Tuesday, June 7, 2011

கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்


உணவு தேடி வந்த வௌவால்கள் இருப்பிடம் திரும்ப, வேட்டையில் இருந்து பூனைகள் வீடு திரும்ப, இரவு விலங்குகள் பொந்துக்கு திரும்ப, சேவல் சிறகுகளை தட்டி விடியலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த இப்படி ஒரு கரிசல் கிராமம் எப்படி ஒரு நாளை துவங்குகிறது என்று வரிக்கு வரி என்னை போன்ற நகரத்து ஆசாமிகளுக்கு பெரிய ஆச்சரியத்தை உண்டாகி நாவல் உள்ளே அழைத்து செல்கிறார் கி.ரா.

சுமார் இருநூறு முண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு கிராமம் எப்படி இருந்தது?? உணவுக்கு என்ன செய்து கொண்டு இருந்தார்கள். மக்களின் பழக்க வழக்கங்கள் என்ன என்ன ? உடுத்திய உடை என்ன? எப்படி அவர்கள் அங்கே வந்தார்கள்? இப்படி எங்கோ ஒரு கரிசல் பூமியில் வாழ்ந்த மக்களின் கதை தான் கோபல்ல கிராமம்.

கி.ராவின் படைப்புகளில் நான் முதல் முதலில் படித்த நாவல். நண்பர்கள் ஏற்கனவே சொல்லி இருந்தார்கள், புத்தகத்தை நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இருக்காது. முற்றிலும் வேறு ஒரு தளம், வேறு ஒரு மொழி, வேறு ஒரு கதை என்று அத்தனையும் உண்மை. நாவலின் தலைப்பை வைத்து இந்த புத்தகத்தை எடை போட முடியவில்லை.  கனமான பாத்திரம் என்று ஏதும் இந்த நாவலில் இல்லை ஒரு கிராமத்தில் இருக்கும் மக்களை பற்றிய கதை தான் இது. அவ்வளவே ஆனாலும் மனசு முழுக்க அந்த மக்கள் தான் இருகிறார்கள்.  





நூற்றாண்டை கடந்த ஒரு கிழவி அந்த கிராமத்து மக்களின் முன்னோர்கள் எப்படி இங்கே வந்தார்கள் என்று விவரிக்கிறார். பேரிளம் குமாரியை அடைய நினைக்கும் துலுக்க ராஜாவிடம் இருந்து அவளும் அவள் சார்ந்த பெரிய குடும்பமும் உயிரை கையில் பிடித்து கொண்டு தெலுங்கு தேசத்தில் இருந்து தப்பிகிறார்கள். எத்தனை நாட்கள் இவ்வாறு கடந்தது என்று தெரியாமல் கால்கள் வலிக்க, சில உயிர்கள் மறிக்க தங்களுக்கு என்று ஒரு புதிய பூமியை அவர்களே உருவாகிறாகள்.வந்தேறிகள் என்பதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக இருகிறார்கள் இந்த கிராமத்து மக்கள். வந்தவர்கள் ஒரு காட்டை அழித்து தங்களுகென்று ஒரு கிராமத்தை உருவாகிறார்கள். அதை எப்படி உருவாகினார்கள், அந்த மக்களின் மனம் எப்படி இருந்தது அவர்களின் குணாதசியங்கள் எப்படி என்று நாவல் உள்ளே செல்ல செல்ல பிரமிப்பு கூடி கொண்டே செல்கிறது. 


