Friday, March 25, 2011

கள்ளி - வா.மு.கோமு

எட்டு வருடங்கள் கோவையில் இருந்தேன், எனது கல்லூரி படிப்பு மற்றும் வேலையை முழுவதுமாக முழுங்கிய நாட்கள் அது. அக்கா வீட்டில் இருந்து கல்லூரி படிப்பை முடித்தேன். அக்கா இருந்ததோ வளர்ந்து வரும் கிராமம். கொங்கு பாஷையை முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம் அவ்வளவு அருமையாக கொங்கு தமிழில் பேசுவார்கள் அந்த கிராமத்தில். சில நாட்கள்  கோவையில் இருந்தாலே போதும் மரியாதை தானாக வந்து ஒட்டிக்கொள்ளும். கொங்கு தமிழை பேசும் விதமே வித்தியாசமாக இருக்கும். அதும் கிராமத்தில் பேசுபவர்கள் கொஞ்சம் வேகமாக பேசிவிட்டால் போதும் நாம் மண்டையை சொரிய வேண்டியதுதான். 

சென்னைக்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. வந்த சில  நாட்களில் கொங்கு தமிழில்  நண்பர்களிடம் பேசும் போதெல்லாம்  என்னை கிண்டல் செய்வார்கள், பிறகு கொஞ்ச நாட்களில் சென்னை பாஷைக்கு மாறியதால் இப்போது  கொங்கு பாஷை சுத்தமாக மறந்துவிட்டேன். எப்பொழுதாவது  ஊரில்  இருந்து சுரேஷ் போன் பண்ணும் போது மட்டும் "என்றா எப்படி இருக்க" என்று கேட்பதோடு சரி. இப்படி மறந்து போன கொங்கு தமிழ் வார்த்தைகள் பலவற்றை கள்ளி ஆழமாக நினைவுப்படுத்தியது.  கள்ளி என்கிற இந்த நாவலின் முலமாக கொங்கு தமிழை கொண்டு கொஞ்சமும் குறையில்லாமல் தனது எழுத்தால் நம்மை கட்டி போட்டுவிட்டார் வா.மு.கோமு.


கள்ளி நாவலை ஏதோ ஒரு வேகத்தில் வாங்கினேன். தனது எழுத்தில் உள்ள சுவாரஸ்யத்தை மற்றவர்கள் யாரும் அசைத்து பார்க்க முடியாத அளவு மனுஷன் கொங்கு தமிழில் கதையை அனாயசமாக கையாண்டு இருக்கிறார். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் நீட்டி முழங்குவது என்பது கொங்கு மக்களிடம்  உள்ள ஒரு ரசனை. அதை கையாள்வது என்பது அவ்வளவு எளிது அல்ல. ஒரு சின்ன சம்பவத்தை கூட கற்பனை குதுரையில் ஏற்றி கொஞ்ச நேரம் அதை அங்கு இங்கு என்று சுற்றவிட்டு பொறவுதான் விஷயத்துக்கே  வருவார்கள். கள்ளி நாவலிலும் இப்படி தான் எங்கடா நாலு நாளா ஆளை காணோம்ன்னு ஒருத்தன் கேட்டா அந்த நாலு நாளில் என்ன நடந்தது என்று எட்டு பக்கத்துக்கு அடுத்தவன் சொல்கிறான். மேட்டரே அந்த நாலு நாளுல என்ன நடந்தது என்று சொல்லப்படும் விஷயத்தில் உள்ளது. அதை எல்லாம் இங்கே சொல்லமுடியாத அளவுக்கு பாலியல் விஷயங்கள். 

நாவலின் அடித்தடமே காமம் தான். எங்கேயும் காமம் எதிலும் காமம், கவுண்டர் வீட்டிலும் காமம், முள்ளுகாடிலும் காமம் அட கோவிலில் கூட காமம். காடு, கரடு, பாறை என்று எல்லா இடங்களிலும் காமம் தலைவிரித்து ஆடுகிறது.  நாவல் படிக்கும் போது சாருவின் நாவலை போலவே இருக்கிறது என்று சில இடங்களை நினைக்க தோன்றுகிறது.  என்ன இருந்தாலும் கள்ளிக்கு அப்பாரு அல்லவா  சாரு அதனால் உண்டான நினைப்பு கூட இருக்கலாம்.  இலக்கியங்களில் பாலியல் சம்பவங்கள் உருகாய் அளவு வந்ததை தான் இதுவரை படித்து இருக்கிறேன். முழுவதும் பாலியல் சார்ந்த நாவலை படிக்கும் போது ஒரு வித அதிர்ச்சி உண்டாவதை கண்டிப்பாக உணரமுடிகிறது.


