Thursday, June 16, 2011

சங்கதிகள் - ஜூன் 16 2011

புத்தகம் 
    
இந்த மாதிரி வெறித்தனமாக புத்தகம் படித்து எவ்வளவு நாள் ஆச்சு. கோபல்ல கிராமம் முடித்த கையேடு கோபல்லபுரத்து மக்கள் அடுத்து அந்தமான் நாயக்கர்  அடுத்து சொக்கன் எழுதிய அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் தொடர்ந்து நான்கு புத்தகங்களை படித்து முடித்தேன்.

முதல் முன்று புத்தகங்கள் உள்ள ஒற்றுமை நான்காவதில் இல்லை என்றாலும் அந்தமான் நாயக்கர் வாழ்ந்த இடம் எப்படி இருக்கும் என்கிற ஆவலை தூண்டிவிட்டார் கி.ரா. ஒரே சமயத்தில் ஒரு புத்தகம் படிப்பது எல்லாம் இல்லை, கொஞ்சம் இந்த புத்தகம் கொஞ்சம் அந்த புத்தகம் என்று மாத்தி மாத்தி படிக்கும் ஆசாமி நான் . அப்படி இருந்த என்னை ஒரே வாரத்தில் நான்கு புத்தகங்களை படிக்க தூண்டியது கி.ராவின் எழுத்து. ஆங்கிலேயன் வந்த போது, வந்த பிறகு, போன பிறகு என்று நாவல் சென்ற இடம் அட்டகாசம். கோபல்ல கிராமம் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதிய வரை ஏதோ அவ்வளவாக திருப்தி அடையவில்லை. மீள் வாசிப்பு செய்து பதிவை மாற்றி எழுதவேண்டும். 

அமெரிக்க வியட்நாம் மீது தொடுத்த போர் பற்றி தமிழில் வெளிவந்து இருக்கும் புத்தகம் ஏதாவது உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் தெரியபடுத்தவும்.






அரசியல்

திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றது ஒரு செய்தி அளவில் தான் இருக்கு. தேர்தலில் தோல்வியுற்ற திமுக வேட்பாளரும் முன்னாள் மீன்வள துறை அமைச்சர் சாமி மற்றும் அவர் ஆதரவாளர்கள் பற்றி தான் இன்னும் டெரர் பேச்சு குறையவே இல்லை. 2001 அன்று நடைபெற்ற தேர்தலில் இவர் வெற்றிபெற்ற தொகுதிக்கு உட்பட்ட கேவிகே குப்பத்தை சார்ந்தவர்கள் இவருக்கு வாக்கு அளிக்கவில்லை என்பதால் அங்கே நடந்த அடிதடியில் ஆண்கள் பெண்கள் என்று ஏரியாவை காலிசெய்து கொண்டு ஓடியவர்கள் அதிகம் பேர். அப்பவே இது  பெரிய பிரச்சனை ஆகி அப்போதைய அமைச்சர் சாமி மற்றும் பலர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு கேஸ் கோர்ட்டு வரை சென்றது. அந்த கேஸ் இன்னும் இழுவையில் இருக்கு. இப்போ நடந்த தேர்தலில் சாமி தோற்றதும் அவர் ஆதரவாளர்கள் அந்த குப்பத்து ஆட்களிடம் பிரச்சனை செய்து அது கைகலப்பு வரை போயிடுச்சு. நிலைமை விபரிதம் ஆனதை தொடர்ந்து அந்த ஏரியா முழுக்க இப்போது போலீஸ் பந்தோபஸ்து போட்டு இருக்காங்க. 

சரி இந்த கேவிகே குப்பம் எங்க இருக்குன்னு தெரியுமா?? சாமி வீட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் !!!! 


படம் 

X-Men FirstClass முந்தைய நான்கு X-Men படங்களை காட்டிலும் ரொம்ப புதுமையா அதே சமயம் டெக்னிகளாக செம மிரட்டு மிரட்டி இருக்காங்க. முதல் நான்கு படங்களில் வந்த Hugh Jackman இதில் ஒரே ஒரே சீன் மட்டும் வந்து போறார். படத்துல நடிச்சவங்க எல்லோரும் இந்த அஞ்சாவது சீரிஸ் படத்துக்கு புதுசா இருக்காங்க என்பதால் படம் ரொம்ப வித்தியாசமா இருக்கு. மியூசிக் படத்துக்கு மிக பெரிய பலம், டென்ஷனை எகிற வைக்கிறது. மிஸ் பண்ணாம பார்த்துடுங்க. 