ஒரு கிராமத்தின் கதை என்றாலும் கோட்டையார் குடும்பம் தான் பிரதானமாக இடம்பெற்று இருக்கிறது. அவர்களை தவிர்த்து அந்த கிராமத்தில் இருக்கும் மக்களை அவ்வளவாக விவரிக்கவில்லை என்றாலும் அக்கையா என்கிற கதாபாத்திரம் தனியாக தெரிகிறது . அவரும் கோட்டையார் வீட்டின் சொந்தம் என்றாலும் நாவலில் அவருக்கு என்று தனியாக ஒரு இடம் இருப்பதை மறுக்க முடியாது. முழுக்க முழுக்க நையாண்டி நகைச்சுவை பேச்சு என்று கிராமத்து மக்களை கிண்டல் அடித்து கொண்டே எல்லோரின் அன்பையும் பெறுகிறார், நம்மையும் சேர்த்தே. கிராமத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருகிறார்கள், நாயக்கர் என்கிற சமுதாயம் மட்டுமே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்ததால் அவர்களிடம் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் நாட்கள் நகருகிறது.  பெரியதாக எந்த ஒரு பிரச்சனை பற்றி அலசாமல் நாவல் ரொம்ப சுவாரஸ்யமாக எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் அமைதியாக செல்கிறது. நாவலின் பிற்பகுதியில் பஞ்சாயத்து கூடும் இடத்தில  கிராமத்தில் இருக்கும் சில முக்கியஸ்தர்களை அறிமுகபடுத்தும் இடம் அருமையா இருக்கும். கிட்டத்தட்ட முன்று நான்கு அத்தியாங்களுக்கு  மேல் அவர்களை அறிமுகப்படுத்தும் இடம் இதுவரை நான் படிக்காத ஒன்று. ஒவ்வொருவருக்கும் ஒரு பட்ட பெயர் அது எதனால் வந்தது என்று விவரித்து கொண்டு சென்ற இடம் நாவலின் உச்சம்.



நாவலில் குறைகள் என்று சிலது உள்ளது, அதும் என்னளவில் மட்டுமே. ஒன்று இவர்கள் தப்பி வரும் போது ஒரு மரம் அனைவரையும் ஆற்றுக்கு அக்கரையை கடக்க உதவுவது. கோவிலில் சாமி வந்து உதவுவது, கழுவில் எற்றபட்டவன் இரண்டொரு நாள் உயிருடன் இருப்பது என்று சிலவற்றை படிக்கும் போது ஏதோ விட்டலாச்சாரிய கதையில் வரும் பகுதி போல இருந்தது. அதை தவிர்த்து நாவலில் உள்ளே உபயோக படுத்தி இருக்கும் வார்த்தைகள். பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் படித்தேன். சிலது மட்டுமே என்னால் இது தான் என்று யூகிக்க முடிந்தது.  பல வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் நாவலின் சுவாரஸ்யத்தில் அதை கண்டுகொள்ளாமலே கடந்து போனேன். மீள் வாசிப்பு செய்யும் போது தான் அதன் அர்த்தங்களை தேடி கண்டுபிடிக்கவேண்டும். 


கி.ராவின் உழைப்பு பார்த்தால் ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது, எத்தனையோ நூற்றாண்டுக்கு முன்னாள் இருந்த பழக்க வழக்கங்கள், அப்போது புழக்கத்தில் இருந்த சொற்கள், மக்கள் உண்ட உணவுகள், உடுத்திய உடைகள், விவசாயத்துக்கு உதவிய கருவிகள் என்று படிக்க படிக்க ரொம்ப வியக்க வைக்கிறார்.  கரிசல் பூமியை பார்த்திடாத என்னை போன்ற ஆட்களுக்கு இது இது இப்படி இருக்கும் என்று விரிவாக நாவலில் விவரித்து இருக்கிறார். கி.ராவின் எழுத்து நடையை என்னவென்று சொல்ல கரிசல் இலக்கியம் அட்டகாசம். இந்நாவல் கால ஓட்டத்தின் முன் பின் என்று அசைந்து அசைத்து செல்கிறது. ஒரு கதைக்குள் இன்னொரு கதை வந்து உட்கார்ந்து கொள்கிறது. நிழல்காலத்தில் நடக்கும் ஒரு கதையின் ஊடே இன்னொரு கதை உள்ளே வரும் பிறகு அது காணாமல் போய்விடும் பிறகு வேறு ஒரு கதை ... இப்படி சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லாமல் கதை முடிகிறது.




