Friday, March 4, 2011

நிழல்முற்றம் - பெருமாள் முருகன்

வாழ்கையில் ஒரே ஒரு முறைதான் சினிமா கொட்டாய்க்கு சென்றுள்ளேன். எனது உறவினர் திருமணத்துக்கு சென்றபோது சித்தப்பா கொட்டாய்க்கு அழைத்து சென்றார். அப்போது மன்னன் படம் திரையிட்டு இருந்தார்கள், படம் ஆரமித்து ஒரு மணிநேரம் கழித்து தான் சென்றோம். இடைவேளை சமயம் வெளியே ஒருவர் சில நொறுக்கு தீனிகளை விற்றுக்கொண்டு இருந்தார். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் டிக்கெட் குடுத்தவரும் அவரே. உள்ளே தரை டிக்கெட்டில் ஒரு சிறுவன் பாட்டிலில் அடைத்து வைத்து இருந்த கலர் சோடாவை கலர் கலர் கத்திக்கொண்டே மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து கொண்டு இருந்தான். நான் அவனை நன்றாக பார்த்தேன் வயது கண்டிப்பாக பத்துக்கு கீழே தான் இருக்கும் கழுத்தில் தொங்கிய பாட்டில் அடைக்கும் பெட்டியை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு இருந்தான். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இது நடந்து கிட்டதட்ட பதினைந்து வருடங்கள் ஆகிருக்கும். இப்போது அந்த கொட்டாய் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.  
 
புதினங்களை படிக்கும் போது நானும் அதில் ஒரு கதாபாத்திரமாக சுழன்று வருகிறேன். பெருமாள் முருகனின் நிழல் முற்றம் படிக்கும் போது சினிமா கொட்டாயில்  நானும் சோடா விற்கும் சராசரி ஊழியனாக ட்ரிங் ட்ரிங் என்று பாட்டில்களை ஓப்பனர் மூலம் உரசி ஒலி எழுப்பி மற்றவர்களின் கவனத்தை கவர நினைக்கிறேன்.  

ஒரு கதையின் பின்புலம் என்பது ஆசிரியரின் மனநிலையை பொறுத்தே அமைகிறது. சிலர் அதனை விட்டு எங்கும் செல்லாமல் உள்ளுக்குளே சுற்றி சுற்றி வந்து கதை சொல்லுவதில் வல்லவர்களாக இருகிறார்கள்.சிலர் பாதிக்கும் மேல் அதில் இருந்து வெளிவந்து வேறு ஒரு தலத்தில் கதையை நகர்த்தி கொண்டு செல்கிறார்கள். பெருமாள் முருகன் ஒரு சினிமா கொட்டாயை பின்புலமாக வைத்து அதில் வாழ்ந்த சில மனிதர்களின் வாழ்கையை பதிவு செய்து உள்ளார். 



சக்தி, நடேசன், பூதன், சோடா கம்பெனி முதலாளி, தியேட்டர் மேனேஜர், வாட்ச்மென் கிழவன், படத்தை தூக்கிக்கொண்டு அலையும் நபர், பாலியல் தொழிலாளி, பீடா கடைக்காரன், குஷ்டரோகி கிழவன் என்று சிலரை நம் கண்முன் நிழல் ஆட வைத்து இருக்கிறார் ஆசிரியர். 

யாருக்கும் அங்கு உறவு இல்லை. எல்லோரும் எங்கு இருந்தோ வந்து சேர்ந்து சொற்ப சம்பளத்துக்கு வேலைசெய்து கொண்டு இருகிறார்கள், இருந்த உறவை எல்லாம் விட்டொழிந்து ஆசையாக வேலை செய்கிறார்கள். கிடைக்கும் காசில் இரண்டு வேளை உணவு என்பதே சில நாட்களில் பெரிய விஷயமாகிறது. சோடா கடை முதலாளியின் சுயருபம் வேலை வாங்கும் போது தெரிகிறது.  

நாவலில் நிழலாடும் கதாபாத்திரங்கள் எல்லாம் விளம்பு நிலை மனிதர்களாக தான் இருகிறார்கள். என்ன தான் சோடா கடை முதலாளி என்றாலும் அவனும் பிச்சைகாரன் போலவே நடந்துகொள்கிறான். சக்தி திருடி கொண்டு வரும் செருப்பை கூட ஐந்து ரூபாய்க்கு வாங்கி கொள்கிறான். 

