்கல் - இரா.முருகவேள்

இந்த நாவலை படிப்பதற்க்கு முன் சிலப்பதிகாரம் நூலை வாசித்துவிடுவது நல்லது. சிலபதிகாரத்தை முன்வைத்து ஒரு பயணத்தை தொடங்கி அதனுள் சங்க இலக்கியங்கள் மீதும் சமகால அரசியல், ரத்தின கற்கள் பற்றி பல கேள்விகள் எழுப்பி நாவலை படிக்கும் நாமும் அந்த கேள்விக்கு பதில் என்னவாக இருக்கும் என்கிற தேடலை தொடங்கவைத்து விடுகிறார். சங்க காலத்தில் நடந்ததாக கூறப்படும் கதைகளின் களம் இப்பொழுது எப்படி இருக்கும் என்கிற கேள்வி தான் ஆசிரியருக்கு இந்த நூலை எழுத தோன்றி இருக்கலாம். ஒரு ஆராய்ச்சி கட்டுரை வாசித்தது போல இருக்கிறது.


   பூம்புகாரில் தொடங்கி கொடுங்கலூர் வரை நீண்ட பயணமாக இது. ஒவ்வொரு இடத்திலும் விதவிதமான அனுபவங்கள், கேள்விகள் சாரமாரியாக எழும்புகிறது அதற்கான பதில்கள் ஒரளவு திருப்தி அளிக்கிறது. நமது வரலாறுகளை முறையாக பதிவு செய்யவில்லை என்பது தான் நாம் செய்த தவறு. தமிழர்களுகேன்று இருக்கும் மிக நீண்ட வரலாறு சரியாக பதிவு செய்யவில்லை. தற்போதைய வரலாறு ஆய்வாளர்கள் கிடைத்த தகவல்களை வைத்து தங்களால் ஏற்றுக் கொள்ள முடிந்ததை மட்டும் உண்மையாக இருக்கலாம் என்கிற ரீதியில் பதிவு செய்து இருக்கிறார்கள். சங்கதமிழில் எழுதப்பட்டு இருக்கும் பல நிகழ்வுகள் நடந்ததாக கூறப்படும் இடங்களின் இப்பொழுது முற்றிலும் அழிந்துவிட்டது. மிஞ்சிய சில வரலாறு சுவடுகளாவது நாம் காப்பாற்ற வேண்டும். முக்கியமாக தற்சமயம் மதுரையில் நடந்து வரும் ஆய்வுகள்.கண்ணகியும் கோவலனும் நடந்து சென்ற பாதையில் பயணித்து அதை பற்றிய ஆய்வு படம் எடுக்க வட இந்தியாவில் இருந்து வரும் முல்லை. முல்லைக்கு உதவி செய்ய வரும் கம்யூனிஸ்ட் நண்பனான நவின். ரத்தின கற்கள் கிடைக்கும் இடங்களாக அறியப்படும் காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அதை கைபற்ற எதையும் செய்ய துணிந்த லோக்கல் ஆட்கள் மற்றும் அரசியல்வாதிகள். அதே கற்களை அரசின் அனுமதியுடன் மிக பெரியதாக சுரங்கமாக தோண்டி எடுக்கும் முயற்சியில் இறங்கும் காப்ரேட் கம்பெனி. அந்த கம்பெனியின் ஸ்பான்சரில் ரத்தின கற்களை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் குமார். இப்படி எல்லோரையும் ஒரே புள்ளியில் இணைய வைக்கிறது ரத்தின கல்லும் சிலப்பதிகாரமும்.


பூம்புகாரில் இறங்கிய முதல் நாளே மிக பெரிய ஏமாற்றத்தை சந்திக்கும் முல்லைக்கு இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் தோன்றுகிறது. அதையும் மீறி ஒரு அமானுஷமான நிகழ்வின் மூலம் தனது பயணத்தை தொடர விரும்புகிறாள். அவர்களின் பயணத்தில் குமார் இணைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு. மூவரும் கண்ணகி நடந்து சென்ற பாதையில் தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள். அவர்கள் சென்ற திசையில் ஏற்படும் தடங்கல்கள் முன்னேறி செல்ல செல்ல சிலபதிகாரத்தில் கூறியபடி தடயங்கள் கிடைக்காமல் திணறி கண்டுக்கொண்ட இடங்களின் மூலம் கேள்வியை தொடங்கி அதற்கான பதிலை முடிந்தளவு தெரிந்துக் கொள்கிறார்கள்.கண்ணகியும் கோவலனும் எந்த நாட்டை சார்ந்தவரிகள் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. இருவர் பெயர்களை வைத்து ஆராய்ந்து அவர்கள் சேர நாட்டை சார்ந்தவர்களாக இருக்கலாம் எங்கிறார்கள், ஒருவேளை இருக்கலாம் கண்ணகியின் கால் சிலம்பில் இருந்த அந்த ரத்தின கற்கள் சேர நாட்டில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது, அப்படியே இருந்து இருந்தால் அவர்கள் ஏன் பூம்புகார்க்கு வர வேண்டும்? கண்ணகி பற்றி இரண்டு கதைகள் பூம்புகாரில் உலாவுகிறது. பாண்டிய மன்னனின் குழந்தை என்பது ஒன்று. மற்றோன்று பாண்டிய மன்னனால் பூட்டி வைக்கப்பட்டு இருக்கும் காளி கோவிலில் விளக்கேறி வைத்ததாற்க்காக அந்த ஊரில் பிழைக்க வந்த ஒரு செட்டியை கொன்றுவிட அவன் மனைவி அந்த அதிர்ச்சியில் இறந்துவிட அவர்கள் அடுத்த பிறவியில் கண்ணகியும் கோவலனுமாக பிறக்கிறார்கள். கண்ணகியை தெய்வமாக வழிப்படுபவரிகள் தலித்கள் தான். அது கூட ஆதிக்க சத்திக்கு பிடிக்காமல் எப்படியேனும் அவர்கள் வழிபாட்டுக்கு இடையூரு செய்கிறார்கள்.