--
With Love
அருண் மொழித்தேவன் (aka) Romeo ;)







Wednesday, June 1, 2011

ஒரு வேண்டுதலின் பயணத்தில் - 2

இரவு அடித்து போட்டது போல தூங்கினேன், ஜூனியர் எனக்கு முன்பே தூங்கிவிட்டான். அதிகாலை 4 மணி அளவில் மகா எழுப்பிவிட்டாள், பல்லு மட்டும் தேச்சிட்டு வாங்க ஆத்துல(?) போயி குளிச்சிகளாம் என்று சொல்லிவிட்டு நடையை கட்டினாள். எனக்கு அந்த அதிகாலையில் ஒரு சந்தேகம்  வந்தது, நேத்து தான் அங்க போனோம் ஆறு என்கிற பெயருக்கு ஏற்றது போல எதுவுமே அங்க இல்லையே எதில் போயி குளிப்பது ??? ஒருவேளை அந்த அழுக்கு தண்ணிலயா!!! நினைச்சாலே உடம்பு கிர் என்று ஷாக் அடித்தது. வேறு வழியில்லை தோளில் கரும்பு கட்டை தூக்கி கொண்டு நடந்தேன். எனக்கு எதிரே  நிறைய மக்கள் கையில் தீ சட்டியை ஏந்திக்கொண்டு வந்தார்கள். சிலர் கரும்பு தொட்டில், சிலர் அழகு குத்தி கொண்டு இப்படி நேர்த்தி கடனை செலுத்துவதற்காக அதிகாலைலே ஆவலாய் பறந்தார்கள்.  

ஆத்துக்கு அருகில் சென்ற போது தான் தெரிந்தது எப்படி குளிப்பது என்று. ஒரு நீளமான பைப்பில் குடை போல சில குழாய்களை வெளியே இழுத்து அதில்   ஷவர் போல செய்துள்ளார்கள். தண்ணீர் நிற்காமல் கொட்டி கொண்டு இருந்தது. இதை போல இரண்டு சாதனங்கள்  இருந்தது. அதில் சென்று குளித்துவிட்டு கரும்பு தொட்டில் தூக்கி கொண்டு சென்றோம். ஜூனியர் கையில் ஒரு சாக்லேட் குடுத்து தொட்டில் சீலையில் இரண்டு பக்கமும் கால்களை வெளியே விட்டு கொண்டு ஜாலியாக வேடிக்கை பார்த்து கொண்டு வந்தான். இவன் கண்டிப்பா கத்தி மானத்தை வாங்குவான் என்று தான் நினைத்தேன். நல்லவேளை தலைவர் ரொம்ப அமைதியாக வந்து வேண்டுதலை நிறைவேற்ற உதவினார். கரும்பு தொட்டில் கோவிலை வந்தடைந்த போது ஒரு அன்பர் வந்து ஒரு கை குடுத்தார். ஜூனியரை எடுக்க சொல்லிட்டு ஐம்பத்தி ஒருருபாய் தச்சனை என்று வாங்கி கொண்டார். கரும்பை அங்கேயே போட சொல்லி விட்டு நீங்க நடையை காட்டுங்கள் என்றார். கீழே இருந்த கரும்பை ஒருவர் அள்ளிட்டு சென்று ஒரு இடத்தில வைத்தார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட கரும்புகள் குவித்து வைத்து இருதார்கள். நல்ல சைடு பிசினஸ் .. 

  (ஒரு வாண்டு தொட்டிலில்)


ஒரு பக்தர் ஆத்தில் இருந்தே அங்கபிரத்சணம் செய்து கொண்டு வந்தார் ரோடு மொத்தமும் அவ்வளவு சேரும் சகதியுமா இருந்து மனுஷன் கண்டிப்பா அடுத்த முறை இந்த மாதிரி வேண்டிக்கொள்ள மாட்டார் கோவில் போய் சேர்வதற்குள்  அவ்வளவு வேதனையை கண்டிப்பா சம்பாதித்து இருப்பார். 