ஆரண்ய காண்டம் இன்னைக்கு பார்க்கலாம்ன்னு எங்க ஏரியால இருக்கும் ஸ்ரீனிவாசா தியேட்டருக்கு போனேன். வெளிய கூட்டமே இல்ல. சரி தியேட்டர் பக்கத்துல இருந்த ஒரு பெட்டி கடை கிட்ட வண்டியை நிப்பாட்டி தியேட்டர் உள்ள பார்த்தா செம கடுப்பாச்சு. காமேஸ்வரி என்கிற அதிபயங்கர படம் போட்டு இருக்கான். நம்ம உதா அண்ணன் பேரு எதாவது ஓரத்தில் இருக்கான்னு பார்த்தேன் பச் ஜஸ்ட் மிஸ்.இது என்னடா அதுக்குள்ள படத்தை தூக்கிடானேன்னு யோசிச்சிட்டே வீட்டுக்கு வந்தேன். அப்போ தான் நினைவுக்கு வந்துச்சு வேங்கை. இந்த தியேட்டர் சன் டிவிகாரங்க குத்தகை எடுத்து இருக்காங்கன்னு நினைக்கிறேன்   இவங்களோட எல்லா படமும் இங்கேயும் ரிலீஸ் பண்ணுவாங்க. வேங்கைகாக இப்பவே தியேட்டரை காலி பண்ணி வச்சி இருக்காங்கன்னு நினைக்கிறேன் !!!!





சோகம்

கொஞ்ச நாட்கள் இடைவேளையில் இரண்டு பேரின் மரணத்தை பார்க்கவேண்டி வந்தது. ஒருவர் எனக்கு அத்தை முறை மற்றொருவர் என் நண்பன் மோகன்ராஜ். 


மோகன் எப்பயும் ஜாலியா இருப்பான் அவன் கூட இருந்தா சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும் அந்த அளவுக்கு காமெடி பண்ணுவான். அதே சமயம் ஏதாவது சில சமயம் வம்புல  சிக்கவச்சிடுவான்.  எல்லோருக்கும் ஒரு பட்டபேரு வச்சி இருப்பான் எப்படியாவது சீமென் ஆகணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டான். ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் ஷேர் ஆட்டோ ஓட்டிட்டு இருந்தான் இப்போ கொஞ்ச நாளா ஒரு பிரைவேட் பாங்க்ல கலெக்ஷன் டிப்பார்ட்மெண்ட்ல வேலை செஞ்சிட்டு இருந்தான். போன சனிக்கிழமை கோவளம் பக்கத்துல ஒருத்தர்கிட்ட கலெக்ஷன் பண்ண போயிருக்கான். திரும்பி வீட்டுக்கு வரும் போது குடிச்சிட்டு வண்டி ஓட்டி ஒரு லாரியில் அடிபட்டு இறந்து போனான். வீட்டுக்கு மூத்த பிள்ளை அதனால தான் என்னவோ வீடு பத்தி எந்த ஒரு கவலையும் இல்லாம இருந்தான். ஒருவேளை அவனுக்கு கல்யாணம் ஆகியிருந்தா ???  



அத்தை நெஞ்சு வலிக்கிறது என்று மருத்துவமனை சென்றவர் ஒரு வாரத்தில் பரலோகம் போயிட்டார். சின்ன வயசுல இருந்தே புகையிலை போடும் பழக்கம் இருந்து இருக்கு அவங்களுக்கு உபயம் அவங்க அம்மா அப்பா. இதுல  கொடுமை அவங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்காங்க.இரண்டு பெண்களுக்காக ரொம்ப சிக்கனமாக செலவு செய்து அவர்களுக்குகாக பணத்தை  சேர்த்து வச்சிட்டு இருந்தாங்க. கருப்பு என்று சொல்லப்படும் அந்த பதினாறாவது நாளில் அத்தை பெண் ஒருத்தி இனி யாரை  மாமா நான் அம்மான்னு கூப்பிடுவேன்னு அழுதா என்ன சொல்லி அவள் மனச தேத்துறது தெரியாம நின்னுட்டு இருந்தேன்.

நாளைக்கே இதே நிலைமை எனக்கும் வரலாமே அப்போ நானும் இப்படிதான் இருப்பேனோ !!! 

ஒரு மரணத்துக்கு பிறகு பிறக்கும் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் உடனே கிடைப்பதில்லை !!!




--
With Love
அருண் மொழித்தேவன் ( Romeo) 

1 comment:

  1. நல்ல எழுதி இருக்கே ரோமியோ.. கடைசி செய்து கண் கலங்கவைத்து விட்டது...

    ReplyDelete