Thursday, July 18, 2013

சங்கதிகள் 18/07/2013

தென்மேற்கு பருவ மழை கேரளாவில்  தீவிரம் காட்ட இங்கே கோவையில் சீதோஷண நிலை நிறையவே மாறி இருக்கிறது.  ஒரு மாதத்துக்கு முன்னர் வரை வெயிலில் காய்ந்து கிடந்த பூமி இப்போ சிலு சிலுன்னு வீசும் காற்றுக்கு அடிமையாகி கிடக்கிறது. சென்ற வருடம் பொய்த்து போன இந்த மழை வட்டியும் முதலுமாக இந்த வருட குளிர் காலத்தின் முதல் நாளில் இருந்தே நல்லதொரு மாற்றத்தை தந்து இருக்கிறது. எப்பொழுது மழை வரும் என்றே தெரியவில்லை. 

###################################################################

கேரளாவில் பெய்யும் மழையை பற்றி பேசும் போது இங்கே கோவையில் இருக்கும் மலையாளிகளை பற்றி பேசாமல் இருக்க முடியாது. எங்கே சென்றாலும் மலையாளிகள் கடைகளை பார்க்க முடிகிறது. டீ கடையில் சேட்டா ஒரு டீ என்று யாரது ஒருவர் சொல்வதை கேட்கலாம். மலையாளிகள் என்றாலே டீ கடை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும் ஆனால் இப்போது இவர்கள் கை வைக்காத தொழிலே இல்லை என்கிற அளவுக்கு எல்லா துறையிலும் இருக்கிறார்கள். சென்ற வாரம் உறவினர் ஒருவரை பார்க்க KMCH மருத்துவமனைக்கு சென்று இருந்தேன். எங்கே பார்த்தாலும்  மலையாளிகள்தான் நர்ஸ் டாக்டர் என்று கும்பல் கும்பலாக இருக்கிறார்கள். கேரளாவில் இருந்தும் பொருட்களை இறக்குமதி செய்கிறார்களோ இல்லையோ வருடம் முழுக்க செவிலியர்களை இறக்குமதி செய்து கொண்டே இருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் பீர்மேடு பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வாழ்த்து கொண்டு இருப்பதால் அந்த பகுதியை தமிழ்நாட்டில் இணைக்க வலியுறுத்தி வருகிறார்கள். ஒருவேளை அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் மலையாளிகள் அதிகம் வாழும் கோயம்புத்தூர் பகுதியை கேரளாவுடன் இணைக்க சொல்லி அவர்கள் போராட்டம் நடத்தினாலும் நடத்துவார்கள். 

###################################################################
லையாளிகளை பற்றி பேசும் போது மலையாள படங்களை பற்றியும் கண்டிப்பாக பேச வேண்டும். இணையத்தில் இப்போதெல்லாம் மலையாள படங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். எனக்கு முதலில் இருந்தே மலையாள படங்களை பார்ப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். ஹிந்தி படங்களை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது போல மலையாள படங்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. இணையத்தில் சில படங்களை பற்றி ஆஹா ஓஹோ என்று எழுதிய பதிவுகளை படித்ததும் லேசாக சபலம் தட்டியது. அப்படி என்ன தான் இருக்கு அதில் என்று முதல் முதலில் ஆமென்  அடுத்தது 22 பீமெல் கோட்டயம் அடுத்தது ஷட்டர். கடந்த ஒருவாரத்தில் இந்த முன்று படங்களையும் பார்த்து முடித்துவிட்டேன். ஆங்கில படங்களை எளிதாக புரிந்து கொள்ள Subtitle இருப்பதை போல மலையாள படங்களில் இருந்தால் நன்றாக இருக்கும். பல இடங்களில் காட்சிகளை வைத்தே  கதையை யூகித்து கொண்டு செல்ல வேண்டியதாக இருக்கிறது. மற்றபடி இந்த முன்று படங்களில் கதை களம் எல்லாம் வேறு முன்றுமே அட்டகாசம். அதிலும் 22 பீமெல் கோட்டயம் சான்சே இல்லை. ஆமென் படத்தின் கடைசி பாடல் காட்சி என்ன மியூசிக்டா எழுந்து நடனம் ஆடவேண்டும் போல இருந்தது. ஷட்டர் நல்லதொரு திரில்லர். இந்த படங்களை பார்ப்பதற்காவது மலையாளத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

###################################################################

லையாள படங்களுக்கு நடுவில் சில ஹாலிவுட் படங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. Olympus has fallen, Killer Joe, The Employer Dead Man Down போன்ற படங்களை பார்க்க முடிந்தது. இதில் ஈ அடிச்சான் காப்பி லிஸ்ட்டில் The Employer படத்தை கொண்டு வரலாம். 

Exam 


2009யில் வந்த ஆங்கில உளவியல்ரீதியான படம். காலியாக இருக்கும் ஒரு வேலையை நிரப்ப கடைசி கட்ட ரவுண்டில் 8 பேர் போட்டி போடுகிறார்கள். அவர்களை ஒரு ரூமில் விட்டுவிட்டு ஒரே ஒரு பேப்பர் மட்டும் கொடுத்துவிட்டு கேள்வியை கண்டு பிடித்து பதில் எழுத வேண்டும். அவர்களின் ரூல்ஸ் உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்களை தவிர வேறு யாரையும் தொடர்பு கொள்ள கூடாது. பேப்பரை வீணாக்க கூடாது மற்றும் அந்த அறையை விட்டு செல்ல கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் நீங்கள் தகுதி இழப்பு செய்யபடுவீர்கள். போர் அடிக்காத அளவுக்கு படம் நல்ல விறுவிறுப்பாக செல்லும். இந்த Exam படத்தை 12 Angry Man உல்டா என்னலாம். 