நிறைய பேர் சாமி ஆடிக்கொண்டு இருந்தார்கள். மாரியம்மன் ஒரு சாமி தானே இங்க இருக்கு எப்படி இத்தனை பேர்  மேல ஒரே சாமி ஏறும்?? மகா கிட்ட கேட்டேன் அவளுக்கும் பதில் தெரியவில்லை ..



ஒரு பக்தர் வலது காலை சற்றே விந்தி விந்தி நடந்தார் அவரும் தொட்டில் சீலை எடுத்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். அவர் சென்ற போது ரோடு ஓரத்தில் இருந்த எல்லோரும் அவரையே பார்த்து கொண்டு இருதார்கள்.

(அந்த பக்தர்)




பலர் அழகு குத்தி கொண்டும் கையில் தீசட்டி எந்திகொண்டும் வந்தார்கள். வயது வித்தியாசம் எல்லாம் இல்லை.  ரோட்டு ஓரத்தில் சிலர் கையில் எண்ணெய் வைத்து கொண்டு தீசட்டி கொண்டு வருபவர்களின் சட்டியில் எண்ணையை உற்றி கொண்டு இருந்தார்கள். இது ஒருவகை நேர்த்தி கடன்!!!.. இதனால் சில சட்டியில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. 
 
அழகு குத்தி கொண்டு வந்தவர்களில் நிறைய பேரின் வேல் பத்து அடிக்கு குறையாமல் இருந்தது. பார்க்கும் போதே யாரோ எனக்கு அழகு குத்துவது போல இருந்தது.  சிலர் சாமி வந்தது போல ஆடிக்கொண்டே இருந்தார்கள்.

  (இது கண்டிப்பாக பதினைந்து அடிக்கு மேல் இருக்கும்)


இதற்கு எல்லாம் தான் தான் அப்பன் என்று முவர் கூட்டணி வந்தது. ஊரே அவர்களைத்தான் பார்த்து கொண்டு இருந்தது. அதை எப்படி விலகுவது என்று தெரியவில்லை புகைப்படத்தை பாருங்கள் 


 (டெர்ரர் கூட்டணி)


எல்லா வீதிகளிலும் அன்னதானம் நடைபெற்று கொண்டு இருந்தது, எங்கிருந்தோ ஒரு சின்ன யானை வண்டி வந்து நிற்கும் உள்ளே இருந்து ஏதாவது வெரைட்டி சாதத்தை போட்டு கொண்டே இருப்பார்கள். மக்களும் வாங்கி கொண்டேடேடே இருப்பார்கள். சிலர் மண்டபங்களில் அன்னதானம் செய்து கொண்டு இருந்தார்கள். எனது மாமானார் வீட்டு  தெரு முக்கில் குவிந்து இருந்த குப்பைகளை அள்ள அடுத்த நாள் இரண்டு லாரி வந்தது.

 
(என்ன ஒரு மேக் அப்)




லோக்கல் டிவியில் முன்று நாட்களும் இந்த திருவிழாவை தான் ரீலை செய்து கொண்டு இருந்தார்கள். மிக பெரிய காமெடி என்னவென்றால் ஒரே நேரலையை நான்கு லோக்கல் சேனல்கள் பகிர்ந்து கொண்டு ஒரே நேரத்தில் ஒளிப்பரப்பு செய்தது தான். ஒரு லோக்கல் சேனலில் திருவிழாவிற்கு வந்தவர்களிடம் லைவ்வாக பேட்டி கண்டு அவர்களுக்கு பிடித்த பாடலை ஒளிபரப்பு செய்தார்கள்.  இங்கேயுமா ????