புகாரை விட்டு கிளம்பிய கண்ணகியும் கோவலனும் ஏன் மதுரைக்கு செல்ல வேண்டும் அவர்கள் திரும்ப சேர நாட்டுக்கே சென்று இருக்கலாமே அல்லது சோழ நாடு பக்கத்தில் தான் இருந்து இருக்க வேண்டும் அங்கே சென்று இருக்கலாமே. இவர்களுடன் ஏன் கவுந்தியடிகள் செல்கிறார்!!. மதுரையை எரித்தது உண்மை என்றால் முழு மதுரையும் அல்லவா எரிந்து இருந்து இருக்க வேண்டும். அப்படி எந்த ஒரு சான்றும் இல்லையே!! அதன் பிறகு கண்ணகி ஏன் சேர நாடுக்கு செல்கிறாள். அவள் வாழ்ந்த காலத்தில் உடன் கட்டை ஏறுவது என்பது இருந்து இருக்கிறது அப்படி இருந்தும் ஏன் அவள் அப்படி செய்யவில்லை? இளங்கோவடிகள் எழுதியது எல்லாம் புனைவு தானா!!

நாவலை படிக்க படிக்க இப்படியான பல கேள்விகள் நம்மை சுற்றி எழுகிறது. கண்ணகி பற்றி, சிலப்பதிகாரம் பற்றி பல ஆராய்ச்சி கட்டுரைகள் இருக்கிறது அதில் எது உண்மையாக இருக்கும் ?? நீண்ட காவேரி, ஏழுநிலை மாடம், மதுரைக்கு செல்லும் மூன்று வழி சாலை, சமணர்கள் வாழ்ந்த குகைகள், ரத்தின கற்களுக்காக நடந்த சண்டைகள் ..இன்னும் பல.தற்கால அரசியலையும் விட்டுவைக்காமல் சிலப்பதிகாரத்தை தனது அரசியல் வளர்ச்சிக்காக திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக கூறுகிறார் ஆசிரியர். கம்யூனிஸ்ட் தோழர்கள் சிலபதிகாரத்தை எப்படி பார்க்கிறார்கள். வைரம், ரத்தின கற்கள் எங்கே எப்படி பட்டை தீட்டப்பட்டது மேற்குலகம் ஆப்பிரிக்க வைரத்தின் மீது செலுத்தப்படும் ஆதிக்கம், அதற்காக அவர்கள் நாட்டை தங்கள் கைக்குள் வைத்து இருக்கும் அரசியல். உள்ளுர் மக்களிடம் ஏற்படுத்தும் கலகம். ரத்த வைரம் என்றால் என்ன, வைரத்துக்கு அளிக்கப்படும் சான்றிதல்கள். தமிழ்நாட்டில் கிடைக்கும் ரத்தின கற்களுக்கு உலக சந்தையில் இருக்கும் மவுசு. காங்கேயத்தில் கிடைக்கும் அறிய கற்களின் லோக்கல் வியாபார சந்தை. ரத்தின கற்களை கொண்டு செய்யப்படும் மோசடிகள். உலகில் அதிகமாக வைரங்கள் வடநாட்டில் எங்கே பட்டை தீட்டப்படுகிறது. வைரம் பட்டை தீட்டப்படும் தொழிலை குடிசை தொழிலாக எண்ணும் கோடீஸ்வர நிறுவனங்கள். அதே போன்று உலகலவில் வைரத்தில் முதலீடு செய்து இருக்கும் இந்திய கம்பெனிகள். வைர கற்களை பட்டை தீட்டும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடல்நல குறைபாடு. இப்படி வைரங்கள் மூலம் யார் யாரெல்லாம் லாபம் அடைகிறார்கள், தொழிலாளர்கள் எப்படி ஏமாற்றம் அடைகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக யாரும் பேசாத்தால், பட்டை தீட்டப்படும் தொழில் ஏற்படும் அபாயத்தை பற்றி எந்த ஒரு எச்சரிகையும் செய்யாததால் அடுத்து அடுத்து தனது தலைமுறையை இதே வேலைக்கு செல்லும் அவலம் . தமிழர்களின் கற்புகரசியான கண்ணகி எப்படி கேரளாவில் தெய்வமானாள். தமிழ்நாட்டில் கண்ணகிக்கு கோவில் இல்லாமல் ஏன் கேரளாவில் கோவில் இருக்கிறது? வெளிச்சப்பாடுகள் என்றால் என்ன!! சங்ககால இலக்கியங்களும், சமகால அரசியலையும் ஒரே இடத்தில் பேசுகிறது நாவல்.


இந்த நாவல் முடிந்ததும் எழும் முக்கியமான கேள்வி. இந்த நாவலை எழுத ஆசிரியர் எவ்வளவு ஆய்வு செய்து இருப்பார் என்பது தான். ஏகபட்ட தகவல்கள் உள்ளே இருக்கிறது. நாம் இதுவரை கொஞ்சம் கூட அறிந்திடாத பல தகவல்கள். இங்கே நான் எழுதி இருப்பது 10 சதவீதம் கூட இல்லை பலதரபட்ட தகவல்கள் அடங்கிய நாவல். வரலாறு சார்ந்த கொஞ்சம் புனைவுடன் கூடிய அருமையான நாவல் படிக்க தவறாதீர்

மிளிர்கல் - இரா.முருகவேள்
பொன்னுலகம் பதிப்பகம்
ரூபாய் - 200