நாவலில் சக்தியை சுற்றியே அனைத்து கதாபாத்திரங்களும் வருகிறது. கஞ்சா குடிக்கும் போதும் சரி, திருட்டு செயலில் ஈடுபடும் போதும் சரி சக்தி அதில் ஒருவனாக இருக்கிறான். சக்தி தனது வயதையும் மீறி பாலியல் பெண்ணிடம் தனது ஆசையை நிறைவேற்றி கொள்ள ஆசைப்படுகிறான், காலில் இன்னும் முடியே வரவில்லை அதற்குள் உனக்கு ஏன் இந்த ஆசை என்று அந்த பெண் சொல்லிவிட்டு நகர தனது காலில் முடி வளந்து இருக்கிறதா என்று அப்போது பார்க்கிறான். இந்த இடத்தில கொஞ்சம் தடுமாறி தான் போனேன். மற்றவர்கள் சொல்லும் போதுதான் அது நம்மிடம் இருகிறதா என்று தேடி பார்ப்போம் அது இயல்பே. அந்த இயல்பை இயல்பாக சேர்க்க வேண்டிய இடத்தில சேர்த்தது ஆசிரியரின் கைவண்ணம். 

பெருமாள் முருகன் , சரவணா குமார் எழுதிய நிழல் முற்றம் - பெருமாள் முருகன் இந்த பதிவை படித்த பிறகு பெருமாள் முருகன் அவர்களின் படைப்புகள் வாசிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன். அதே போல கிருஷ்ணபிரபுவின் பீ கதைகள் என்கிற இந்த பதிவும் அவரின் எழுத்துகளை கண்டிப்பாக படிக்கவேண்டும் என்கிற ஊந்துதலை ஏற்படுத்தியது. 


பெருமாள் முருகன் அவர்களின் புதினங்களில்  முதல் முதலாக நிழல் முற்றத்தில் இருந்து ஆரமித்துள்ளேன். இந்த நாவலின் கையாண்டு இருக்கும் வார்த்தைகள் எல்லாம் தேமே என்று வந்தோம் போனோம் என்று இல்லை. கெட்ட வார்த்தைகளை அனாயசிமாக கையாண்டு இருக்கிறார்.ரெண்டாம் அத்தியாயத்தின் முடிவில் சக்தி பூதனை பார்த்து சொல்லும் வார்த்தையை ஒரு புதினத்தில் முதல் முதலாக படிக்கிறேன். கொஞ்சம் அதிர்ச்சியை தந்தது, உள்ளே செல்ல செல்ல சென்சார் இல்லாத படமாக உள்ளது.

நாவலின் ஒரே ஒரு குறை உண்டு, அது எந்த ஒரு அத்தியாயமும் முடிவே இல்லாத முடிவுடன் முடிகிறது. ஏன் எதற்கு என்று யோசிக்கும் முன்னரே அடுத்த அத்தியாயத்திற்க்கு சென்றுவிடுகிறார். முதல் இரண்டு அத்தியாயங்கள் அப்படி செல்லும் போது ஏற்படும் ஏமாற்றம் அடுத்த அடுத்த அத்தியாயங்களை கடக்கும் போது வருவது இல்லை. 



நிழல்முற்றம் - பெருமாள் முருகன்
காலச்சுவடு பதிப்பகம்






--
With Love
Romeo ;)

5 comments:

  1. சிறப்பான விமர்சனம் ரோமியோ. நீங்கள் வாசித்த நூல்களைப் பற்றிய உங்கள் பார்வையை தொடர்ந்து பகிருங்கள்.

    //நாவலின் ஒரே ஒரு குறை உண்டு, அது எந்த ஒரு அத்தியாயமும் முடிவே இல்லாத முடிவுடன் முடிகிறது. ஏன் எதற்கு என்று யோசிக்கும் முன்னரே அடுத்த அத்தியாயத்திற்க்கு சென்றுவிடுகிறார். //

    அது மிக நல்லதொரு இலக்கிய உத்தி நண்பா. மீண்டுமொருமுறை வாசித்துப் பாருங்களேன், ஆசிரியரின் அபாரமான எழுத்தாளுமையை உணர்வீர்கள்.

    பகிர்வுக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  2. உங்கள் கடந்த கால அனுபவங்களையும், இப்போதைய வாசிப்பு அனுபவத்தையும் சரியாக ஒரே கோட்டில் இணைத்து, புதுமையான புத்தக விமர்சனம் தந்து இருக்கீங்க... பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. புதினங்களை படிக்கும் போது நானும் அதில் ஒரு கதாபாத்திரமாக சுழன்று வருகிறேன்.


    .....

    பார்த்துங்க... சந்திரமுகி கதை ஞாபகம் இருக்குங்களா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

    ReplyDelete
  4. மிகச் சிறப்பான விமர்சனம் ரோமியோ

    ReplyDelete