 (நேரடிஒளிபரப்பில்)

 


கேமராவில் கிளிக்கியது  ;)







--
With Love
அருண் மொழித்தேவன் @ Romeo ;)

Thursday, May 26, 2011

ஒரு வேண்டுதலின் பயணத்தில் - 1

கல்யாணம் முடிந்து முன்று ஆண்டுகள் முடிய போகிறது என்றாலும் இப்பொழுது தான் முதல் தடவையாக மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள முடிந்தது. மகா ஜூனியருக்காக வேண்டிகொண்ட  ஒரு வேண்டுதலை நிறைவேற்ற சென்றோம். ஜூனியர் பிறப்பதற்கு முன்பே கரும்பு தொட்டில் எடுப்பதாக  மகா வேண்டி கொண்டாள், இந்த விஷயம் போன மாதம் தான் எனக்கு தெரியவந்தது.  சரி கடமையை ஆற்றுவோம் என்று போன திங்கட்கிழமை காலை குடும்பத்துடன் கரூர் வந்தடைந்தேன்.  இரவு ரயில் பயணத்தில் மூவருக்குமே சரியான தூக்கம் இல்லை.  எங்கள் அருகில் ரயில் ஏதாவது கடந்து செல்லும் போது ஏற்படும் பேரிரைச்சலால் ஜூனியர் அடிகடி தூக்கம் கலைந்து புரண்டு புரண்டு படுத்து கொண்டு இருந்தான். 

குழந்தைகளை ரயில் அல்லது பேருந்தில் வெகுதூரம் அழைத்து செல்வதில் சில அசொகரியங்கள் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர்களை ஒரு வித பயத்துடனே கையாளவேண்டி இருக்கிறது. போகிற இடத்தில ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயம். மகாக்கு என்மேல் கொஞ்சம் கோவம், அவளை நான் எங்கும் அழைத்து செல்வதில்லை என்று, உண்மையில் எனக்கு ஜூனியர் நினைத்து தான் பயம்.  ஒரு சமயம் மேல்மலையனூரில்  ஒரு கல்யாணத்துக்கு சென்றோம் எல்லாம் நல்லபடியாக முடிந்து திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு செல்ல பேருந்தில் ஏறினோம், வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்தில் அழ ஆரமித்தவன் தான் ரொம்ப நேரம் அழுது கொண்டே வந்தான், எவ்வளவு சமாதானம் செய்தாலும் அவன் அழுகையை நிறுத்தவேவில்லை. பேருந்தின் உள்ளே இருந்தவர்கள் எல்லாம் எங்களையே பார்த்து கொண்டு இருந்தார்கள், பேருந்தில் கடைசில் இருக்கையில் இருந்த ஒரு வயதான பெரியம்மா குழந்தைக்கு உரம் விழுந்து இருக்கு என்று சொல்லி அவன் உடம்பெல்லாம் நீவி விட்டார். இருந்தும் அவன் அழுகை நிறுத்தவே இல்லை, வண்டி செங்கல்பட்டு தாண்டி சிங்கபெருமாள் கோயில் வந்தபோது லக்கேஜ் எல்லாம் எடுத்து கொண்டு ஆஸ்பிட்டல்  செல்ல இறங்கிட்டோம். பேருந்தில் இருந்த எல்லோரும் எங்களை பாவமாக பார்த்து கொண்டு இருந்தார்கள். இந்த நேரத்தில் ஜூனியரின் அழுகை ஒய்ந்து இருந்தது என்றாலும் சின்னதாக ஒரு விசும்பல் மட்டும் வந்து கொண்டு இருந்தது.  அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காண்பித்தோம். அவர் அவன் உடம்பில் கை வைத்து பார்த்த போது பொக்கை வாய் மலர சிரிக்கிறான்!!!! எனக்கு அடக்க முடியாத கோவம் ஒரு பக்கம் இவன் சிரிப்பை பார்த்து சந்தோஷம்  ஒரு பக்கம்.  டாக்டரும் எங்களுடன் சேர்ந்து சிரித்தார்... தனக்கு இது தான் என்று சொல்ல தெரியாத இந்த வயதில் அவனை கஷ்டபடுத்தி நாங்களுக்கு கஷ்டப்பட விரும்பவில்லை. இந்த ஒரு சம்பவத்துக்கு பிறகு வெளியூர் என்றால் ஒன்று கரூர் அல்லது கோவை என்று எங்கள் எல்லையை நாங்களே முடிவு செய்துவிட்டோம்.  