மல்லி, சுரேந்திரன், பழனிசாமி, சரக்கு வாத்தியார், சுந்தரி, வண்ணான் ராமசாமி, சண்முகம், கவுண்டர், கவுணுச்சி, ரெகார்ட் டான்ஸ் ஆடும் பெண்கள்  என்று ஒரு கிராமத்தில் இருக்கும் மனிதர்களில் அன்றாட வாழ்கையில் காமத்தை அநியாயத்திற்கு திணித்து நாவல் படிக்கிறவர்களை திக்கு முக்காட வைத்து விடுகிறார். நாவலில் முக்கிய கதாபாத்திரம் என்று மூவரை சொல்லலாம், பழனிசாமி, சுரேந்திரன் மற்றும் சரக்கு மாஸ்டர்.

சரக்கு மாஸ்டரின் மகன் சுரேந்தரன், சுரேந்திரனின் நண்பன் பழனிசாமி. சரக்கு மாஸ்டரின் முழுநேர இன்பம் என்பது சரக்கை உள்ளே செலுத்தி கொண்டு இருப்பது. சின்ன பசங்களை செட்டு சேர்த்து கொண்டு ஊரின் நடுவில் வேட்டியை அவிழ்த்து விட்டு யாருக்கும் அடங்காத காளையாக எல்லோரிடமும் ரவுசு விட்டு கொண்டு இருப்பார். பழனிசாமிக்கும், சுரேந்திரனுக்கும் பெண்களை பிராக்கெட் போட்டு மடக்குவதே வேலை. கிராமம் என்றால் ஊர் கட்டுப்பாடு என்று ஒன்று இருக்கிறது என்று தமிழ் சினிமாவில் இருப்பதை போல எண்ண வேண்டாம். நாவலில் வரும் சுந்தரி விஜி, மல்லிகா  மற்றும் சில பெண்களின் சேட்டைகளை பார்த்தால் இக்கரைக்கு அக்கறை பச்சை என்பது உண்மை போல. சுரேந்திரன் ஜ.போ.ச சங்கத்தின் பொருளாளர் வேறு. ஜ.போ.ச என்றால் என்னவென்று புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் மக்கா .. ஹா ஹா ஹா ...

காமத்தை மட்டும் அல்லாமல் அங்காங்கே தலித்து உரிமையை பற்றி எழுதி இருக்கிறார். என்ன தான் கவுண்டர் வீட்டில் வேலை செய்தாலும் சக்கிலியன் என்று சொல்லும் போது வரும் கோவத்தை அவன் காட்டவே செய்கிறான். மாரன் மகனுக்காக ஒரு கவுண்டரிடம் அடுத்து என்ன செய்யலாம் என்கிறான் அவர் ஏதும் வழி இல்லை என்கிறார் வேறு வழியே இல்லை என்று தெரிந்து பின்பு அந்த கவுண்டனை எதிர்த்து நிற்கவும் செய்கிறான். முடிந்த வரை அமைதியாக போவோம் இல்லை என்றால் எதிர்த்து நிற்ப்போம் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். இது எதனால்?? காலம் காலமாக கவுண்டரின் தோட்டத்தில் வேலை செய்து கிடைக்கும் சொற்ப பணத்துக்கு பதில் தொழிற்சாலைகளில் எவனுக்கும் அடிமையில்லாமல் அதே உழைப்பிற்கு அதிகமாக ஊதியம் கிடைக்கும் போது பிறகு ஏன் இன்னும் அடிமையாக இருக்கவேண்டும் என்கிற எண்ணம் தான்.  இந்த மற்றம் தான் வாழ்க்கைக்கு உதவும்.


கள்ளி நாவலை 18+  அல்ல 25+ படிப்பதே உத்தமம். முழுக்க முழுக்க காமத்தை மையம் கொண்டு எழுதி இருப்பதால் தான் சொல்கிறேன். பல இடங்களில் இருக்கும் நகைச்சுவை வசனங்களை படித்த பிறகு வரும் சிரிப்பை அடக்குவதற்கே ரொம்ப நேரம் ஆகிறது.  புத்தகத்தில் எங்கேயும் அறிவுரையில்லை, சிந்தனை சொற்கள் இல்லை என்பது பெரிய ஆறுதலான விஷயம் .  சில அத்தியாங்களை கடந்து வருகையில் இந்த ஆளுக்கு எவ்வளவு துணிச்சல் இப்படி எழுதி இருக்கானே என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. அந்த வகையில் வா.மு.கோமுவின் தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


கள்ளி - கொண்டாட்டம் தான் குதூகலம் தான்




--
With Love
Romeo ;)





5 comments:

  1. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  2. ம்ம்ம்

    இருக்கு

    படிக்கிறேன்

    ReplyDelete
  3. :-?
    thou da innum online a vidalaya
    :-?

    ReplyDelete
  4. நல்ல அருமையான விமர்சனம் நண்பா,இது வாய்ப்பு கிடைக்கையில் படிக்கப்பார்க்கிறேன்.

    ReplyDelete