Tuesday, June 21, 2011

குண சித்தர்கள் - க.சீ.சிவகுமார்

மொத்தம் 32 அத்தியாயங்கள் அதில் 32 விதமான மனிதர்கள், ஒருவர் மற்றொருவருக்கு சளைத்தவர்கள் அல்ல என்கிற குணாதசியங்கள் உள்ளவர்கள். படிக்க படிக்க சிரிப்பை அடக்கமுடியாமல் சங்கிலித்தொடர் போல செல்லும் நகைச்சுவை. நான் ஸ்டாப் சிரிப்பு மற்றும் சிந்தனைக்கு குண சித்தர்கள் கியாரண்டி.ஒரு புத்தகத்தை திறந்தால் உங்கள் கண்களுக்கு முதலில் தென்படுவது சமர்ப்பணம் அல்லது அவருக்காக இவருக்காக தானே. இங்கே முதலில் தென்படுவது களிகூர்தல் இது என்னடா ஒபெனிங் வித்தியாசமா இருக்கேன்னு உள்ளே சென்றால் அத்தியாயத்தின் தலைப்பு எல்லாம் அதை விட வித்தியாசம். 

தானாகி நிற்பவன் 
ஏனைய அறிவிப்பாளன்
செல்வக் கடுங்கோ கோழியாதன்
வேக தத்தன்
பொங்கி வழிபவன்
தீவ திலகை
அவரைச்சாமி

இப்படிதான் எல்லா தலைப்பும் வித்தியாசமா இருக்கும் அதே போல உள்ளே உள்ள கதைகளும். 

குங்குமம் வார இதழில் தொடராக வெளிவந்ததை புத்தகவடிவில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. குங்குமம் வார இதழ் வாங்குவதை நிறுத்தி ரொம்ப வருடங்கள் ஆனதால் இந்த தொடர்பற்றி தெரியாமல் போய்விட்டது. அதுவும் ஒருவகையில் நல்லது தான், ஒரு அத்தியாயத்துக்கும் அடுத்ததுக்கும் ஒரு வாரம் காத்துகொண்டு இருக்கவேண்டி வந்திருக்கும்.இப்போது முழுவதுமாக ஒரே புத்தக வடிவில் கிடைத்தது மகிழ்ச்சி. 

கதை களம் முழுக்கு கொங்குநாட்டில் நடக்கிறது, மூலனூர், தாராபுரம், சின்ன தாராபுரம், வெள்ளகோவில்,கோயமுத்தூர், கரூர் மற்றும் அதன் சுற்றுபுறத்தில் உள்ள கிராமங்களில் தான் இந்த மனிதர்கள் உலாவுகிறார்கள் அல்லது வாழ்ந்துகொண்டு இருகிறார்கள். கிராமத்து மக்களுக்கே உள்ள நையாண்டி நகைச்சுவை வாயிலாக சொல்லவேண்டியதை அவ்வளவு நகைச்சுவையுடன்   சொல்லிவிடுகிறார்.  ஒருவர் குணாதசியம் மற்றவரிடம் காண முடியாது புத்தகத்தில்.

சில சுவாரசியமான மனிதர்கள் இங்கே

எப்பொழுது கேள்வி கேட்டு கொண்டே இருக்கும் பழனிச்சாமி

கோழி குஞ்சை வைத்து கல்லாக்கட்டும் மேகநாதன் 

சாதி என்னும் மிருகத்தால் கூனி குறுகிபோகும் தேவேந்திரன் 

எழுபத்தி இரண்டு வயதிலும் ஐம்பதை பார்த்து சைட் அடிக்கும் வயோதிக வாலிபர் முத்துக்குட்டி 

இப்படி ஒவ்வொருத்தராக வந்து உதட்டோரம் புன்னகையும் சிலர் ப்ச் என்று பச்சாதாபத்தையும் கொண்டு செல்கிறார்கள். சிலர் நமக்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள், இந்த ஆளை பார்க்கணுமே என்று சிலர் இருகிறார்கள் அதில் நான் பார்க்க நினைக்கும் மனிதர் வயோதிக வாலிபர் முத்துக்குட்டி. 

சிரிபலைக்கு பஞ்சமே இல்லை உதாரணத்துக்கு பழனிச்சாமி கதையை படியுங்கள், பழனிசாமி இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது அவன் வகுப்பாசிரியரிடம் கேட்கும் கேள்விகளை 

சூரியன் ஏனுங்க டீச்சர் தினமும் கிழக்கயே உதிக்குது?

அத பத்தி நானும் யோசிச்சிட்டுத்தான் இருக்கிறேன்

யோசிக்கிறதுன்னா ??

சிந்திக்கிறேன் 

சிந்திக்கிறதுன்னா ??

நினைக்கிறது..

நினைக்கிறதுன்னா ?? 

ஏன், எப்படி,எதுக்குன்னு ஆலோசிக்கிறது 

ஆலோசிக்கிறதுன்னா ?? 

கொஞ்சம் உட்காரு பழனிச்சாமி. எனக்கு தல வலிக்குது


பகல் பனிரெண்டரை மணிக்கு பாலாமணியை தேனீர் அருந்த வைத்த முதலாவது ஜீவன் என்கிற பெருமையை இதன் மூலம் பழனிச்சாமி பெற்றான்.

முதல் அத்தியாத்தில் கேள்வியின் நாயகன் என்கிற கதையில் வருகிறது. இது ஒரு சாம்பிள் தான் உள்ளே செல்ல செல்ல இன்னும் நிறைய காமெடி இருக்கும். 


மேக வண்ணன் என்கிற அத்தியாத்தில் கோயம்பத்தூரில் இருந்து புறப்படும் பேருந்தில் நடத்துனர், ஓட்டுனர் மற்றும் பயணிகளுடன் நடக்கும் உரையாடல் இதுவரை நான் படித்திறாத ஒன்று.  அதே போல எதற்கு எடுத்தாலும் குத்தம் குறை சொல்லிக்கொண்டு இருக்கும் நாச்சிமுத்து. இந்த நாச்சிமுத்து ஆளை போல எனது நெருங்கிய உறவினர் இருக்கிறார். நன்றாக பேசிக்கொண்டே சந்தடி சாக்கில் விஷத்தை உமிழ்வார். 

சிவகுமார் அவர்களின் புத்தக தொகுப்பில் முதலில் இதை தான் படித்திருக்கிறேன்.மனிதர்கள் எல்லாம் ரொம்ப நெருக்கமாக நம்முடன் உலாவுகிறார்கள்.ஆனந்த விகடனில் வெளிவந்த "ஆதிமங்கலத்து விசேஷங்கள்" தொடரை சில பகுதிகள் மட்டுமே படித்திருக்கேன் இனி முழுமையான தொகுப்பை வங்கி படிக்கவேண்டும்.  

சந்தேகமே இல்லாமல் வாங்கி படியுங்கள் சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தை உணருவீர்கள் அதுக்கு நான் கியாரண்டி.


குண சித்தர்கள் - க.சீ.சிவகுமார்
விலை: 125 ருபாய் 
கிழக்கு பதிப்பகம் 
சென்னை ஆசிரியரின் வலைபூ முகவரி 


-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)


1 comment:

  1. அண்ணே.. நாங்க தான் அப்பவே சொன்னோம்ல. :-)

    பதிவிற்கு நன்றி.

    ReplyDelete