திங்கள் காலை கரூர் வந்தவுடன் தெரிந்த முதல் செய்தி காலை 6 முதல் 9 மணி வரை மின்வெட்டு. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைத்த எனது நினைப்பில் விழுந்தது வெட்டு. காலை 8 மணிக்கே வியர்வையால் உடல்   நனைத்தது. நேரம் ஏற ஏற வெயில் உச்சம் அதிகமாகி கொண்டு இருந்தது, ரோட்டில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டு இருந்தது. வீட்டில் இருக்க பிடிக்காமல் கடைவீதி செல்ல கிளம்பினோம். ஜவகர் பஜார் முழுக்க கடைகள் நிரம்பி இருந்தது, வீட்டுக்கு முன்னால், கடைகளுக்கு முன்னால் ஒரு சிறு வியாபாரி திருவிழாகான ஸ்பெஷல் தற்காலிக கடை விரித்து இருந்தார்.  இவ்வாறு வீடு , கடைகளுக்கு முன்னால் இருக்கும் தற்காலிக கடைகளுக்கு அந்த கடை அல்லது விட்டின் முதலாளி இவர்களிடம்  வாடகையை வசூலித்து கொள்கிறார். மின்சாரம் வேண்டும் என்றாலும் அவர்களே தருகிறார்கள் அதற்கு தனி கட்டணம். பிளாஸ்டிக் சாமான்கள், பீங்கா பொருட்கள், வீட்டுக்கு தேவையான சின்ன சின்ன பொருட்கள், விளையாட்டு பொருட்கள்,  ஒரு இடத்தில உலக்கை!!! விற்றுக்கொண்டு இருந்தார்கள்.  சாலை ஓரத்தில் எங்கும் ப்ளெக்ஸ் போர்டுகள் இளைய தளபதி , புரட்சி தளபதி, சின்ன தளபதி அட ஷக்திக்கு கூட ஒரு ரசிகர் மன்றம் இருக்கு , எல்லோரும் சொல்லி வைத்தது போல மாரியம்மன் பண்டிகைக்கு வரவேற்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த அந்த ரசிகர்மன்ற தலைவருக்கு வயது இருபத்தைந்து கூட இருக்காது. சிலர் இப்போது தான் ஒட்டு போட்டு இருப்பார்கள் ஒரு இடத்தில பக்தகோடிகளை வரவேற்றது  ப்ளே பாய்ஸ் குழுவினர் :)))  . 

கேமராவில் கிளிக்கிய பல படங்கள்  :-). 






ஜூனியருக்கு ஒரு விளையாட்டு சாமான் வாங்கி குடுத்தேன், வீட்டுக்கு வந்து சேர்ந்த ஐந்தாவது நிமிடம் பட் என்று ஒரு சத்தம் கேட்டது அந்த சாமான் இரண்டு பாகமாக இருந்தது :(. உடைத்ததில் அவனுக்கு அவ்வளவு சந்தோசம், எனது துக்கத்தை மறந்து நானும் அவனுடன் சிரித்தேன்.  சாயந்திரம்  ஆற்றுக்கு  போகலாம் என்று கிளம்பினோம், இங்கே ஆறு என்று சொல்லப்படுவது அமராவதி ஆற்றை,  எனக்கு தெரிந்து பலகாலம் அங்கு தண்ணீர் இருந்தது இல்லை. பாலைவனத்தில் ஏதோ கொஞ்சம் தண்ணி இருப்பதை போல ஆங் ஆங்கே சிறு சிறு குட்டை இருக்கும் அதும் அந்த தண்ணீர் இன்ன கலர்  என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு கலரில் இருக்கும். நிறைய மக்கள் காலைக்கடனை முடிப்பதற்கு இங்கே தான் வருவார்கள். இங்கு இருந்து தான் மாரியம்மன் கோவில் கம்பம் எடுத்து செல்வார்கள் அதனால் எல்லா நேர்த்திகடனும் இங்கே இருந்து தான் ஆரம்பம் ஆகும், தீ சட்டி ஏந்துதல், கரும்பு தொட்டில் தூக்குதல், அங்கப்ரத்சணம் செய்தல், அழகு குத்தி வருதல், குழந்தைக்கு கரும்புள்ளி குத்தி அழைத்து வருதல் என்று அவர்கள் வேண்டுதல் ஆரமிக்கும் இடம். 