இப்படியான உல்டா வகை படம் தான் The Employer. 
Exam படம் போலவே தான் இந்த படமும். கம்பெனியில் இருக்கும் ஒரு காலி இடத்துக்கு நடக்கும் கடைசி கட்ட ரவுண்டுக்கு 5 பேர் தேர்வாகிறார்கள். ஒரு நாள் அவர்கள் ஐந்து பேரும் மயக்க நிலையில் ஒரு ரூமில் அடைத்து வைக்க பட்டு இருக்கிறார்கள். முதல் நாள் இரவு யாரோ அவர்களை தாக்கியது எல்லோருக்கும் நினைவில் இருக்கிறது. ஒவ்வொருவராக தங்களை அறிமுகபடுத்தி கொண்ட சமயத்தில் தான் அனைவரும் அந்த ஒரு வேலைக்கு போட்டி போட்டு கொண்டு இருப்பவர்கள் என்கிற உண்மை தெரிகிறது. அங்கே கிடைக்கும் ஒரு போனில் அந்த கம்பெனி முதலாளி பேசுகிறான். அந்த ரூமின் கதவு நான்கு பூட்டுகள் போடப்பட்டுள்ளது. ஒருவர் இறந்தால் தான் ஒரு பூட்டின் கோடு கிடைக்கும் அதன்படி ஐவரில் 4 பேர் இறக்க வேண்டும் கடைசியாக இருக்கும் ஒருவருக்கு வேலை நிச்சயம்.  நால்வரை கொன்று யார் கடைசியில் அந்த வேலைக்கு சென்றார்கள் என்பது தான் கிளைமாக்ஸ். ரொம்ப விறுவிறுப்பு என்று சொல்ல முடியாது. நிறையவே லாஜிக் உள்ள ஓட்டை படம். டைம் பாஸ் ஆகா பார்க்கலாம். 

###################################################################
ற்கொலை அல்லது கொலை  செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். ரொம்பவே விரக்தி அடைந்தவர்கள் தான் தற்கொலை கொலை செய்து கொள்வார்கள் அப்படியா காலகட்டம் என்றோ இருந்து இருக்கிறது இன்றோ சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது கொலை செய்து விடுகிறார்கள். நான்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் செய்தி தாளில் படித்தது. மொபைல் போன் வாங்கி தரவில்லை என்கிற காரணத்தால் பத்தாவது படிக்கும் பெண்ணொருத்தி தற்கொலை செய்து கொண்டாள். நேற்றைய நாளிததில் மனைவி 50 தேங்காயை திருடிவிட்டாள் என்பதற்காக கணவன் அவளை கொலை செய்துவிட்டார். மொபைல் போன் மற்றும் 50 தேங்காயின் விலை தான் ஒரு மனித உயிரின் விலை !!! 

###################################################################
சென்னையில் நீங்கள் காலி மனைகளை வாங்குவதென்பது எல்லாம்  கண்டிப்பாக நினைத்து பார்க்க முடியாது. சென்னையை தாண்டி செங்கல்பட்டுக்கு வெகு அருகில் திண்டிவனத்துக்கு பக்கத்தில் தான் காலி மனைகளை வாங்க முடியும். ஆனால் இங்கே கோவையில் ரியல் எஸ்டேட் கொடிகட்டி பறக்கிறது, நாளை உங்கள் சந்ததிக்காக மண்ணில் முதலீடு செய்ய ஆசைபட்டால் கோவையை மறக்காமல் தேர்ந்தெடுங்கள். ஆறு மாதத்துக்கு முன்னர் வரை கோவை அழிவு பாதையில் சென்று கொண்டு இருந்ததை எல்லோருமே அறிவார்கள். மின்வெட்டால் பட்ட அவஸ்தைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை எல்லா தொழிலும் பாதிப்புக்குள்ளானது. கோவை என்பது தொழில் நகரம் இங்கே குடிசை தொழில் போல லேத் பட்டறைகள் அதிகம். இவர்களால் குறித்த நேரத்துக்கு எந்த ஆர்டரையும் செய்து முடிக்க முடியாமல் ரொம்பவே அவஸ்தை பட்டுவிட்டார்கள். இப்போ இரண்டு மாதமாக இந்த தொல்லை இல்லாமல் இருக்கிறோம். அந்த மாதிரி கொடுமையான காலகட்டத்தில் கூட இங்கே கம்பீரமாக நின்றது ரியல் எஸ்டேட் தொழில்தான். இரண்டு வருடங்களுக்கு முன்  நாங்கள்  ஒரு அத்துவான காட்டில் வாங்கி போட்ட இடத்தின் மதிப்பு இப்போது இருமடங்கு ஆகிவிட்டது.  லோக்கல் சேனல்களில் 24 மணி நேரமும் ரியல் எஸ்டேட் பற்றிய செய்திகள் தான் ஓடி கொண்டு இருக்கிறது. உங்களுக்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆசை இருந்தால் மறக்காமல் கோவையை தேர்ந்தெடுங்கள். முதலீடு பல மடங்கு உயர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.  

-- With Love
Romeo ;)


1 comment:

  1. சங்கதிகள் சொல்லும் சேதி நல்லாருக்கு ...! ஒன்றிலிருந்து மற்றொன்றை தொட்டுச்சென்றதும் ....!

    கடந்த பத்து வருடமாக கோவையில் இருக்கிறேன் .... நிலம் வாங்கும் எண்ணமே வரவில்லை ... கிராமத்தில் இருக்கும் ஐந்து சென்ட் நிலமே போதுமென்றே தோன்றுகின்றது ...

    தேவைக்கதிகமாக வாங்கும் நிலம் கூட நில அபகரிப்புத்தான் என்பது என் எண்ணம் ...

    ReplyDelete