ஆற்றின்(?) கரையோரம் நிறைய இடம் காலியாக இருந்ததால் அங்கேயே சாகச விளையாட்டுகள் அமைந்து இருந்தது, எதிலாவது ஏறலாம் என்று நினைத்து இருந்த வேளையில் ஜூனியர் எனது தோலில் சாய்ந்து அப்படியே தூங்கிவிட்டான். கொஞ்ச நேரம் சுற்றி பார்த்துவிட்டு அங்கு இருந்து கிளம்பினோம். இரண்டு இளைஞர்கள் பச்சை கலர் சுடிதார் பெண்ணை கூட்டத்தில் தொலைத்து விட்டு அவளை தேடி கொண்டு இருந்தார்கள். சிரித்து கொண்டே அங்கு இருந்து நகர்தேன். கையில் ஒரு வித ஒலிப்பான் ஒன்றை வைத்து கொண்டு ஒரு கும்பல் எங்களை கடந்து சென்றது. 

கரூர் டெக்ஸ்டைல்க்கு பிரபலமான ஒரு ஊர், அங்கு அட்டையினால் செய்யப்பட்ட நூல் கோன்கள் எல்லா இடத்திலும் கிடைக்கும். இந்த நூல் கோன்களை வைத்து சிலர் காசு பார்த்து கொண்டு இருந்தார்கள். நான் மேலே சொன்ன ஒலிப்பான் என்கிற கருவி இதில் செய்வதுதான்,



ஒரு நூல் கோன், ஒரு பலூன், ஒரு சிறிய பிளாஸ்டிகால் ஊதும் வசதி கொண்ட ஒரு பொருள் மற்றும் சில ஜிகினா பேப்பர்கள். அதை ஊதும் போது எழும் சத்தம் என்பது கழுதை அடிவயிற்றில் இருந்து கத்துவது போல இருக்கும். அவ்வளவு கர்ண கொடூரமான ஒலியை இது வரை நான் கேட்டது இல்லை :(. சிலர் அதை பெண்கள் காது அருகில் சென்று ஊதி அவர்களை ஓட செய்தார்கள். தாவணி போட்ட பெண்கள் அதிகமாக பார்த்தது இன்னும் அந்த உடைக்கு இருக்கும் மதிப்பு குறையவில்லை என்று நினைக்க தோன்றியது.  வீட்டுக்கு வந்து பிறகு தான் நியாபகம் வந்தது, கரும்பு வாங்க வேண்டும் என்று. திரும்ப மகாவை அழைத்து கொண்டு கரும்பு வாங்க சென்றேன், ஆறு கரும்பு கொண்ட ஒரு கட்டு 70 ரூபாய்க்கு வாங்கினேன். நாளை கரும்பு தொட்டில் தூக்கிய பிறகு இந்த கரும்புக்கு வேலையில்லை என்பதால் பாதி விலைக்கு நீங்களே எடுத்துகோங்க என்று கடைக்காரரிடம் பேரம் பேசினேன். எனது பின் மண்டையில் ஒரு அடி விழுந்தது சுற்றி இருக்கும் ஆட்களை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் மகாவின் கைகரியம் அது !!! மானத்தை வாங்கதீங்க என்று அட்வைஸ் வேறு. கடைக்காரன் என்னை பார்த்து சிரித்தான், நானும் சிரித்து வைத்தேன்.. வாழ்கையில் இது எல்லாம் சகஜம் பா ..................................






--
With Love
அருண் மொழித்தேவன் @ Romeo ;)